6.30 மீட்டர் போல்ட் வால்டில் மீண்டும் உலக சாதனை படைத்த சுவீடன் வீரர்
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் ஆடவர் போல்ட் வால்ட் பிரிவில் (தடை ஊன்றி தாண்டுதல்) சுவீடன் நாட்டைச் சேர்ந்த அர்மாண்ட் டுப்லாண்டிஸ் 6.30 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். குறிப்பாக தனது உலக சாதனையை தானே 14ஆவது முறையாக முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
சியாட்டில் சவுண்டர்ஸ் அணிக்கு மெஸ்ஸியின் இன்டர் மியாமி பதிலடி
5ஆவது சீசன் லீக்ஸ் கோப்பையின் இறுதி ஆட்டம் செப்., முதல் வாரம் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாடும் இன்டர் மியாமி அணியை, சியாட்டில் சவுண்டர்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இருந்தும் இன்டர் மியாமி படுதோல்வியுடன் கோப்பையை பறிகொடுத்தது கால்பந்து உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், லீக்ஸ் கோப்பை முடிவடைந்த பின்பு மேஜர்ஸ் லீக் தொடரில் இன்டர் மியாமி - சியாட்டில் சவுண்டர்ஸ் அணிகள் மீண்டும் மோதின. இந்திய நேரப்படி புதன்கிழமை அன்று நடைபெற்றது. இரு அணி ரசிகர்களும் புளோரிடாவின் (அமெரிக்கா) சேஸ் மைதானத்தில் குவிந்து இருந்தனர். இந்த ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மியாமி அபார வெற்றி பெற்று சியாட்டில் சவுண்டர்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்தது. மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச டி-20 தரவரிசை தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி முதலிடம்
இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கர வர்த்தி சர்வதேச டி-20 கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி மொத்தமாக 121 டி-20 கிரிக்கெட் போட்டிகளில் 157 விக்கெட்டுகளை குவித்துள் ளார். குறிப்பாக 20 சர்வதேச டி-20 போட்டிகளில் 35 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்துக்கு முன்னேறி யுள்ளது குறிப்பிட்ட சாதனை அம்சம் தான். 34 வயதாகும் வருண் சக்கரவர்த்தி கடந்த 2021இல் இந்தியாவுக்கு டி-20 போட்டிகளில் விளையாட தொடங்கினார். இந்தாண்டு முழுவதும் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு, முதல்முறையாக முதலிடத்தைப் பிடித்துள் ளார். சர்வதேச டி-20 அரங்கில் முதலிடத்திற்கு முன்னேறிய 3ஆவது வீரர் என்ற சாதனையை வருண் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.