மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில், 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி சிறப்பாக விளையாடினர். இதில் மந்தனா 30 ரன்களும், ஷபாலி 42 ரன்களும் எடுத்து வெளியேறினர். ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய யாஷிகா பாட்டியா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
கடைசி நேரத்தில் ரிச்சா கோஷ் 26 ரன்களும், ரானா 27 ரன்களும் எடுத்து சற்று கைகொடுக்க இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்தது. பூஜா 30 ரன்களும், கோஸ்வாமி 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் ரிது மோனி 3 விக்கெட்களும், நஹிடா அக்தர் 2 விக்கெட்களும், ஆலம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 230 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. இந்திய வீராங்கனைகளின் அசத்தலான பந்துவீச்சில் வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. இறுதியில் 40.3 ஓவர்களில் 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரானா 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக யாஷ்திகா பாட்டியா தேர்வானார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியுடன் வரும் மார்ச் 27 ஆம் தேதி மோதவுள்ளது.