2004 டிசம்பர் 26. தமிழக கடலோரம் முழு வதும் அலைகள் ஆர்ப்பரித்த நாள். நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நாள். இன்று, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த பேரழிவிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களையும், இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய தருணம் இது.
பேரிடர் மேலாண்மையில் சமூக பங்கேற்பு, உள்ளூர் அறிவு மற்றும் நிறுவன ரீதியான ஆதரவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அணுகுமுறை எவ்வாறு வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதற்கு நாகப்பட்டினம் ஒரு சிறந்த உதாரணம். வாலிபர் சங்கம் உள்ளிட்ட மக்கள் இயக்கங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஆகியவை பேரிடர் மேலாண்மை யில் முக்கிய பங்கு வகித்தன.
இந்திய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் (ITEWC) 2007-ல் நிறுவப்பட்டது. அபாய மதிப்பீட்டு முறைகள் மேம்படுத்தப்பட்டன. பேரிடர் மேலாண்மை கட்டமைப்புகள் வலுப்படுத்தப் பட்டன - இவையனைத்தும் நமது தயார்நிலையை மேம்படுத்தியுள்ளன என்பதில் ஐயமில்லை.
ஆனால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை (திருத்த) மசோதா 2024 கவலை அளிக்கிறது. சமூக பங்கேற்பையும், பொறுப்புக்கூறலையும் குறைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த மசோதா, கடந்த இருபது ஆண்டுகளில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களுக்கு முரணாக உள்ளது.
குறிப்பாக, பேரிடர்களால் பாதிக்கப்படக் கூடிய குழுக்கள் - பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், தலித் மக்கள், திருநங்கை யர் - பற்றிய குறிப்புகள் இந்த மசோதாவில் இல்லாதது பெரும் குறைபாடாகும். 2004 சுனாமி நமக்கு கற்றுத்தந்த முக்கிய பாடங்களில் ஒன்று - பேரிடர்கள் சமூகத்தின் எல்லா பிரிவினரையும் ஒரே மாதிரியாக பாதிப்பதில்லை என்பதுதான்.
எனவே, சமூக பங்கேற்பை வலுப்படுத்த வேண்டும்; அனைத்து மட்டங்களிலும் பொறுப்புக் கூறல் அவசியம்; பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான சிறப்பு கவனம் தேவை; தெற்காசிய நாடுகளுடன் கூட்டுறவை வளர்க்க வேண்டும்; உள்ளூர் அறிவு முறைகளை பாதுகாக்க வேண்டும்.
2004 சுனாமி நமக்கு கற்றுத்தந்தது - பேரிடர் தாங்கும் திறன் என்பது வெறும் உயிர் பிழைத்தலோடு நின்றுவிடக்கூடாது, அது ஒரு முழுமையான மாற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டும். இந்த சோகமான நினைவு தினத்தில், சட்ட மாற்றங்கள் நமது கூட்டு திறனை மேம்படுத்தும் வகையில் அமைய வேண்டுமே தவிர, அதனை குறைக்கும் வகையில் இருக்கக்கூடாது.
கொள்கை வகுப்பாளர்கள் பேரிடர் மேலாண்மை சட்டத்திற்கான முன்மொழியப் பட்ட திருத்தங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.