இன்டிகோவின் அலட்சியமும் அரசின் கையாலாகாத்தனமும்
விமானப் பயணச் சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம், பயணிகளைப் பற்றிச் சற்றும் கவலைப்படாத தனியார் நிறுவனத்தின் அராஜகப் போக்கையும், அதன் விளைவாக எழும் அநியாயமான கட்டணக் கொள்ளையை தடுக்கத் தவறிய ஒன்றிய மோடி அரசின் பொறுப்பற்ற நிர்வாகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்த நெருக்கடியின் உண்மையான பின்னணி, பைலட்களின் களைப்பைத் தடுக்க, ஜனவரி 2024-ல் அறிவிக்கப்பட்ட புதிய விமானப் பணிநேர வரம்பு விதிமுறைகளை நவம்பர் 1, 2025 முதல் முழுமையாக அமல்படுத்த இன்டிகோ மோசமாகத் தவறியதுதான். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கிடைத்தும், “குறைந்த பணியாளர்” என்ற இலாப வெறி மாதிரியைப் பின்பற்றிய இந்நிறுவனம், போது மான பைலட்களை நியமிக்கவில்லை. 2,422 கேப்டன்கள் தேவைப்பட்ட நிலையில் 2,357 பேர் மட்டுமே இருந்தனர். புதிய விதிகளின் படி பணி நேர வரம்பு அமலானதால், பைலட்டுகள் பற்றாக்குறை ஏற்பட்டு டிசம்பர் 2-7 வரை 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; ஒரு நாளில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நெருக்கடியால் மற்ற விமான நிறுவனங்களின் டிக்கெட் விலை வானளவு உயர்ந்தது - தில்லி-மும்பை ₹60,000, மும்பை-ஸ்ரீநகர் ₹62,000 (பொதுவான விலை ₹6,000-8,000). பயணிகள் அல்லாடிய பின்னரே, டிசம்பர் 6 அன்று மோடி அரசு கட்டண வரம்பை (₹7,500 முதல் ₹18,000 வரை) விதித்தது.
முரண்பாடு என்னவென்றால், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்ற பெயரில், இன்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு காரணம் காட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு, அதே நேரத்தில் இந்நெருக் கடியை உருவாக்கிய விமானப் பணிநேர வரம்பு விதிமுறைகளையே தற்காலிகமாக (பிப்ரவரி 10 வரை) தளர்த்தியது. இது பைலட்களின் பாதுகாப்பைப் பலியிட்டு, மோசமான நிர்வாகத் திற்கு வெகுமதி அளிப்பதாகும்.
60%-க்கும் மேற்பட்ட சந்தைப் பங்கு கொண்ட ஒரே நிறுவனம் தோல்வியுற்றதும், ஒட்டு மொத்த நாடே முடங்கியதும், வலுவான பொதுத்துறை விமான நிறுவனம் இல்லாததன் கொடூரமான விளைவு. ஏர் இந்தியாவை ₹18,000 கோடிக்கு டாடா குழுமத்துக்கு விற்று, சந்தையை முழுக்க இலாப வேட்டைக்கு விட்டுக்கொடுத்த மோடி அரசின் தனியார்மயக் கொள்கையே இதற்குக் காரணம்.
இது ஒரு தேசத்தின் அத்தியாவசியச் சேவை பெருநிறுவன லாபத்துக்கு ஆளாகி நிற்பதன் அபாயகரமான உதாரணம். நிரந்தரத் தீர்வு. வலு வான பொதுத்துறையை மீட்டெடுப்பதும், விலை சுரண்டலைத் தடுக்கும் கடுமையான கட்டண ஒழுங்குமுறைச் சட்டத்தை வகுப்பதுமே. விமானப் பயணம் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்குமான பொதுச் சேவையாக மாற வேண்டும்.
