ரபேல் போர் விமான ஊழல் வழக்கில் தொடர்ந்து பாஜக தலைமையிலான மோடிஅரசு மக்களை மட்டுமின்றி உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றி வந்தது. ஆனால் இந்த முறை மோடி அரசின் கோரிக்கைகளை நிராகரித்த உச்சநீதிமன்றம், சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மீது விரிவானவிசாரணை நடத்தப்படும் என தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தீர்ப்பு மக்களுக்கு ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.ரபேல் போர்விமான கொள்முதலில் மோடிஅரசு செய்துள்ள மெகா ஊழல் தொடர்பானஆதாரங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றன. பிரதமர் மோடியே நேரடியாக ஈடுபட்டுள்ள இந்த ஊழலில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என பாஜகவினர் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த முறை உச்சநீதிமன்றம் ஏமாறுவதாக இல்லை என்பதை தற்போது வழங்கியிருக்கும் தீர்ப்பின் மூலம் உணர்த்தியிருக்கிறது. ஏற்கனவே ரபேல் ஊழல் தொடர்பாக நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்தவேண்டும். தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஊழல் நடைபெறவில்லை என தீர்ப்பளித்தது. காரணம் அந்த மனு விசாரணைக்கு வந்த போது மோடிஅரசு ரபேல் விமானங்களின் விலை விபரங்கள் மத்திய தணிக்கை குழுவுடன் பொதுக்கணக்குக்குழுவுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்து ஏமாற்றியதுபின்னர்தான் தெரியவந்தது.
இந்திய வரலாற்றில் இதுவரை எந்த ஒரு மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தை பாதுகாப்பு விவகாரங்களில் இப்படி ஏமாற்றியது இல்லை. பொதுக்கணக்கு குழு தலைவராக உள்ள மல்லிகார்ஜூன கார்கே அப்படி ஒரு அறிக்கையை நான் பார்க்கவே இல்லை என்றார். உடனே தாக்கல் செய்யப்பட்ட விபரங்களை உச்சநீதிமன்றம் தவறாக புரிந்து கொண்டது என மீண்டும் மோடி அரசு அந்தர் பல்டி அடித்தது. அதற்கடுத்து, ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறுவனத்திற்காக பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்பு விதிகளை மாற்றியதைதி இந்து ஆங்கில நாளேடு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. உடனே ஆவணங்கள் திருடப்பட்டிருக்கிறது என நீதிமன்றத்தில் ஒப்பாரி வைத்தது. அதைக்கூட பாதுகாக்கமுடியவில்லையா என்று கேள்வி எழுந்தவுடன் இல்லை இல்லை நகல்தான் எடுக்கப்பட்டிருக்கிறது என பின்வாங்கியது.அப்போதும் கூட பிரதமர் மோடி வாய்திறக்கவில்லை. மாறாக ரபேல் ஒப்பந்தம் தேசத்தின் ரகசியம் என தொடர்ந்து ஓடி ஒளிந்து வருகிறார். தற்போது உச்சநீதிமன்றம் மத்திய அரசின் உள்நோக்கத்தை புரிந்து கொண்டு, சீராய்வுமனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஏற்கக் கூடாது என்ற மத்திய அரசின் வாதத்தை நிராகரித்திருக்கிறது. மேலும் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இதோடு நின்றுவிடாமல் வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கும் பிரதமர் உள்ளிட்ட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.