games

img

விளையாட்டு...

தொடரை கைப்பற்றுமா இந்தியா? இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி

வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் என 2 விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியாவிற்கு சுற்றுப்பய ணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் தமிழ்நாடு தலைநகர் சென்னையில் நடைபெற்ற நிலையில், இந்த ஆட்டத்தில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில், 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெள்ளியன்று உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தொடங்குகிறது. 2ஆவது டெஸ்ட் போட்டியிலும்  வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும்,  பதிலடி வெற்றியுடன் தொடரை சமன் செய்யும் முனைப்பில் வங்கதேச அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த  ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இடிந்து விழும் நிலையில் கான்பூர் மைதானம் ரசிகர்களின் உயிரோடு விளையாடும் உ.பி., பாஜக அரசு

இடிந்து விழும் நிலையில் கான்பூர் மைதானம்
 

சர்வதேச போட்டிகளாக இருந்தாலும் சரி, சாதாரண போட்டிகளாக இருந்தாலும் சரி ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் மாநில அரசு சார்பாக மைதானம் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறதா என்று சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான கான்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், கான்பூர் மைதானம்  ரசிகர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறதா என உத்தரப்பிரதேச பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் மைதானத்தில் இருக்கும் “பால்கனி சி” (5000 பேர் அமரலாம்) பகுதி இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஆனால் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ள உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம் இந்த எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் பலவீனமாக இருப்பதால் “பால்கனி சி” பகுதியில் உள்ள 4,800 டிக்கெட்டுக்கு பதில் 1,700 டிக்கெட்டுகளை மட்டும் விற்க முடிவெடுத்துள்ளது. இடிந்து விழும் நிலையில் உள்ள “பால்கனி சி” பார்வையாளர் மாடத்தை தடை செய்யப் பட்டப் பகுதியாக அறிவிக்காமல், டிக்கெட் வருவாய்க்காக அனுமதி அளித்து, ரசிகர்களின் உயிரோடு விளையாடும் உத்தரப்பிரதேச அரசின் முடிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்துத்துவா குண்டர்கள் மீண்டும் மிரட்டல் கான்பூரில் பலத்த பாதுகாப்பு

வங்கதேச நாட்டில் கடந்த மாதம் அரசுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறையில் அந்நாட்டில்  சிறுபான்மையினராக வாழும் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியது. இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு இந்துத்துவா அமைப்புகள்,”இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தியதால் வங்கதேச அணி இந்தியாவில் கிரிக்கெட் விளையாடக் கூடாது” எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு தலைநகர் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். ஆனால் தமிழ்நாடு அரசு பாதுகாப்பை பலப்படுத்தி போராட்டத்தை நடத்தவிடாமல் தடுத்தது.  இந்நிலையில், இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வங்கதேச அணியினரை விளையாட விட மாட்டோம் என இந்துத்துவா அமைப்புகள் போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் கான்பூர் மைதானம் பலத்த பாதுகாப்பில்  கொண்டு  வரப்பட்டுள்ளது.