அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, சீனாவுக்கு எதிரான ஏராளமான பொய்கள் மற்றும் அவதூறுகளுடன் அப்பட்ட மான கம்யூனிச எதிர்ப்பு விஷத்தை கக்கியுள் ளார். “21 ஆம் நூற்றாண்டை இன்னும் சுதந்திர மானதாக நாம் அனுபவிக்க வேண்டுமென்றால் அது சீனாவின் நூற்றாண்டாக இருக்கக் கூடாது; கம்யூனிசத்தின் நூற்றாண்டாக இருக்கக் கூடாது; சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் கனவுகளை தகர்த்தாக வேண்டும்” என்று வெறிக் கூச்சல் எழுப்பியுள்ளார். மேலும், “கம்யூனிச சீனா மார்க்சிய - லெனினிய ஆட்சியாக இருக்கிறது; ஜின்பிங் இந்த சிந்தனையில் ஊறிப் போனவர்; அதற்கு எதிராக ஒரு யுத்தம் அவசியமாகிறது” என்றும் பாம்பியோ கூப்பாடு போட்டுள்ளார். சீனாவுக்கு எதிராக பகிரங்கமான பனிப்போரை அவர் பிரகடனம் செய்துள்ளார். அதுவும், முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்டு நிக்சனின் இல்லத்தில் உள்ள நூலகத்தில் அமர்ந்து கொண்டு இத்தகைய வெறுப்பு பேட்டி யினை அளித்துள்ளார்.
உண்மையில் நிக்சன் தான், சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றத்தை கொண்டு வந்தவர். 1972 இல் பெய்ஜிங்கிற்கு சென்ற அவர், சீன பெருந்தலைவர் மாவோவை நேரில் சந்தித்து, அமெரிக்கா சீனாவுக்கு எதிராக இல்லை என்று பேச்சுவார்த்தை நடத்தி, அதன்விளைவாக 1979 இல் அமெரிக்கா - சீனா இடையிலான முழுமையான ராஜீய உறவுகள் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தார். அத்தகைய நிக்சனின் நூலகத்தில் அமர்ந்து கொண்டு, வரலாற்றை புரட்டிப் போட முயற்சிக்கிறார் டிரம்பின் வெளி யுறவு அமைச்சர். மக்கள் சீனம் பெரும் சக்தியாக எழும்; அதன் மாபெரும் தொழிலாளர் சந்தையும், நுகர்பொருள் சந்தையும், உற்பத்தி திறனும் அமெரிக்க முத லாளித்துவத்திற்கு தேவை என்ற அடிப்படை யிலேயே நிக்சன் சீனாவோடு உடன்பாடு கண்டார். இன்று சீனாவின் பொருளாதார எழுச்சியை - தற்போதைய கொரோனா காலத்து மருத்துவ சாதனைகளை, டிரம்ப் நிர்வாகத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
சீனாவுடன் தொடர்ச்சி யான வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகிற அமெ ரிக்க நிர்வாகம், முதலாளித்துவத்தின் அடிப்படை எதிரியான கம்யூனிசத்தின் மீதான தனது வெறித்தனமான தாக்குதலுக்கான களமாகவும் சீன எதிர்ப்பை முன்வைக்கிறது. ‘சுதந்திரமான உலகம்’ என்று மீண்டும் மீண்டும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கூக்குரல் எழுப்பு வது, மேலும் மேலும் மூலதனத்தையும், லாபத்தை யும் குவிக்கும் முதலாளித்துவச் சுரண்டலின் சுதந்திரம் என்பதே ஆகும். இதற்காக உலகம் முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் யுத்தங்க ளையும் கொடூரமான பொருளாதார தடைகளை யும் ஏற்றுமதி செய்கிறது. வியட்நாம், கியூபா, வட கொரியா, வெனிசுலா, பிரேசில் உள்பட சோசலிச சித்தாந்தை உயர்த்தி பிடிக்கும் நாடுகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும், தலைவர்களுக்கும் எதிராக விஷத்தைக் கக்குகிறது. கம்யூனிசத்திற்கு எதிரான யுத்தம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு எதிரான யுத்தம். மனிதகுலம் நிச்சயம் இதை உணரும். திருப்பித் தாக்கும்.