யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக ஜொலித்த யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு, விரைவில் திரைப்படமாக்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டி-சீரிஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளப்பக்கதில் வெளியிட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தில் யுவராஜ் சிங் கதாபாத்திரம் ஏற்று நடிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து, இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முதுகெலும்பாக விளங்கியவர் யுவராஜ் சிங். கிரிக்கெட் விளையாட்டில் முன்னணி பேட்ஸ்மேன் ஆகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் வலம் வந்த யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அதன்பின் தீவிர சிகிச்சை எடுத்து மீண்டு வந்துள்ளார். இதன் காரணமாக கிரிக்கெட் மட்டுமன்றி பிற விளையாட்டு வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் யுவராஜ் சிங் மீது தனி அபிமானம் எப்போதுமே உண்டு.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்துள்ள யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்படும் திரைப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.