இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ரா உலக சாதனை படைத்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியின் கடைசி ஆட்டம் கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி பெர்மிங்காமில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய அணியின் புதிய கேப்டனாக பும்ரா தலைமை தாங்கி வழிநடத்தி செல்கிறார். கிட்டதட்ட 35 வருடங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட் வரலாற்றில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாகிறார்.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னங்சில் இந்திய அணி 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்திருந்தது. 2வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு ஜடேஜா சதம் விளாசி ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டுக்கு பேட்டிங் வந்த கேப்டன் பும்ரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வீசிய 84வது ஓவரில் 35 ரன்கள் விளாசி உலக சாதனையை பும்ரா படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட்.
அதாவது பிராட் வீசிய முதல் பந்தில் பவுண்டரி விளாசினார். அடுத்த பந்தில் மட்டும் பிராட் 5 வைடுகளை வீசினார். மீண்டும் வீசப்பட்ட 2வது பந்தை பிராட் நோ பாலாக வீசினார். அந்த பந்தில் பும்ரா சிக்ஸர் அடித்தார். மீண்டும் வீசப்பட்ட 2வது பந்தில் பும்ரா பவுண்டரி விளாசினார். 3வது பந்தில் மீண்டும் பும்ரா பவுண்டர் விளாசினார். 5வது பந்தில் பும்ரா மீண்டும் சிக்ஸர் அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தார். இந்த ஒரு ஓவரில் மட்டும் இந்தியாவிற்கு மொத்தம் 35 ரன்கள் கிடைத்தது. பும்ரா மட்டும் 29 ரன்கள் எடுத்தார்.
கடந்த 2003ல் தென்னாப்பிரிக்க வீரர் ஆர்.பீட்டர்சன் வீசிய ஒரு ஓவரில் லாராவும், 2013ல் ஆண்டர்சன் பந்துவீச்சில் பெய்லியும், 2020ல் ரூட் வீசிய ஓவரில் கே.மகாராஜூம் தலா 28 ரன்களை அடித்து சாதனை படைத்திருந்தனர். தற்போது அந்த சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
ஸ்டூவர்ட் பிராட் ஓவரில்தான் 2007 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய வீரர் யுவராஜ் சிங் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸ் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.