வங்கதேசம் தலைநகர் டாக்காவில் உள்ள ரூப்கன்ஜ் பகுதியில், ஷெசான் என்ற பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதில், 100க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். 6 மாடிகளைக் கொண்ட இந்த தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்தது. கட்டிடத்தின் அடித்தளத்திலிருந்த பட்டாசுகள் மற்றும் வேதியியல் பொருட்கள் காரணமாகத் தீ அதிக அளவில் பரவியது. இதன் காரணமாகத் தீயிலிருந்து தப்பிக்கத் தொழிலாளர்கள் பலர் கட்டிடத்திலிருந்து குதித்து படுகாயமடைந்தனர்.
இந்த தீ விபத்தில் 52 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 50 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல ஊழியர்களைத் தோடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.