headlines

img

ஜனநாயகமா அல்லது தரவு மாயாஜாலமா? அரசியல் கட்சிகள் விழிப்போடு இருப்பது அவசியம்!

ஜனநாயகமா அல்லது தரவு மாயாஜாலமா?

கரண் தாப்பர்: டாக்டர் பரக்கலா, பிப்ரவரி 14 தேதியிட்ட உங்கள் கட்டுரை ஒரு பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 2024 ஆந்திரத் தேர்தலில் 3,500 வாக்குச்சாவடிகளில் நள்ளிரவு 11:45 முதல் அதிகாலை 2:00 மணிக்குள் 17 லட்சம் பேர் வாக்களித்ததாகக் கூறுகிறீர்கள். இது எப்படிச் சாத்தியம்? உங்கள் ஆதாரங்கள் என்ன? டாக்டர் பரக்கலா: கரண், இது நான் உருவாக்கிய தரவுகள் அல்ல; தேர்தல் ஆணையமும் (ECI), ஆந்திர தலைமை தேர்தல் அதிகாரியும் (CEO) வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவுகள். வாக்குப்பதிவு நாளன்று இரவு 11:45 மணிக்கு 76.50% ஆக இருந்த வாக்குப்பதிவு, நள்ளிரவு 2 மணிக்கு 80.66% ஆக உயர்ந்தது. இந்த 4.16% உயர்வு என்பது சுமார் 17 லட்சம்  வாக்குகள். இவை அனைத்தும் வெறும் 3,500 வாக்குச்சாவடிகளில் மட்டுமே பதிவாகியுள்ளன. கரண் தாப்பர்: 135 நிமிடங்களில் 17 லட்சம் பேர் என்றால், சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 3.6 வாக்காளர்கள். ஒருவருக்கு 20 வினாடிகளுக்கும் குறைவான நேரமே கிடைக்கிறது. இதை நம்ப முடிகிறதா? டாக்டர் பரக்கலா: இது அறி வியல்பூர்வமாகச் சாத்தியமே இல்லை. ஆந்திராவில் நடந்தது சட்டசபை மற்றும் மக்களவை என இரு தேர்தல்கள். ஒரு வாக்காளர் உள்ளே சென்று கையெ ழுத்திட்டு, மை வைத்துக்கொண்டு, இரண்டு வெவ்வேறு இயந்திரங்களில் வாக்களிக்க வேண்டும். இயந்திரத்தில் ஒரு பொத்தானை அழுத்தினால் விவி பேட் (VVPAT) சீட்டு விழுந்து இயந்திரம் தயாராக 7 வினாடிகள் ஆகும். இரண்டு வாக்குகளுக்கு வெறும் ‘இயந்திரக் காத்திருப்பு நேரம்’ 14 வினாடிகள் மட்டுமே. அப்படியிருக்க, மீதமுள்ள 6 வினாடிகளில் ஒரு மனிதரால் இந்த முழுச் செயல்பாட்டையும் முடிக்க முடியுமா? இது அபத்தமானது. கரண் தாப்பர் : இது சராசரி கணக்கு என்று யாராவது சொன்னால்? டாக்டர் பரக்கலா: ஒருவேளை சில  வாக்குச்சாவடிகளில் 491-க்கும்  குறைவான வாக்குகள் பதிவாகி யிருந்தால், சராசரியைச் சமன் செய்ய வேறு சில வாக்குச்சாவடிகளில் 491-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி யிருக்க வேண்டும். அப்படிப்பார்த்தால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு வேகம் இன்னும் அதிகமாக, அதா வது 6 வினாடிக்கும் குறைவாக இருந்திருக்க வேண்டும். இது இன்னும் நகைப்புக்குரியது! கரண் தாப்பர்: உங்கள் கட்டுரையில் மாலை நேர வாக்குப்பதிவு வேகம் குறித்து என்ன குறிப்பிட்டிருந்தீர்கள்? டாக்டர் பரக்கலா: அதுதான் மிக  முக்கியமான முரண்பாடு. தரவுகளின் படி மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு வெறும் 7 வாக்குகளே பதிவாகியுள்ளன. ஆனால்  அதே மக்கள் வரிசையில் நின்றிருந் தால், நள்ளிரவில் மட்டும் எப்படி ஒரு நிமிடத்திற்கு 3.6 வாக்குகள் என்ற மின்னல் வேகத்தில் வாக்களித்திருக்க முடியும்? கரண் தாப்பர்: தமிழ்நாடு, கேரளம் என 5 மாநிலத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், உங்கள் கண்டுபிடிப்புகள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையைச் சிதைக்கிறதா? டாக்டர் பரக்கலா: நிச்சயமாக. 175 இடங்களில் 164 இடங்களை ஒரு  கூட்டணி வெல்லும் நிலையில், இத்த கைய புள்ளிவிவர முரண்பாடுகள் அந்த வெற்றியின் பின்னணியில் ஏதோ ஒரு முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றன. 6 வினாடிகளில் ஒரு வாக்காளர் இரண்டு வாக்குகளைச் செலுத்த முடியும் என்ற தேர்தல் ஆணையத்தின் வாதம் ஜனநாயகத்தையே கேலிக் குள்ளாக்குகிறது. கரண் தாப்பர்: இது குறித்து தேர்தல் ஆணையம் ஏன் இன்னும் மௌனம் காக்கிறது? டாக்டர் பரக்கலா: நான் கடிதம் எழுதி 20 நாட்கள் ஆகியும் ஒரு சிறு பதில்கூட இல்லை. மகாராஷ்டிரா தேர்த லின் போதும் இதே போன்ற குளறுபடி களைச் சுட்டிக்காட்டினேன். அங்கும் இதே மௌனம்தான். இது ஒரு திட்ட மிட்ட ‘மௌனச் சதி’. கரண் தாப்பர்: தேசிய ஊடகங்கள் இந்தச் செய்தியை ஏன் கண்டுகொள்ளவில்லை? டாக்டர் பரக்கலா: ஒரே ஒரு தெலுங்கு பத்திரிகையைத் தவிர, எந்தத் தேசிய ஊடகமும், தொலைக்காட்சியும் இதனைத் தொடக்கூட இல்லை. அவர்கள் மௌனமாக இருப்பதன் மூலம் இந்த விவகாரத்தைக் கொல்ல நினைக்கிறார்கள். கரண் தாப்பர்: நமது தேர்தல் முறையைப் பற்றி முடிவாக என்ன நினைக்கிறீர்கள்? டாக்டர் பரக்கலா: தேர்தல் ஆணை யத்திற்கு நான் ஒரு ஆலோசனை சொல்கிறேன். நாம் உலக ஏஐ(AI) உச்சிமாநாடு நடத்தினோம் அல்லவா? அதேபோல் ஒரு ‘உலக ஜனநாயக உச்சிமாநாடு’ நடத்தி, 6 வினாடிகளில் எப்படி வாக்களிப்பது என்ற வித்தையை உலகுக்குக் காட்டலாம். மேலும், இந்த 3,500 வாக்குச்சாவடிகளையும் ‘ஜனநாயகச் சுற்றுலாத் தலங்களாக’ அறிவிக்கலாம். கரண் தாப்பர்: உங்கள் ஆதங்கம் புரிகிறது டாக்டர் பரக்கலா. இவ்வளவு தெளிவான ஆதாரங்களுடன் பேசியதற்கு மிக்க நன்றி.

