headlines

img

குற்றமும் தண்டனையும் ஒரு பார்வை - எஸ். ராமகிருஷ்ணன்

 ஒரு சட்டத்தின்கீழ்  எல்லாக் குற்றங்களையும் எப்படி விசாரிக்க முடியும்? ஒவ்வொரு தவறும் ஒவ்வொரு விதமாக இருக்கும் போது ஒரே சட்டத்தின் கீழ் எல்லாக் குற்றங்களையும் எப்படி விசாரித்துத் தண்டனை வழங்க முடியும்?

யோசித்துப் பார்த்தால் கடந்த காலத்துக் குற்றங்கள் எல்லாம் நம் காலத்தின் சாதனைகளாக,  மிகப்பெரிய தியாகமாக போற்றப்படுகிறது.  பகத்சிங் செய்தது அவர் காலகட்டத்தில் குற்றம். ஆனால் அது நம் காலகட்டத்தில் மிகப்பெரிய தியாகச் செயல்.  அப்படியானால் எது ஒரு குற்றத்தை முடிவு செய்கிறது?  யார் குற்றவாளி? குற்றம் என்பதை ஒரு சமூகம் எப்படி அடை யாளப்படுத்தி வைத்திருக்கிறது?  குற்றம் என்பதை அதிகாரமும் சட்டம் சேர்ந்து உருவாக்கி வைத்திருக்கிற குற்றவாளிகள் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு விதமாகத்தான் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். விடுவிக்கப்பட்டி ருக்கிறார்கள். ரஷ்ய எழுத்தாளர்  தஸ்தாயெவ்ஸ்கி தனிமனிதனின் குற்றத்தை ஆராய்வதன் வழியே சமூகத்தின் குற்றத்தை அடையாளம் காட்டுகிறார்.  மகத்தான கலைஞர்கள் அப்படித்தான் உண்மைகளை வெளிப்படுத்துவார்கள். “குற்றமும் தண்டனையும்”  நாவலில் தஸ்தா யெவ்ஸ்கி குற்றம் குறித்து மிக ஆழமான கேள்விகளை எழுப்புகிறார் . ஒரு சட்டத்தின்கீழ்  எல்லாக் குற்றங்களையும் எப்படி விசாரிக்க முடியும்? ஒவ்வொரு தவறும் ஒவ்வொரு விதமாக இருக்கும் போது ஒரே சட்டத்தின் கீழ் எல்லாக் குற்றங்களையும் எப்படி விசாரித்துத் தண்டனை வழங்க முடியும்?

திருட்டு என்று ஒரு குற்றத்தை எடுத்துக்கொள்ள லாம்.  அந்தக் குற்றம் ஒன்று போல இரண்டு இடங்களில் நடப்பதில்லை.  ஆனால் ஒரே குற்றத்தின்கீழ் இருவரும் விசாரிக்கப்பட்டு ஒரே தண்டனை அடைகிறார்கள். அதை தஸ்தாயேவ்ஸ்கி  கேள்விக்கு உட்படுத்துகிறார்.   அவரின் நாவலில் ஒரு விவாதம் வருகிறது. விவாதிப்பவர் ஒரு காவல்துறை அதிகாரி. அவருக்கும் இந்த நாவலில் வரும் கதாநாய கனுக்கும் ஒரு விவாதம் நடக்கிறது. விவாதம் நடக்கும்போது அவர் சொல்கிறார்,  அதி காரத்திற்குத் துணைபோவதற்காக உருவாக்க ப்பட்ட ஒன்று சட்டம் என்று. 

இந்தியாவில் மட்டும்தான் ஐபிசி எனப்படும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மெகாலேவால்  கொண்டுவரப்பட்டது. அவர்தான் இந்தியக் கல்விமுறையை மாற்றி அமைத்தவர். ஒரே ஆள்,  கல்வி -  காவல்துறை இரண்டின் சட்டங்களையும் உருவாக்கிய முரணை எப்படிச் சொல்வது?  அதனால்தான் இன்றும் பள்ளிகள்  தண்டனைக்கூடமாக இருக்கிறதோ என்னவோ! நிரூபிக்கப்படாத வரையில் எதுவும் குற்றமில்லை.  நிரூபிக்கப்பட்டாலும் உங்களுக்கு வசதியும் அதிகாரமும் துணையிருந்தால் குற்றத்திலிருந்து விடுபட்டு விடலாம் . ஆக, குற்றம் எல்லா நேரங்களிலும் எல்லோரையும்  தண்டித்துவிடுவதில்லை. குற்றம் மனதில் உருவாக்கப்படுகிறது.  அதற்கு அளிக்கப்படும் தண்டனையோ  உடலை மையமாகக் கொள்கிறது. உடலை ஒடுக்கினால் மனம் ஒடுங்கி விடும் என்பதே சட்டத்தின் ஆதாரம்.  மனிதனைத் தனிமைப்படுத்துவது உச்சபட்ச தண்டனை. 

