பெட்ரோல்- டீசல் மீதான கலால் வரி செவ்வாயன்று இரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக மோடி அரசு அறிவித்துள்ளது. பெட்ரோலுக்கு ரூ.10ம், டீசலுக்கு ரூ.13ம் உயர்த்தப்பட்டுள்ளது.
வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்காக இந்த நடவடிக்கை என்று சமாதானம் செய்கிறது மத்திய அரசு. இந்த விலை உயர்வால் சில்லரை விற்பனை விலை உயராது என்றும், இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் விளக்கம் அளிக்கப்படுகிறது.
இந்த வரி உயர்வினால் கிடைக்கும் வருவாய் உள்கட்டமைப்பு மற்றும் பிற செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.1 உயர்த்தினால் அரசிற்கு ரூ.14,500 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்றும் தற்போது ஊரடங்கின் காரணமாக எரிபொருள் தேவை கணிசமாக குறைந்துவிட்டதால் உரிய வருவாய் கிடைக்கவில்லை. அதை ஈடுகட்ட இந்த வரி உயர்வு செய்யப்படுகிறது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஊரடங்கு காலத்திலேயே ஏற்கெனவே ஒருமுறை மோடி அரசு கலால் வரியை உயர்த்தி யது. தற்போது மீண்டும் மிகக் கடுமை யாக உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப உள்நாட்டில் எரிபொருள் விலை தீர்மானிக்கப் படுவதாகவும் எப்பொழுதெல்லாம் விலை உயர் கிறதோ அப்போது உயரும் என்றும், குறையும் போது குறையும் என்றும் கூறப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்திக்கும் போதுகூட அதன் பலன் ஒருபோதும் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்ததில்லை. வரியை போட்டு விலை குறையாமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும். ஆனால் கச்சா எண்ணெய் விலை உயரும் போது உடனடியாக இங்கும் விலை உயர்த்தப்படும்.
தமிழக அரசு உட்பட பல்வேறு மாநில அரசுகள் மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி, பெட் ரோல்- டீசல் விலை உயர்வுக்கு வழிவகுத்தன. இதனால் சரக்கு போக்குவரத்திற்கான கட்டணம் உயரும். அத்தியாவசியப் பொருளின் விலை உயரும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. எனினும் மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு வரியை உயர்த்தின. இப்போது மத்திய அரசு தன்னுடைய பங்கிற்கு கலால் வரியை உயர்த்தி மக்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது.
ஊரடங்கினால் அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை விட மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பல மடங்கு அதிகம். இந்த நெருக்கடியான காலத்தில் காய்கறி, மளிகை மற்றும் அத்தியா வசியப் பொருள்களின் விலை உயர்ந்து வரு கிறது. சரக்கு கட்டணம் அதிகரிப்பதால் இது மேலும் உயரும்.
சாதாரண மக்கள் கொரோனா மற்றும் ஊரடங்கின் கொடிய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு வாழ்க்கையை மீண்டும் துவங்க போராடும் போது அதற்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். மாறாக தண்ணீருக்குள் பிடித்து அமுக்குவதாக அமைந்துவிடக் கூடாது.