headlines

img

மேலும் ஒரு கருப்புச்சட்டம்

மேலும் ஒரு கருப்புச்சட்டம்

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நிறைவு பெறும் நாளில் இந்திய ஜனநாயகத்தை இருட்டில் தள்ளும் கருப்புச் சட்டத்திற்கான சட்டமுன் வரைவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் இந்த மசோதா நாடாளு மன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு விடப்பட்டி ருக்கிறது. 

பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் 30 நாட்கள் சிறைக் காவலில் வைக்கப்பட்டிருந்தால் 31 ஆவது நாள் அவர்கள் பதவி இழப்பதற்கு இந்த சட்ட முன்வரைவு வகை செய்கிறது. பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களையும் உள்ளடக் கித்தான் இந்த அரசியல் சட்ட திருத்த மசோ தாவை கொண்டு வந்திருப்பதாக ஒன்றிய ஆட்சி யாளர்கள் பம்மாத்து செய்தாலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறி வைத்தே இந்த மசோதா கொண்டு வரப்பட்டிருப்பது வெள்ளிடை மலை.

அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை உள்ளிட்ட ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் எந்த ளவுக்கு பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்ப தற்கு பல்வேறு உதாரணங்களை கூற முடியும். குறிப்பாக அமலாக்கத்துறை இதுவரை பிரதமர் மீதோ அல்லது ஒன்றிய அமைச்சர்கள் மீதோ எந்தவொரு குற்றச்சாட்டின் மீதும் விசாரணை நடத்தியதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒன்றிய ஆட்சியாளர்கள் கார்ப்பரேட் கூட்டாளிக ளுக்கு எதிராகக்கூட அமலாக்கத்துறை ஒரு புகாரை கூட விசாரணைக்கு எடுத்துக் கொண்டதில்லை. 

ஆனால் தில்லி, ஜார்க்கண்ட் முதல்வர்கள் உட்பட பல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அமை ச்சர்கள் மீது வழக்கு தொடுத்து கைது செய்துள்ளது. இந்த வழக்கில் தண்டனை பெற்றால் அவர்கள் பதவி இழக்க நேரிடும். ஆனால் பொய்ப் புகாரின் மீது கைது செய்து காலவரம்பின்றி நீதிமன்றக் காவ லில் வைக்கப்பட்டிருந்தால்கூட அவர்களது பத வியை பறிக்க இந்த மசோதா வழி செய்கிறது.

மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு இந்திய ஜன நாயக கட்டமைப்பை நிலைகுலையச் செய்யும் பல சட்டங்களை கொண்டு வந்துள்ளது. வேளாண் திருத்தச் சட்டம் துவங்கி, குடியுரிமை திருத்தச் சட்டம், குற்றவியல் திருத்தச் சட்டம்  என பாசிச குணாம்சம் கொண்ட சட்டங்களையே மோடி  அரசு கொண்டு வந்துள்ளது. 

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதற்கான மசோதா, பொது சிவில் சட்டத்திற்கான மசோதா, தொகுதி மறுவரையறை என பல ஆபத்தான ஆலோசனை கள் ஒன்றிய அரசின் வசம் உள்ளன. இந்த நிலை யில் ஜனநாயகத்தின் மீது மேலும் ஒரு கொடூரத் தாக்குதலாக இந்தச் சட்டம் கொண்டு வரப் படுகிறது.

இதே நாளில் கொண்டு வரப்பட்ட ஜம்மு- காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்களுக்கான மறு சீரமைப்பு மசோதா போன்றவையும் மாநில உரிமைகளின் மீது வீசப் படும் கட்டாரிகளே ஆகும். ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி  நிரலின் படி இந்தியாவை ஒரு எதேச்சதிகார நாடாக மாற்றுவதற்கான சட்டங்களே இவை. அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருசேர எதிர்த்து நிற்க வேண்டிய நேரமிது.