எல்லை கடந்த மோசடிகள்
இந்தியாவின் அதானி குழுமத்திற்கும் வங்க தேசத்திற்கும் இடையிலான மின்சார ஒப்பந்தம் தற்போது ஒரு சர்வதேசப் பிரச்சனையாக உரு வெடுத்துள்ளது. அது ஊழல் மற்றும் முறைகேடு கள் மலிந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள், அண்டை நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவில் கறையை ஏற்படுத்தியுள்ளன.
வங்கதேச மத்திய வங்கி ஆளுநர் அஹ்சான் மன்சூர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சி யளிக்கக் கூடியது. ஆஸ்திரேலியாவின் உயர்தர ‘நியூகாஸில்’ நிலக்கரிக்கான விலையை அதானி குழுமம் வசூலிப்பதாகவும், ஆனால் உண்மையில் இந்தோனேசியாவின் தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது உண்மை யாக இருக்கும் பட்சத்தில், இது ஒரு திட்ட மிட்ட கார்ப்பரேட் மோசடியாகும். மற்ற இந்திய நிறுவனங்கள் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.9.57 வசூலிக்கும் நிலையில், அதானி குழுமம் ரூ.14.87 வசூலிப்பது ஏன் என்ற கேள்விக்கு முறை யான பதில் இல்லை.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் கையெழுத்திடப்பட்ட இந்த 25 ஆண்டு கால ஒப்பந்தம், வங்கதேசத்தின் நலனை விட அதானி குழுமத்தின் லாபத்தையே முன்னி றுத்தியதாகத் தெரிகிறது. தற்போது ஹசீனா மீதான நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் வங்க தேசத்தின் இடைக்கால அரசின் நடவடிக்கை கள், கடந்த கால ‘அதிகாரப்பூர்வ ஊழல்களை’ வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. வரிச் சலுகைகளை வழங்கத் தவறியது மற்றும் வெளிப் படைத்தன்மையற்ற ஒப்பந்த முறைகள் ஆகி யவை வங்கதேசத்தின் பொருளாதாரத்தைச் சிதைப்பதாக அந்நாட்டு அரசு கருதுகிறது.
இந்த விவகாரத்தை சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்திற்கு கொண்டு செல்ல அதானி குழுமம் முயல்வதும், அதற்கு வங்கதேச உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளதும் இப்பிரச்சனை யை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. ஒப்பந்தங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; ஆனால், அந்த ஒப் பந்தமே முறைகேடான வகையில், லஞ்சத்தின் அடிப்படையில் போடப்பட்டது என்ற வங்க தேச அரசின் விசாரணை அறிக்கை தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
“அனைவருடன் இணைவோம், அனை வரும் உயர்வோம்” என்ற உயரிய நோக்கம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பிரதி பலிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ஈட்டும் லாபம், அண்டை நாட்டின் நம்பிக்கை யைச் சிதைப்பதாக அமைந்துவிடக் கூடாது. அதானி குழுமம் மீதான இந்தக் குற்றச்சாட்டு கள் குறித்து இந்திய அரசும், ஒழுங்குமுறை அமைப்புகளும் மௌனம் காக்காமல், ஒரு வெளிப்படையான விசாரணைக்கு வழிவகுக்க வேண்டும். வணிகம் நேர்மையின் அடிப்படை யிலும் அமைய வேண்டும் என்பதே இந்த விவ காரம் உணர்த்தும் பாடம். ஆனால் மோடி அரசிட மும் அதானி நிறுவனத்திடமும் இதை எதிர்பார்க்க முடியாது.
