டிரம்ப்பின் மகிழ்ச்சி இந்தியாவின் மகிழ்ச்சியல்ல!
வெனிசுலா நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து அந்தநாட்டின் ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்கா கொண்டு சென்றுள்ளார் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். அமெ ரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் டிரம்ப்பின் இந்த சர்வதேச ரவுடித்தனத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஐ.நா.சபை மற்றும் பல்வேறு நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடியை பகிரங்கமாக கண்டித்துள்ளன.
ஆனால் இந்திய பிரதமர் மோடி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வெளிப்படையாக கண்டிக்கவில்லை. இந்திய அயல்துறை அமைச்சகம் வெனிசுலாவில் நடப்பது கவலை யளிக்கிறது என்று பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டுள்ளதேயன்றி, அமெரிக்காவின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. இது கண்டிக்கத்தக்கது.
எனினும், டொனால்டு டிரம்ப் தன்னுடைய இந்திய எதிர்ப்பை கைவிடவில்லை. தொடர்ந்து வெளிப்படையாகவே இந்தியாவை மிரட்டி வருகிறார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் “பிரதமர் மோடி மிகச் சிறந்த மனிதர். ஒரு நல்ல மனிதர், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்கு தெரியும். என்னை மகிழ்ச்சியடையச் செய்வது முக்கியம், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விலையை விட இந்தியா மீது வரிகளை எங்களால் உயர்த்த முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும், பிரதமர் நரேந்திர மோடியும் நட்பாக இருப்பது குறித்தோ, ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வது குறித்தோ யாருக்கும் கவலையில்லை. இரு நாட்டுத் தலைவர்கள் என்பதையும் தாண்டி இரு வருக்குள்ளும் ஒரு வகையான கருத்தியல் நெருக்கம் இருக்கிறது போலும்
டிரம்ப்பின் அழுத்தம் காரணமாக பாலஸ் தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புத் தாக்குதலை வெளிப்படையாக கண்டிக்கக்கூட இந்திய அயல்துறை அமைச்சகம் தயங்குகிறது. மாறாக, இனவெறி இஸ்ரேலுடன் இணக்கம் காட்டுகிறது.
ஆனால் இந்தியாவின் மீது ஒரு வரி யுத்தத்தையே அமெரிக்கா தொடுத்துள்ளது. அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக ரஷ்யா விடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக் கொண்டுள்ளது. மறுபுறத்தில், அமெ ரிக்காவிடமிருந்து இயற்கை எரிவாயு பெருமள வில் கொள்முதல் செய்ய உடன்பாடு காணப் பட்டுள்ளது. அமெரிக்காவிடமிருந்து பெருமள வில் ராணுவத் தளவாடங்களை வாங்கவும் மோடி அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண் ணெய் வாங்குவதை முற்றாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால், இறக்குமதி வரியை உயர்த்துவேன் என்று டிரம்ப் மிரட்டுகிறார். ஏற்கெனவே கடுமையான வரி உயர்வு அமெ ரிக்காவால் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா வின் மிரட்டலுக்கு இந்தியா பணியக்கூடாது. டிரம்ப் வேண்டுமானால் மோடியின் நண்பராக இருக்கலாம். நிச்சயமாக, அவர் இந்தியாவின் நண்பராக இருக்க முடியாது.