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மை குறித்த விவாதம் மிக மிக அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. 2024 ஆந்திரப் பிரதேசத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு தரவுகளில் உள்ள அதிர்ச்சியூட்டும் முரண்பாடுகளை, பொருளாதார நிபுணரும் அரசியல் விமர்சகருமான டாக்டர் பரக்கலா பிரபாகர் ‘தி வயர்’ (The Wire) தளத்தில் கடந்த பிப்ரவரி 14 அன்று வெளியான தனது ஆய்வுக் கட்டுரையில் அம்பலப்படுத்தியுள்ளார்.
அந்தக் கட்டுரையில் அவர் முன்வைத்த மிக முக்கியமான வாதம் இதுதான்: தேர்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிட்ட தரவுகளுக்கும், இறுதியாக அறிவிக்கப்பட்ட தரவுகளுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் காணப்படுகிறது. குறிப்பாக, ஆந்திர சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து பல மணி நேரங்களுக்குப் பிறகு, நள்ளிரவில் லட்சக்கணக்கான வாக்குகள் ‘திடீரென’ உள்ளே வந்துள்ளன. இதுபற்றிய பரக்கலா பிரபாகரின் கட்டுரையின் வெளியீடு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர், டாக்டர் பரக்கலா பிரபாகரைத் தனது ‘The Interview’ நிகழ்ச்சிக்காக சமீபத்தில் சந்தித்து விரிவான நேர்காணலை நடத்தினார்.