headlines

img

விசாரணைக் கைதிகள் : கம்பிக்குப் பின்னால் கருகும் நீதி

விசாரணைக் கைதிகள் : கம்பிக்குப் பின்னால் கருகும் நீதி

இந்தியச் சிறைகள் மனித உரிமைகளின் “கல்லறைகளாக” மாறி வருவதை, உச்சநீதி மன்ற நீதிபதி விக்ரம் நாத்தின் சமீபத்திய அறிக்கை அதிர்ச்சி கலந்த உண்மையுடன் பதிவு  செய்துள்ளது. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள வர்களில் 70%க்கும் அதிகமானோர் குற்றவாளி கள் அல்ல, மாறாக நீண்ட நாட்களாகத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் விசாரணைக் கைதிகள். நமது நீதி அமைப்பு, விரைவான நீதி மற்றும் அடிப்படை உரிமைகள் என்ற இரண்டு தூண்களிலும் தோல்வியடைந்துள்ளதை இது அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது

இதில் வேதனையான விஷயம் என்ன வென்றால், இந்தக் கைதிகளில் 7.91% பேர் மட்டுமே இலவச சட்ட உதவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இலவச சட்ட உத விக்கான உரிமை பற்றி அறியாமலேயே, பெரும்பாலான ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் கம்பிக்குப் பின்னால் வாடுகின்றனர். இந்தச் சட்ட உதவியை நாடும் விண்ணப்ப தாரர்களில் 67.6% பேர் தலித்துகள், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் என்பது நீதி  அமைப்பின் பாரபட்சமான தன்மையை உறுதிப் படுத்துகிறது. நீதி, ஒரு சில சமூகங்களுக்கு மட்டுமே அணுகக்கூடிய, விலையுயர்ந்த பொரு ளாக மாறிவிட்டது. வழக்கு விசாரணைகளுக் கான கால தாமதமும், நீதிமன்றங்களின் மந்தமான செயல்பாடும் தான் இந்தக் கைதிகளின் வாழ்க்கையைப் பலி கொள்கின்றன. 

நீதி தாமதத்தால் பாதிக்கப்படுவோருக்கு ஒரு நேரடி உதாரணம் இதோ : அனிதா தேவி  என்ற பெண், குடும்ப வன்முறையால் பாதிக்கப் பட்ட நிலையில், சொந்தக் குடும்பத்தாலேயே கைவிடப்பட்டார். அவர் மீது தொடரப்பட்ட ஒரு வழக்கில், பிணை வழங்கப்பட்ட பிறகும், பிணைத் தொகையைச் செலுத்தவோ அல்லது பிணைப் பத்திரம் வழங்க ஆவணங்கள் இல்லா மலோ கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். பிணைக்கான நிபந்தனைகளை ஒரு ஏழையால் பூர்த்தி செய்ய முடியாமல் போனால், நீதிமன்றத்தின் கருணை கூட அவர்களுக்குக் கிடைக்காமல் போகிறது. அனிதா தேவி போன்ற ஆயிரக்கணக்கானோர், தங்களுக்கு விதிக்கப்படாத தண்டனையை அனுபவிக்கின்றனர். இது, ஏழைகளுக்குச் சட்டத்தின் பெயரால் இழைக்கப்படும் அநீதி. 

ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படு வதற்கு முன்பே, அவர் அனுபவிக்கும் சிறைவாசம், அதிகபட்சத் தண்டனைக் காலத்தை விடவும் அதிகமாக இருந்தால், அது மனித சுதந்திரத்தை  கேலி செய்யும் செயல் அன்றோ? தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் (NALSA) பணிகளை மறுபரிசீலனை செய்து, சட்ட விழிப்புணர்வைச் சிறைகளுக்குள்ளும், சமூக மட்டத்திலும் போர்க்கால அடிப்படையில் அதிகரிக்க வேண்டும். பிணை நடைமுறைகளை மனிதாபி மான அடிப்படையில் சீர்திருத்துவது மற்றும் விசாரணைக்கைதிகளுக்குக் கட்டாயச் சட்டப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது மட்டுமே, சமநீதி இன்னும் இந்தியாவில் உயிருடன் இருக்கிறது என்பதை நிரூபிக்க வழி.