தொடரை சமன் செய்யுமா இந்தியா? இன்று கடைசி டெஸ்ட் போட்டி
5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்தி ரேலிய நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பார்டர் - கவாஸ்கர் என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் (பெர்த்) இந்திய அணியும், இரண்டாவது ஆட்டத்தில் (அடிலெய்டு) ஆஸ்தி ரேலிய அணியும் வெற்றி பெற்ற நிலை யில், மூன்றாவது டெஸ்ட் போட்டி (பிரிஸ்பேன்) டிராவில் நிறை வடைந்தது. தொடர்ந்து மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு தொடங்கு கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற் றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. அதே போல பதிலடி வெற்றியுடன் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்குகிறது. இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் சிட்னி டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் நீக்கம்? ; பும்ரா கேப்டன் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் இரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒன்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவ ருக்கு பதிலாக சப்மன் கில் சேர்க்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. எனினும் ஆடும் லெவன் தொடர்பாக வியாழக் கிழமை மாலை வரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
குகேஷ், மனு பாக்கருக்கு கேல் ரத்னா 32 பேருக்கு அர்ஜுனா விருது
ஆண்டுதோறும் விளை யாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒன்றிய அரசு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டிற்கான கேல் ரத்னா விருதின் முழுப்பட்டியலை ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீராங் கனை மனு பாக்கர், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தடகள வீரர் பிரவீன் குமார், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் உள்ளிட்ட 4 பேரும் கேல் ரத்னா விருது பெறும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அர்ஜுனா இதே போல 17 பாரா தடகள வீரர்- வீராங்கனைகள் உட்பட 32 வீரர்-வீராங் கனைகள் அர்ஜுனா விருது பெறு கின்றனர். துளசிமதி முருகேசன், நித்ய ஸ்ரீ, சுமதி சிவன் உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 3 பாரா பேட்மிண்டன் வீராங் கனைகளுக்கு அர்ஜூனா விருது அறி விக்கப்பட்டுள்ளது. தில்லியில் ஜன வரி 17ஆம் தேதி நடைபெறும் விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்குகிறார்.
எதிர்ப்பிற்கு பணிந்த மோடி அரசு
கடந்த வாரமே கேல் ரத்னா விருது பட்டியல் வெளியானது. அதில் பிரவீன்குமார், ஹர்மன்பிரீத் சிங் பெயர் மட்டுமே இருந்தது. மனுபாக்கர் பெயர் இல்லை. ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றும் அவர் பெயர் இல்லாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விண்ணப்பிக்காததால் மனுபாக்கர் பெயரை சேர்க்கவில்லை என ஒன்றிய அரசு கூறியது. விண்ணப்பித்தும் விருது பட்டியலில் இருந்து புறக்கணித்ததாக மனுபாக்கரின் தந்தை கிஷான் பாக்கர் குற்றம் சாட்டினார். மேலும் ஒன்றிய அரசின் செயல்பாடு சரியில்லை ; உங்கள் குழந்தைகளை விளையாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என கிஷான் அறிக்கை வெளியிட்டார். மனு பாக்கருக்கு கேல் ரத்னா வழங்காமல் புறக்கணித்ததற்கு நாடு முழுவதும் கண்டனம் குவிந்தது. இத்தகைய சூழலில் கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய மோடி அரசு மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.