அராஜகத்தின் பிடியில்...
வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் படுகொலை யைத் தொடர்ந்து அந்நாட்டில் வெடித்துள்ள வன்முறைச் சம்பவங்கள், அந்தத் தேசம் எத்த கையதொரு இருண்ட காலத்தை நோக்கித் தள் ளப்படுகிறது என்பதற்கான எச்சரிக்கை மணியாகும். ஹாடியின் மீதான துப்பாக்கிச் சூடு மிகக் கடுமையான கண்டனத்திற்குரியது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், ஒரு மரணத்தை முன்னிறுத்தி ஊடக நிறுவனங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் தூதரகங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள் மக்கள் போராட்டத்தின் அறம் அல்ல; அது அப்பட்டமான அராஜகம் மற்றும் பாசிசத்தின் வெளிப்பாடே.
‘தி டெய்லி ஸ்டார்’ மற்றும் ‘புரோதம் ஆலோ’ போன்ற முன்னணி ஊடக அலுவலகங்கள் திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பட்டிருப்பது, ஜன நாயகத்தின் நான்காவது தூணை வேரோடு சாய்க்கும் செயலாகும். ஊடகவியலாளர்கள் உயிருக்கு அஞ்சி கட்டிடத்தின் உச்சியில் தஞ்சம் புகுந்ததும், “என்னைக் கொல்ல முயல்கிறார் கள்” என அவர்கள் கதறியதும் ஒரு நாகரீக சமூகம் தலைகுனிய வேண்டிய பேரவலமாகும். இடதுசாரி விழுமியங்களின்படி, கருத்துரிமை யும் பத்திரிகை சுதந்திரமும் அதிகாரமற்ற எளிய மக்களின் வலிமையான ஆயுதங்கள். அந்த ஆயுதங்களைச் சிதைப்பது என்பது ஜனநாயக விழுமியங்களைச் சிதைப்பதாகும்.
வன்முறையின் ஊடாக இந்தியாவுக்கு எதி ரான முழக்கங்களை எழுப்புவதும், தூதரகங்க ளை முற்றுகையிடுவதும் கவலையளிக்கும் அரசியல் போக்குகளாகும். தேர்தல் நெருங்கும் வேளையில், மக்களின் அடிப்படைத் தேவை களான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொரு ளாதாரப் பாதுகாப்பிலிருந்து கவனத்தைத் திசை திருப்பவே இத்தகைய தீவிர தேசியவாத மற்றும் இனவாத உணர்ச்சிகள் திட்டமிட்டுத் தூண்டி விடப்படுகின்றனவா என்ற ஐயம் எழுகிறது. “இப்போதே இல்லையெனில் எப்போதும் இல்லை” போன்ற உணர்ச்சிமயமான முழக் கங்கள், நிலைகுலைந்த சூழலை உருவாக்கி ஜனநாயக ரீதியிலான மக்கள் இயக்கங்களு க்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக் கால அரசு, வெறும் இரங்கல் செய்திகளோடும், சடங்கு ரீதியான துக்க தின அறிவிப்புகளோடும் தனது கடமையை முடித்துக்கொள்ளக் கூடாது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஒரு தலைவரின் மரணத்தால் உந்தப்பட்டார்களா அல்லது சில அரசியல் சக்திகளால் திட்டமிட்டுப் பயன்படுத்தப் பட்டார்களா என்பதை கண்டறிய வேண்டும்.
ஒரு தலைவரின் மரணத்தை வைத்து நாட்டின் பொதுச் சொத்துக்களையும் ஊடகச் சுதந்திரத்தையும் சாம்பலாக்கும் செயலை ஏற்றுக்கொள்ளமுடியாது. வன்முறை என்பது ஜனநாயகப் பிரச்சனைகளுக்கான தீர்வாகாது. தற்போதைய அரசு வன்முறையைக் கட்டுப் படுத்துவதோடு, இந்தியர்களின் பாதுகாப்பை யும் உறுதி செய்ய வேண்டும்.
