headlines

img

விதை மீதான உரிமை யாருக்கு?

விதை மீதான உரிமை யாருக்கு?

இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயத் துறை ஏற்கெனவே பெரும் நெருக்கடி யில் சிக்கித் தவிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்ளும் துயரம் நெருக்கடியை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகின்றது. இத்தகைய இக்கட்டான சூழலில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள “விதை மசோதா 2025” வரைவு, விவசாயிகளின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

1966-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த விதைச் சட்டம், வர்த்தக ரீதியான விதைகளை மட்டுமே கட்டுப்படுத்தியது. விவசாயிகளின் பாரம்பரிய உரிமைகளிலும், அவர்கள் விதை களைப் பகிர்ந்து கொள்வதிலும் அந்தச் சட்டம் தலையிடவில்லை. ஆனால், புதிய மசோதா- 2025 முற்றிலும் மாறுபட்டது. இது ‘விதை’ என் பதை ஒரு சமூகச் சொத்தாகப் பார்க்காமல், கார்ப்பரேட் நிறுவனங்களின் விற்பனைப் ‘பண்ட மாக’ மட்டுமே பார்க்கிறது.

இந்த மசோதாவின் மிக ஆபத்தான அம்சம், விதைகளின் விலையை நிர்ணயிக்கும் அதிகா ரத்தை மறைமுகமாகப் பெருநிறுவனங்களிடம் ஒப்படைப்பதாகும். விவசாயிகள் தங்கள் விளைச்சலிலிருந்து விதைகளைச் சேமிப்பதும்,  சக விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்வதும் இந்தியாவின் பல்லாயிரம் ஆண்டு காலப் பண் பாடு. ஆனால், இனி அனைத்து விதைகளும் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை, பாரம்பரிய நாட்டு ரகங்களைச் சந்தையிலிருந்து அந்நியப்படுத்தும். அகற்றி விடும். விவசாயிகளின் கைகளில் இருந்து விதை உரிமையைப் பறித்தால், நமது உணவு இறை யாண்மையே ஆபத்தில் சிக்கும்.

வேளாண்மை என்பது மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு துறை. ஆனால், இந்த மசோதா அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அர சிடம் குவிப்பதோடு, மாநில அரசுகளின் உரிமை களை நீர்க்கச் செய்கிறது. மேலும், 2001-ஆம் ஆண்டின் தாவர ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவ சாயிகள் உரிமைச் சட்டம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள பாதுகாப்புகளை இந்த புதிய வரைவு சிதைக்கிறது. உயிரியல் பல்லுயிர் பாது காப்பு தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக ளுக்கும் இது முரணாக உள்ளது.

தரமற்ற விதைகளால் பயிர் விளைச்சல் பொய்த்துப் போகும்போது, கார்ப்பரேட் நிறுவ னங்களிடம் இழப்பீடு பெறுவது விவசாயி களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும். அந் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர அவர்கள் வெளிநாடுகளுக்கோ அல்லது தில்லிக்கோ அலைய முடியாது. பி.டி.பருத்தி போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளால் ஏற்கெனவே ஏற்பட்ட பொருளாதாரச் சரிவையும், விவசாயிகளின் தற் கொலைகளையும் நாடு மறக்கவில்லை.

விதை என்பது வெறும் வேளாண் இடு பொருள் அல்ல. அது நமது உணவின் உயிர் மூச்சு, உயிரியல் நினைவகம், பண்புக்கூறுகளின் மரபு, சூழலியல் அறிவு, நமது அடையாளம். அதைச் சில பெருநிறுவனங்களின் லாப வேட் டைக்குத் தாரை வார்ப்பது என்பது இந்தியா வின் எதிர்காலத்தையே அடகு வைப்பதற்குச் சமம்.