headlines

img

ஜனநாயகத்தின் கண்ணீர்!

ஜனநாயகத்தின் கண்ணீர்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (வெள்ளி) நிறைவுற இருக்கிறது. நாடாளுமன்றம் துவங்குவதற்கு முன்பு அவை அமைதியாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்து ழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஆனால் பாஜகவினரே அமளியில் ஈடுபட்டு இரு அவைகளையும் முடக்கிய நிகழ்வும் நடந்துள்ளது. 

நாடாளுமன்றம் கூடுகிற பொழுதெல்லாம் வெளிநாடுகளுக்கு பயணம் செல்வதை பிரதமர் நரேந்திர மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த கூட்டத் தொடரில் பல்வேறு முக்கியமான மசோதாக்களை அவசர அவசரமாக கொண்டு வந்து உரிய விவாதமின்றி ஒன்றிய அரசு நிறை வேற்றிய நிலையில், பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய மூன்று நாடு களுக்கு பயணம் சென்றுள்ளார். 

இந்திய நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் எத்தியோப்பியா சென்ற பிரதமர் எத்தியோப்பிய நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்று ஜனநாயகம் குறித்து உபதேசம் செய்துள்ளார். 

பிரதமரின் வெளிநாட்டு பயணங்களால் இந்திய நாட்டு நலனை விட பாஜகவின் கார்ப்பரேட் கூட்டாளிகளின் நலனே பிரதான மாக உள்ளது என்ற விமர்சனம் ஒருபுறமிருக்க, கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் மேற் கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கு இந்தியா ரூ.362 கோடி  செலவிட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் துவங்கியவுடன் எஸ்ஐஆர் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்தச் குற்றச் சாட்டுக்கும் பிரதமரோ, ஒன்றிய உள்துறை அமைச்சரோ பதிலளிக்கவில்லை. மாறாக, சவால், சவடால் என்று வார்த்தை விளை யாட்டுகளில்தான் ஈடுபட்டனர். 

வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டு விழா சிறப்பு விவாதம் என்று கூறி  இரு அவைக ளிலும் விவாதம் நடைபெற்றது. இதனைக் கூட சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பை விசிறிவிடுவதற்காகவே ஒன்றிய ஆட்சியா ளர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

காப்பீட்டுத் துறையை 100 சதவீத அந்நிய முத லீட்டுக்கு திறந்து விடுவதற்கான மசோதா, அணு சக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் ஆபத்தான மசோதா இவற்றுக்கெல்லாம் மேலாக மகாத்மா காந்தி பெயரை நீக்கி, ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை சிதைத்து, சின்னா பின்னமாக்கும் மசோதா என பல்வேறு மக்கள் விரோத மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உரிய விவாதத்திற்கு அனுமதிக்காமலே நிறை வேற்றப்பட்டுள்ளன. மகாத்மாவின் பெயரை நீக்கியதற்கு உரிய காரணத்தை ஒன்றிய ஆட்சி யாளர்கள் கடைசி வரை கூறவேயில்லை. 

மொத்தத்தில் இந்த கூட்டத் தொடர் ஒன்றிய அரசின் மக்கள் விரோத திட்டங்களை நிறை வேற்றுவதற்கு பயன்பட்டதேயன்றி ஜனநாய கத்தை பலப்படுத்த அல்ல.