உறவுகள் அற்றுப்போய் சுவரை வெறித்தபடி அடைந்து கிடக்கும் வாழ்க்கைதான் தண்டனை என்றால், இன்று  பெருநகரங்களில் பெரும்பான்மை குடும்பங்கள் அப்படித்தானே வாழ்கின்றன.  அவர்களாக அந்தத் தண்ட னையை தனக்குத்தானே கொடுத்துக் கொண்டார்களா என்ன? உடலை ஒடுக்கும் தண்டனைகளுக்கும் வரலாறு இருக்கிறது.  மனிதன் கண்டுபிடித்த மிக மோசமான விஷயங்களில் ஒன்று,  தண்டனைக் கருவிகளைக் கண்டுபிடித்தது.  உலகில் மனிதனைத் தண்டிக்கும் கருவிகள் மற்றும் அது சார்ந்த பரிவர்த்தனைகள் வேகமாகப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.  உலகெங்கும் ஒரு மனிதனை தண்டிப்பதில்  இன்னொரு மனிதன் உள்ளூர சந்தோஷம் அடை கிறான்.  தண்டனைகளின் வரலாற்றில் ஒரு பகுதி தண்டனைக் கருவிகளின் வரலாறு. 

தமிழர்களின் தண்டனை முறைகளைப் பாருங்கள். தோல்வியுற்ற  மன்னனின்  ஊரைத் தீக்கிரையாக்குதல்,  பெண்களின் கூந்தலை அறுத்துக் கயிறு திரித்தல், தோல்வியுற்ற மன்னனின் மணிமுடியை உருக்கிக்  காலடியில் பலகையாகப்  போடுதல்,  செருப்பாக அணிதல், தோல்வியுற்ற மன்னனின்  அரண்மனையைத் தீவைத்து எரித்துக் கழுதை பூட்டி ஏரால் உழுதல்,  பவுத்தர், சமணர் போன்றவர்களை அவ மானப்படுத்தி,  தலையை எண்ணெயில் ஊற வைத்து சித்திரவதை செய்தல்,  பெண்ணைத் திருமணம் செய்ய மறுக்கிறான் என்று பொய்க்கார ணம் சொல்லி  மனிதனை சாம்பல் பூசி மயானத்தில் உயிரோடு புதைத்தல்,  நிலத்தில் பசு மேய்ந்த தற்காக அந்தப் பசுவின் சொந்தக்காரரின் கண்களைப் பறித்தல்,  கழுவேற்றுதல்,  யானை யின் காலால் இடறச் செய்தல், வாளால்  வெட்டிக் கொல்லுதல்,  சுண்ணாம்பு காளவாயில் போட்டுக் கொல்லுதல்,  மொட்டையடித்துக் கழுதைமேல் அமரவைத்துக் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலம் விடுதல்.  இதையெல்லாம் விட ஒரு பெரும் கொடுமை, தேவரடியார் எனப்பட்ட கோவில் பணிப்பெண்க ளைத்  தண்டிப்பதற்கு அவர்களின் அந்தரங்கக் குறியில் திரிசூலக் குறியிட்டு அதற்குக்  கதுப்புலி  குறி என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். 

குறுந்தொகையில் ஒரு பாடல் இருக்கிறது.  பரணர் பாடிய பாடல்.  ஆற்றோரத்தில் ஒரு மா மரம் இருக்கிறது. அதில் காய்த்த மாம்பிஞ்சு ஒன்று  உதிர்ந்து கீழே விழுந்துவிட்டது.  குளிக்கப்போன சிறுமி ஒருத்தி இந்த மாம்பிஞ்சை எடுத்துச் செல்கிறாள்.  அந்த மாமரம் மன்னனுக்கு சொந்தமானது. மன்னருக்கு சொந்தமான மாமரத்திலிருந்து ஒரு மாம்பிஞ்சினை  ஒரு சிறுமி எடுத்துக்கொண்டு விட்டாள் என்பதற்காக அவளுக்குக் கொலை தண்டனை வழங்கப்படுகிறது .  பெண்ணின் தந்தை அவளுடைய எடைக்கு எடை பொன்தருகிறேன் அவளை விட்டு விடுங்கள் என்று மன்றாடுகிறார்.  ஒத்துக்கொள்ளவில்லை.  அவளுக்கு ஈடாக ஏழு யானைகளைத் தருகிறேன்.  அவளை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுகிறார். அப்படியும் மன்னன் மனம் இரங்கவில்லை.  அவள் தலை துண்டிக்கப்படுகிறது. இப்படிக் கொடூரமான தண்டனை வழங்கிய மன்னனை இனிமேல் எந்தக்கவியும் பாடமாட்டான்; எந்தப் புலவனும் மன்னன் வீடு தேடிப்போய் பரிசுக்கு நிற்க மாட்டான் என்று ஒதுக்கி வைத்த நிகழ்வைக் குறுந்தொகை சுட்டிக்காட்டுகிறது. இது குற்றத்திற்கும் தண்டனைக்குமானதொரு  கடந்த கால வரலாறு.

(‘உலக இலக்கிய பேருரைகள்’ நூலிலிருந்து...)