headlines

img

மவுனம் சம்மதமா

 மவுனம் சம்மதமா 

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. அவர்கள் பின்வாங்க மாட்டார்கள். ஏற்கெனவே ரஷ்யா விடமிருந்து அதிகப்படியான எண்ணெய்யை வாங்கினாலும் இனிமேல் தொடரமாட்டார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அவர் இவ்வாறு கூறுவது இது இரண்டாவது முறை. 

ஆனால் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இதுவரை ஒன்றிய அரசு தரப்பில் எதுவும் வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் டிரம்ப் திரும்பத் திரும்ப இந்தியா தன்னிடம் உத்தரவாதம் அளித்திருப்பதாக கூறுகிறார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியோ அவரது அமைச்ச ரவை சகாக்களோ வாய்திறக்க மறுக்கிறார்கள். இது இந்திய மக்களை அவமதிப்பதாகும். 

ஒருவேளை ரஷ்யாவிடம் இனிமேல் எண்ணெய் வாங்குவதில்லை என்று முடிவு செய்திருந்தால் அதை இந்தியத் தரப்பில் தான் தெரிவிக்க வேண்டும். மாறாக, அமெரிக்க  ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இதை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? உண்மையில் டிரம்ப்பிடம் அவ்வாறு ஒன்றிய அரசு உறுதி அளித்திருக்கிறதா இல்லையென்றால் டிரம்ப் பொய் சொல்கிறாரா என்பதை பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்த வேண்டும். 

கடந்த முறை டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று வெளிப்படையாகவே நிர்ப்பந்தம் செய்தார். பிறகு இந்தியத் தரப்பும் இதற்கு இணங்கியது. அதுபோலத்தான் இப்போதும் நடக்கிறதா? அமெரிக்காவுடன் இந்திய தரப்பில் வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் டிரம்ப் இவ்வாறு கூறுவதன் மர்மம் என்ன?

டிரம்ப் இவ்வாறு அத்துமீறுவது இது முதன்முறையல்ல. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து வெடித்த இந்திய-பாகிஸ்தான் போரை நான்தான் முடிவுக்கு கொண்டுவந்தேன் என்று 40க்கும் மேற்பட்ட முறை டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறினார். பாகிஸ்தான் தரப்பு ஒருவகையில் இதை ஒப்புக்கொண்ட நிலையில் பிரமதர் நரேந்திர மோடி மவுனம் சாதித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விக்கணைகளால் துளைத்த போதும்  பிரதமர் மோடி வாய்திறக்கவில்லை. கடைசியில் இந்தப் பிரச்சனையில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை என்று பொத்தாம் பொதுவாகத்தான் ஒன்றிய அரசுத் தரப்பில் கூறப்பட்டது. 

இப்போது ரஷ்யாவை மிரட்டி பணிய வைக்க முயலும் டிரம்ப் இந்தியா எண்ணெய் வாங்காது என்று கூறுகிறார் என்றால், இந்தியாவின் அயல்துறை கொள்கையை தீர்மானிப்பது யார்? என்ற கேள்வி எழுகிறது. மோடி அரசின் சர்வதேச செய்தித் தொடர்பாளராக டிரம்ப் செயல்படுகிறாரா? இந்தியாவை தொடர்ந்து டிரம்ப் அவமதிப்பதும் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பிரதமர் மோடி  அவருக்கு தொடர்ந்து வாழ்த்து மடல் வாசிப்பதும் நம் நாட்டு மக்களை அவமதிப்பதாகும்.