games

img

செஞ்சூரியன் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி  

செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.  

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 123 ரன்களும், மாயன் அகர்வால் 60 ரன்களும் எடுத்தனர்.  

அதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களில் தென்னாப்பிரிக்கா ஆல் அவுட்டானது.  இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  

இதனையடுத்து 129 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 50.3 ஓவரில் 174 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 34 ரன்களும், கே.எல் ராகுல் 23 ரன்களும் எடுத்தனர்.  305 ரன் இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்கா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்திருந்தது. கேப்டன் எல்கர் 52 ரன்னுடன் களத்தில் இருந்தார். பும்ரா 2 விக்கெட்டும், முகமது ‌ஷமி, சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.    

இன்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. பும்ராவின் நேர்த்தியான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் எல்கர் 77 ரன்னில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த டி காக்(21) சிராஜ் பந்து வீச்சிலும் முல்டர் (1) சமி பந்து வீச்சிலும் வெளியேறினார்.      

உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்கா அணி 182 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து ஆடி வந்தது. பவுமா 34 ரன்னிலும் ஜன்சன் 5 ரன்னில் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளை முடிந்த சிறிது நேரத்தில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஒரே ஓவரில் அஸ்வின் கடைசி 2 (ரபாடா நிகிடி) விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.    

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது. 

;