headlines

img

முற்றாக விட்டொழித்திடுக!

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா நாயக்கர்பட்டியில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு அறிவித்துள் ளது. இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். 

ஆனால் அதே நேரத்தில் இந்தத் திட்டம்  தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டி ருப்பதாகவும் சுரங்கப் பகுதியின் எல்லையை மறு ஆய்வு செய்யுமாறு இந்திய புவியியல் ஆய்வு அமைப்பை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது  ஏற்கத்தக்கதல்ல. இத்திட்டத்தை முற்றாகக் கைவிட வேண்டும். 

மேலூர் தாலூகாவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி கொடுத்தது. இதற்கு கடும்  எதிர்ப்பு எழுந்தது. நாடாளுமன்ற மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங் கடேசன் உட்பட கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

தமிழக சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து திட்டத்தை எப்படியாவது கொண்டுவர வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தது. நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி உள்ளிட்ட அந்த பகுதி கிராம மக்கள் ஒன்றுபட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மூன்று நாள் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. 

இந்தப் பகுதி மக்கள் கொந்தளித்து எழுந்த னர். தமிழக அரசும் இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என உறுதிபடத் தெரிவித்த நிலையில்தான் ஒன்றிய அரசு சற்றுப் பின்வாங்கியுள்ளது. ஆனாலும் கூட  மறு ஆய்வு என்ற பெயரில் மாய்மாலம் செய்ய  முயலுகிறது. இந்தப் பகுதி பல்லுயிர் வளப்பகுதி யாகவும், தொல்லியல் சின்னங்கள் நிறைந்தப் பகுதியாகவும் விளங்குகிறது. இந்தப் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது என்பது இயற்கைச் சமநிலையையும், பல்லுயிர் பெருக்கத்தையும், வரலாற்றுத் தொன்மையையும் ஒருசேர பலிகொடுப்பதாக அமைந்துவிடும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் இயற்கை வளங் களை வகைதொகையின்றி கொள்ளையடிப்ப தற்கு ஏதுவாகவே 1957ஆம் ஆண்டு சுரங்கம்  மற்றும் கனிமங்கள் சட்டத்தில் 2021ஆம் ஆண்டு  ஒன்றிய அரசு திருத்தம் கொண்டுவந்தது. இதன்படி முக்கிய கனிமங்களுக்கு ஏலம்  கொடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடமிருந்து ஒன்றிய அரசுக்கு மாற்றப்பட்டது. இது மாநில உரிமைகளின் மீதான தாக்குதலும் ஆகும். சுரங்கம் மூலம் கிடைக்கும் வருவாய் மாநில அர சுக்கே கிடைக்கும் என்பது போன்ற வாதங்கள் ஏற்கத்தக்கது அல்ல. கல்வியை மாநிலப் பட்டி யலுக்கு மாற்ற வேண்டும் என்பது போல சுரங்கம் மற்றும் கனிமங்களுக்கு ஏலம் விடும் அதிகாரத்தையும் மாநில அரசுக்கு மாற்ற வேண்டும். டங்ஸ்டன் திட்டத்தை முற்றாகக் கைவிடும் வரை மக்கள் போராட்டம் ஓயாது.