பாக்ஸிங் டே டெஸ்டில் நிதானமாக ஆடிய இந்திய வீரர் நிதீஷ் குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகள் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒரு போட்டில் சமனில் முடிந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 474 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய(டிச.27) 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 46 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா தரப்பில் பண்ட் 6 ரன்னுடனும், ஜடேஜா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்றைய 3ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே பண்ட் 28 மற்றும் ஜடேஜா 17 ரன்களில் வெளியேறினர்.
இதனால் இந்தியா 222 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்தியா பாலோ ஆனை தவிர்க்க வேண்டும் என்றால் 275 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலையில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதில் சுந்தர் 50 ரன்னிலும், அடுத்து வந்த பும்ரா ரன் எடுக்காமலும் வெளியேறிய நிலையில், நிதானமாக ஆடிய நிதீஷ் குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் இது அவரது முதல் சதமாகும். இறுதியில் 3ஆம் நாள் முடிவில் இந்தியா 116 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 358 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா தரப்பில் நிதீஷ்குமார் ரெட்டி 105 ரன்னுடனும், சிராஜ் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நாளை(டிச.29) 4ஆம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.