games

img

விளையாட்டு

ஆஷஸ் தோல்வியை மறைக்க வீரர்கள் மது அருந்தியதாக புகார் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக வலுக்கும் கண்டனம்

பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடர்களில் மிக முக்கியமான தொடரான ஆஷஸ் தொடரின்  நடப்பாண்டுக்கான சீசன் ஆஸ்திரேலிய நாட்டில் நடை பெற்று வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டி முடிவில், ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றி 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஒயிட் வாஷ் நோக்கி பயணித்து வரும் இங்கிலாந்து அணியின் மோசமான ஆட்டத்தை பிரிட்டன் ஊடகங்கள் நக்கலுடன் விமர்சித்து வருகின்றன.  இந்நிலையில், படுதோல்வி மற்றும் ஊடகங்களின் விமர்சனங்களை மூடி மறைக்க இங்கிலாந்து வீரர்கள் அள வுக்கு அதிகமாக மது அருந்தியதால் தான் ஆஷஸ் தொடரில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய அறிவிப்பிற்கு ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுனர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.   இதுதொடர்பாக இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் ராப் கீ-யின் செய்தி தொடர்பாளர் மூலம் வெளியான  தகவலின்படி, இரண்டாவது மற்றும் மூன்றா வது டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே வழங்கப்பட்ட இடைவெளியின் போது, இங்கிலாந்து வீரர்கள் சுமார்  6 நாட்கள் தொடர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.  குயின்ஸ்லாந்தில் உள்ள நூசா (Noosa) கடற்கரை விடுதியில் வீரர்கள் தங்கியிருந்தபோது, அங்கிருந்த உணவகங்கள் மற்றும் பார்களில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர். இது ஒரு கிரிக்கெட் தொடருக்கான இடைவெளி போல இல்லாமல், ஒரு “பேச்சுலர் பார்ட்டி” (Stag-do) போல உள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.   வீடியோ இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் போதையில் தள்ளாடும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் ராப் கீ  இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இதுபோன்று அளவுக்கு அதிகமாக மது அருந்துவதை ஏற்க முடியாது. இரவு உணவின் போது ஒரு கிளாஸ் ஒயின் அருந்துவதில் தவறில்லை. ஆனால் அது வரம்பு மீறினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இந்தத் தொடருக்கு முன்ன தாக நியூஸிலாந்தில்  ஜேக்கப் பெத்தேல் மற்றும்  ஹாரி புரூக் ஆகியோருக்கு இது போன்ற காரணங் களுக்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டது” என அவர் கூறினார்.  கண்டனம்  ஆஷஸ் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து தோல்வியடைந்து, தொடரை இழந்துள்ள நிலையில் இச்சம்பவம் வெளியே வந்துள்ளது. அதாவது வீரர்கள் பயிற்சியில் கவனம் செலுத்தாமல் மதுவில் மூழ்கியதே இந்த மோசமான தோல்விக்குக் காரணம் என கூறப்பட்டுள்ளது. இதை எப்படி ஏற்க முடியும்? விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜமானது தான். ஆனால் அதைவிட்டு மது தான் தோல்விக்கு முக்கிய பிரச்சனை என வீரர்களின் தனிப்பட்ட விவகாரங்கள் மூலம் குற்றம் சாட்டுவது கண்டனத்துக்குரியது என ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுனர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்

1.பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 2.இங்கிலாந்து அணியில் கேப்டன் ஸ்டோக்ஸ் தவிர வேறு யாரும் உறுதியான பார்மில் இல்லை.  3.இங்கிலாந்து அணியில் ஒற்றுமை இல்லை (ஆர்ச்சர் - ஸ்டோக்ஸ் மோதல்)  4. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வியூகம் அமைக்க  இங்கிலாந்து அணிக்கு எந்த திட்டமும் இல்லை 5.ஆண்டர்சன், பிராட், சவான் போன்ற நவீனகால பந்துவீச்சாளர்கள் இல்லை.  இவைகள் தான் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு காரணம் ஆகும். 

வீரர்களின் பிரைவேசி வெளியே கசிந்தது எப்படி?

விளையாட்டு வீரர்கள் ராணுவத்திற்கு நிகரான வாழ்க்கை முறையை கொண்டவர்கள். விளையாட்டு வீரர்கள் நாடு, குடும்பம் ஆகியவற்றை விட்டுவிட்டு விளையாட வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.  அதனால் விளையாட்டு, பயிற்சி, ஓய்வு நேரம் போக  வெளியே ரிலாக்ஸ் செய்ய வெளியே அனுமதி வழங்குவது வழக்கம்.  அனுமதி இல்லாமல் எந்த நாட்டு வீரர்களும் வெளியே செல்ல மாட்டார்கள். அப்படி என்றால் இங்கிலாந்து வீரர்கள் எப்படி குயின்ஸ்லாந்தில் உள்ள நூசா (Noosa) கடற்கரை மதுபான விடுதிக்கு சென்றனர். யார் அனுமதி வழங்கியது? வீரர்கள் மது அருந்தியாக வெளியான வீடியோ மற்றும் புகைப்படம் யார் வெளியிட்டது? கிரிக்கெட் விளையாட்டில் மது அருந்தக் கூடாது என்ற விதிகள் இல்லாத சூழலில், இதனை ஊடகங்கள் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பெரிதுப்படுத்துவது ஏன்? இரண்டா வது போட்டியின் போதே இங்கிலாந்து வீரர்கள் மது விருந்துக்குச் சென்றது தெரியவந்துள்ளது. ஏன் அப்பொழுதே ஊடகங்கள் முன்பு எல்லாவற்றையும் தெரிவித்து, வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? என பல்வேறு கேள்விகள் கிளம்பியுள்ளன.