games

img

விளையாட்டு...

2ஆவது வெற்றியை ருசிக்குமா இந்தியா?

இன்று 4ஆவது டெஸ்ட் போட்டி

5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  பார்டர் - கவாஸ்கர் கோப்பை என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் (பெர்த்) இந்திய அணியும், இரண்டாவது ஆட்டத்தில் (அடிலெய்டு) ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி (பிரிஸ்பேன்) டிராவில் நிறைவடைந்தது. இந்நிலையில், 4ஆவது டெஸ்ட் போட்டி “பாக்சிங் டே (கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி  நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள்)” என்ற பெயரில் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பார்டர் - கவாஸ்கர் தொடரை கைப்பற்றும் வாய்ப்புக்கு சாதகமான சூழல்  ஏற்படும். அதனால் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் தீவிர பயிற்சியுடன் களமிறங்குகின்றன. அதனால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மெல்போர்ன் மைதானத்தில் இந்திய வீரர் ரோகித் சர்மா, கோலி, கே.எல்.ராகுல், பண்ட் உள்ளிட்ட மூத்த வீரர்கள் நல்ல பேட்டிங் அனுபவம் கொண்டிருப்பதால், ரன்வேட்டை நிகழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா
நேரம்:காலை 5:30மணி (இந்திய நேரம்
இடம் : மெல்போர்ன், ஆஸ்திரேலியா
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)
(கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெறும் 
கிரிக்கெட் போட்டிகள் பாக்சிங் டே என அழைக்கப்படுகின்றன)

6 மி.மீ., புற்கள் ; தாக்குப்பிடிக்குமா இந்தியா

மெல்போர்ன் மைதானத்தின் பிட்ச் பகுதியில் 6 மி.மீ., அளவில் புற்கள் உள்ளன. மழைக் காலம் என்பதால் ஈரப்பதம் மூலம் மைதான பிட்ச் பகுதியில் புற்கள் வளர்ந்துள்ளன. இவ்வளவு உயரத்தில் புற்கள் இருப்பது நல்லது அல்ல. காரணம் 3 மி.மீ., உயரத்தில் புற்கள் இருந்தாலே, பந்து தாறுமாறாக எகிறும். மெல்போர்ன் மைதானத்தின் பிட்ச்சில் 6 மி.மீ., உயரத்தில் புற்கள் உள்ளன. சாதாரணமாக வீசப்படும் பந்துகள் கூட தலைக்கு மேல் பறக்க வாய்ப்புள்ளது. கிடைமட்டமாக ஸ்டெம்பை நோக்கி வீசப்படும் பந்துகள்  காயங்களை ஏற்படுத்தும் என்பதால், இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் எப்படி பேட்டிங் செய்யப்  போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஆஸ்திரேலிய வீரர்கள் புற்கள் உள்ள பிட்சில் விளையாடி பழக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களுக்கு  6 மி.மீ., உயரத்தில் புற்கள் இருப்பது எவ்வித பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மழை வருமா?

பிரிஸ்பேன் போட்டியின்போது மழை அடிக்கடி விசிட் அடித்து போட்டியின் சுவாரஸ்யத்தை கெடுத்தது மட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய அணியின் வெற்றி வாய்ப்பையும் பறித்தது. இதனால் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மழை ஒரு முக்கிய காரணியாக மாறி யுள்ளது.  4ஆவது டெஸ்ட் போட்டி நடக்கும் மெல்போர்ன் நகரத்தில் போட்டி நடைபெறும் 5 நாட்களிலும் மழை பெய்வதற்கான சூழல் உள்ளது என ஆஸ்திரேலிய நாட்டு வானிலை அறிக்கைகள் மூலம் தகவல் தெரிவித்துள்ளன.  இதனால் இந்தியா - ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பதிலாக மெல்போர்ன் மைதானத்தில் மழையும் புகுந்து விளையாட வாய்ப்புள்ளது.  மெல்போர்னும்... மழை அறிகுறியும்...  வியாழன் - சாரல் முதல் லேசான     அளவில் கனமழை வெள்ளி - வானம் மேகமூட்டத்துடன், சாரலுக்கு வாய்ப்பு சனி - பலத்த மழைக்கு வாய்ப்பு ஞாயிறு - வானம் மேகமூட்டத்துடன், சாரலுக்கு வாய்ப்பு திங்கள் - வானம் மேகமூட்டத்துடன், சாரலுக்கு வாய்ப்பு