உலகில் சிறந்த உயர்கல்விநிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி யிருப்பது மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்கலைக்கழக வளாக பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் 80 சதவிகித சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. அந்த கேமராக்கள் வெறும் காட்சி பொருள்தானா? இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர் ஞான சேகரன் ஒரு தொழில் முறை குற்றவாளி என காவல்துறையே கூறியுள்ளது. ஏற்கனவே 15 வழக்கு களில் சம்பந்தப்பட்டுள்ளார். அப்படிப்பட்ட நபர் நாள் தோறும் பல்கலைக்கழகத்திற்குள் எந்தவிதத் தடை யும் இல்லாமல் எப்படி வந்து செல்லமுடிந்தது.
ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை விளை வாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் பல தன்னாட்சி அங்கீகாரம் மற்றும் நிகர்நிலை அந்தஸ்து பெற்றுவிட்டன. இதனால் பல்கலை.க்கு ஒன்றிய அரசு ஒதுக்கி வந்த நிதி கணிசமாக நிறுத்தப்பட்டுவிட்டது. மாநில அரசு ஒதுக்கி வந்த ரூ. 12 கோடி நிதியும் எப்போதோ நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பல்கலைக் கழ கத்தில் காவலாளிகள், தோட்டப்பணியாளர்கள் முதல் உதவி பேராசிரியர்கள் வரை ஒப்பந்தத் தொழிலாளர்கள் அல்லது அவுட்சோர்சிங் தொழி லாளர்கள். அவர்களது பணியே பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
இந்த வழக்கில் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ள போதிலும் முதல் தகவல் அறிக்கையை ஊடகங் களுக்கு கசியவிட்டது கடும் கண்டனத்திற்குரியது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடு மையை வெளியில் சொல்வதை தடுப்பதற்கான ஏற்பாடா இது என்று கேட்கத் தோன்றுகிறது. இதற்கு காரணமான காவல்துறை உயர்அதிகாரி கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் நீதி கிடைக்க குற்றத்தில் ஈடுபட்ட நபருக்கு உரிய தண்டனையை பெற்றுத்தரும் வகையில் காவல்துறையின் நடவடிக்கைகள் அமையவேண்டும். துணிச்சலாக வந்து புகார் கொடுக்கும் பெண்கள் குறித்த விவரங்களை பாதுகாக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டுள்ள கடுமையான நிதிப் பற்றாக்குறை செயல்பாடின்றி கிடக்கும் சிசிடிவி கேமராக்களை பழுது பார்க்க முடியாத மிக மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நிர்பயா நிதியை முறையாக பயன்படுத்துவதும் அவசியம். வழக்கம் போல பாஜகவும், அதிமுகவும் இந்த பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேடத்தான் துடிக்கிறார்களே தவிர, நடந்த சம்பவத்திற்கு நீதிகிடைக்க அல்ல. மேலும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி குறைப்பட்டு வருவது குறித்து இக்கட்சிகள் பேச மறுப்பது வெட்கக்கேடானது.