அதிகார மமதையும் - அபராதமும்!
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒன்றிய அமைச்ச கத்திற்கு விதித்துள்ள ஒரு லட்சம் ரூபாய் அப ராதம், நிர்வாக அலட்சியத்திற்கான தண்டனை மட்டுமல்ல; நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மோடி அரசு காட்டும் மெத்தனத்திற்கு விடப்பட்ட பலத்த எச்சரிக்கையாகும்.
உத்தரப் பிரதேசத்தின் ஜாலவுன் மாவட்டத் தில் உள்ள ‘ராயாட்’ ஓடையில் நாளொன்றுக்கு 11 மில்லியன் லிட்டர் கழிவுநீர் கலக்கிறது. ஆனால், அதனைச் சுத்திகரிக்க வெறும் 5 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட நிலையத்தை மட்டும் அமைத்துவிட்டு, “கடமை முடிந்தது” என பாஜக அரசு ஒதுங்கிக்கொண்டது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், ஒன்றிய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம், நீர்வள அமைச்சகம் மற்றும் உ.பி. மாநில பாஜக அரசுக்குத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், “இரட்டை எஞ்சின்” அரசின் எந்தவொரு பிரதிநிதியும் ஆஜராக வில்லை. இந்தத் திட்டமிட்ட மௌனமே அபராதத்திற்கு வழிவகுத்துள்ளது.
சாதாரணக் குடிமக்கள் நீதிமன்ற உத்தரவை மீறினால் சட்டம் பாய்கிறது. ஆனால், நாட்டின் உயர்ந்த அமைச்சகங்களே தீர்ப்பாயத்தின் நோட்டீஸ்களை அலட்சியப் படுத்துவதை “திட்டமிட்ட ஆஜராகாமை” என நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியளிக் கிறது. “சுற்றுச்சூழல் சட்டங்கள் வளர்ச்சிக்குத் தடை” என்ற குறுகிய மனப்பான்மையே இந்த அலட்சியத்தின் அடிப்படை. ஜாலவுன் போன்ற பகுதிகளில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் ஆறுகளில் கலப்பது ஒட்டுமொத்த நதிநீர்க் கட்டமைப்பையும் அழிக்கும் நஞ்சாகும்.
கடந்த பத்தாண்டுகளில், மோடி அரசு ‘தொழில் செய்ய வசதியான சூழல்’ என்ற முழக்கத்திற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகச் சுற்றுச்சூழல் சட்டங்களை ஒவ்வொன்றாக நீர்த்துப்போகச் செய்துள்ளது. அரசு மக்களின் “பாதுகாவலர்” என்ற நிலையில் இருந்து விலகி, கார்ப்பரேட் களின் “முகவராக” மாறியிருக்கிறது. கங்கையைத் தூய்மைப்படுத்தக் கோடிக் கணக்கான ரூபாய்களைச் செலவிடும் அரசு, அடிப்படை மட்டத்தில் கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையங்களைக் கூட முழுத் திறனுடன் அமைக்கத் தவறுவது ஏன்? அமைச்சகங்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்ப்பது, பொறுப்புக் கூறலில் இருந்து தப்பிக்கும் தந்திரமே\
தூய்மையான நீர், காற்று, நிலம் என்பது குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகை அல்ல; அது அவர்களின் அடிப்படை உரிமை. அந்த உரிமையைப் பாதுகாக்க வேண்டிய அமைச்ச கமே அபராதம் கட்டுவது அப்பட்டமான நிர்வாகத் தோல்வியாகும்.
இயற்கையைப் பலிகொடுத்து வரும் வளர்ச்சியால் இறுதியில் சுடுகாடே மிஞ்சும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். வளர்ச்சி என்பது மனிதர்களை அழித்துவிட்டு வருவதல்ல; இயற்கையோடு இயைந்து வாழ்வதே உண்மையான வளர்ச்சி.காலநிலை மாற்றத்தின் பிடியில் உலகம் தவிக்கும் வேளையில், இந்திய அரசு கார்ப்பரேட் சார்புப் போக்கைக் கை விட்டு, இயற்கை நீதியைக் காக்க வேண்டும்.
