headlines

img

அரங்கேறும் கல்விக் கட்டண கொள்ளை

பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் தமிழகஅரசு விதிமுறைகளின் படிதான் கல்விக்கட்டணம் வசூலிக்க வேண்டும்; கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஆனால் தமிழகத்தின் மாநகர பகுதிகளில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 80 சதவிகித சேர்க்கையை முடித்துவிட்டன. அதுவும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவிதமாக கட்டணக் கொள்ளையை அரங்கேற்றி வருகின்றன. விண்ணப்பக் கட்டணம் கூட ரூ.300 முதல் ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.அதனை அச்சிடுவதற்கு அதிக பட்சம் 15 முதல் 20ரூபாய் வரை செலவாகும். ஆனால் நூறு மடங்குலாபம் வைத்து விண்ணப்பப் படிவங்களை விற்பனைசெய்கின்றன.  12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த அடுத்த நாளே கல்லூரிகளில் சேர்க்கையைஉறுதிப் படுத்தாவிட்டால் படிக்கவே முடியாது என்பது போல் ஒரு தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் ஒரு விதஅழுத்தத்திற்குள்ளாகி கடன் வாங்கியாவது கட்டாய நன்கொடையையும், அபரிமிதமான கல்விக் கட்டணத்தையும் கட்டி விடுகின்றனர்.இது ஒவ்வொரு வருடமும் தொடர்கிறது.

இவையெல்லாம் அரசுக்கு நன்றாக தெரியும்.ஆனாலும் அரசு நிர்வாகம் பெயரளவில் சில அறிவிப்புகளை செய்து விட்டு தனியார் கல்லூரி நிர்வாகங்களின் கட்டணக் கொள்ளையை வேடிக்கை மட்டுமே பார்க்கின்றன. குறிப்பாக பெரும்பகுதி தனியார் கல்லூரிகள் அரசியல் பின்புலத்தோடு இயங்குபவர்களால் நடத்தப்படுகிறது. அதன் காரணமாகவே கட்டணக் கொள்ளைகளும் கண்டு கொள்ளப்படுவதில்லை. இதில் கொடுமை என்னவென்றால் பல்வேறுதனியார் கல்லூரிகளில் நடத்தப்படும் பாடப்பிரிவுகளுக்கு எவ்வித அங்கீகாரமும் இருப்பதில்லை. இதனை கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டியஅரசு நிர்வாகம் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. 

இந்திய அளவில் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன என்று இந்தாண்டு பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்து அதன்பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. இவற்றில்7 பல்கலைக்கழகங்கள் தலைநகர் தில்லியிலேயே இயங்கி வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதை விடக்கொடுமை வேறு இருக்க முடியுமா? போலியாகசெயல்பட்டு ஆயிரக்கணக்கான மாணவர்களை ஏமாற்றி வரும் இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா? ஏமாற்றும் மோசடிப்பேர்வழிகளை தண்டிக்க வேண்டாமா? அதற்குபதிலாக ஒவ்வொரு வருடமும் இது போன்ற பட்டியலை வெளியிடுவது மட்டும் தீர்வை தந்து விடுமா? இந்த நடவடிக்கை போதாது. உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பல்கலைக்கழகங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளை அரசே செய்துகொடுக்க வேண்டும். போலி பல்கலைக்கழகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட உரிய நடவடிக்கைஎடுத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.