‘நன்று உம் கொற்றம்!’
‘பேசுவது மானம்; இடைபேணுவது காமம்; கூசுவது மானுடரை; நன்று நம்கொற்றம்’ என்று ராவணனை கும்பகர்ணன் எள்ளி நகை யாடுவதாக கவிச் சக்கரவர்த்தி கம்பர் எழுதி யிருப்பார். பேசுவது ஒன்றும், செய்வது ஒன்று மாக இருப்பதையே அவர் இவ்வாறு எழுதியி ருப்பார். இன்றைக்கு கம்பர் இருந்திருந்தால் பிரதமர் மோடியைப் பார்த்து “நன்று உம் கொற்றம்!” என்று இடித்துரைத்திருப்பார்.
கிறிஸ்துமஸ் நன்னாளில் தேவாலயம் சென்று மனதுருக பிரார்த்தனை செய்கிறார் பிரதமர் மோடி. அதே நாளில் இவருடைய கட்சி யின் பரிவாரங்கள் நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. இதை கண்டிக்கக் கூட பிரதமருக்கு மனமில்லை.
இது ஒருபுறமிருக்க, ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் என்ற தலைப்பில் வானொலியில் பேசுகிறார், பத்திரி கையாளர்களை ஒரு போதும் சந்தித்து கேள்வி களுக்கு பதிலளிக்காத பிரதமர் மோடி.
இந்த மாத ஞாயிறு ஆண்டின் இறுதி ஞாயிறு என்பதால் பிரதமர் கொஞ்சம் அளவுக்கு அதிக மாகவே உருகியிருப்பார். குறிப்பாக மக்கள் மனதை தமிழ் மொழி ஒருங்கிணைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று சங்க காலத்திலேயே உலகளா விய மானுடப் பண்பை பேசியது தமிழ். ஆனால் தமிழுக்காகப் பேசும் பிரதமர் அந்த மொழியின் வளர்ச்சிக்காக செய்தது என்ன என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
இந்தி மொழித் திணிப்புக்கு இசைவாக அமைந்துள்ள சமக்ர சிக் ஷா திட்டத்தை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டு பள்ளிப் பிள்ளைகளு க்கு கிடைக்க வேண்டிய ரூ.2,152 கோடியை நிறுத்தி வைத்திருப்பது நியாயமா?
தமிழ்மொழியின் தொன்மையை உணர்த்தும் பொருண்மைச் சான்றுகளை வெளிக் கொணர்ந்துள்ள கீழடி அகழ்வாய்வை ஒன்றிய அரசு கைவிட்டதோடு, இதுவரை மேற்கொள் ளப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட மறுத்து, சண்டித்தனம் செய்வது சரிதானா?
2025 ஆம் ஆண்டில் ஆப்ரேசன் சிந்தூர் அரசின் சாதனை என்கிறார் பிரதமர். ஆனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையி லான போரை நான் தான் நிறுத்தினேன் என்று நாள்தோறும் சொன்ன அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை கண்டித்தது உண்டா? டிரம்பின் வார்த்தை கள் மனதின் குரலில் மாசு ஏற்படுத்த வில்லையா?
வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டைக்கூட குறுகிய மதப் பகைமைக்கு பயன்படுத்த முயன்றது மனசாட்சிக்கு உறுத்த லாக இல்லையா? அணுசக்தி துறையில் கூட தனியார், காப்பீட்டுத்துறையில் நூறு சதவீத அந்நிய முதலீடு, நூறுநாள் வேலைத் திட்டத்தை சிதைத்ததோடு, மகாத்மா காந்தியின் பெயரை அகற்றியது மனதை உறுத்தவில்லையா?
மனத்துக்கண் மாசு இல்லையென்றால் மட்டுமே இது உறுத்தும். இல்லையேல், மனதும் பொய் பேசும்.
