games

img

ஆஷஸ் - பிரிஸ்பேன் டெஸ்ட் 40ஆவது சதமடித்தார் ஜோ ரூட்

ஆஷஸ் - பிரிஸ்பேன் டெஸ்ட்n 40ஆவது சதமடித்தார் ஜோ ரூட்

புகழ்பெற்ற மற்றும் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர் (சாம்பல் யுத்தம்) ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் (பெர்த்) போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் வியாழக்கிழமை அன்று தொடங்கியது.  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. வழக்கம் போல தொடக்க ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை (டக்கெட் - 0, போப் - 0) அடுத்தடுத்து வீழ்த்தினார். இருப்பினும் அதிர்ச்சியில் சிக்காமல் கிராவ்லி - ஜோ ரூட் அணியை சரிவில் இருந்தும் ; விக்கெட் மேலும் சரியாமல் இருக்கவும் பிரிஸ்பேன் மைதானத்தில் நங்கூரம் அமைத்தனர். கிராவ்லி (76) அரைசதமடித்து ஆட்டமிழந்தார். ஹாரி (31) சிறிது நேரம் நம்பிக்கை அளிக்க மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்த விக்கெட் சரிவுக்கு இடையே இங்கிலாந்து நாட்டின் முன்னணி நட்சத்திரம் ஜோ ரூட் டெஸ்ட் அரங்கில் 40ஆவது சதத்தை விளாசினார். குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் அவர் விளாசும் முதல் சதம் இதுவாகும். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 74 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்து இருந்தது. ரூட் (135), ஆர்ச்சர் (32) ஆகியோர் களத்தில் இருந்தனர்.

வாசிம் அக்ரமை முந்திய  ஸ்டார்க்

பிரிஸ்பேன் டெஸ்ட்  போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிச்சேல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் 3 விக்கெட்டை கைப்பற்றிய பொழுது, பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) சாதனையை ஸ்டார்க் உடைத்தார். அக்ரம் 104 டெஸ்டில் 414 விக்கெட் வீழ்த்தி இருந்த நிலையில், ஸ்டார்க் 102 டெஸ்டில் 415 விக்கெட் கைப்பற்றி அவரது சாதனையை விஞ்சினார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பை தமிழ்நாடு கேப்டன் மாற்றம்

நாட்டின் முதன்மையான உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான 18ஆவது சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் அகமதாபாத், ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. இதில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்வி என 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. இதற்கிடையே, தமிழ்நாடு அணியின் கேப்டனாக இருந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் துணை கேப்டனாக இருந்த என்.ஜெகதீசன் எஞ்சிய போட்டிக்கான தமிழ்நாடு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சாய் சுதர்சன் துணை கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு தனது 5ஆவது லீக் ஆட்டத்தில் திரிபுரா அணியை எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டென்னிஸ் அரங்கில் மீண்டும் செரினா?

டென்னிஸ் உலகில் அதிரடிக்கு பெயர் பெற்றவரும், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான பிரபல வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் (வயது 44) 2022ஆம் ஆண்டுக்கு பிறகு டென்னிஸ் அரங்கில் இருந்து ஒதுங்கினார். தொடர்ந்து டென்னிஸ் விளையாட்டிலும் இருந்து அவர் ஓய்வு பெற்றார். இந்நிலையில், மீண்டும் டென்னிஸ் அரங்கில் காலடி பாதிக்கும் வகையில் செரினா ஊக்க மருந்து சோதனைக்கு தன்னை உட்படுத்தும் வகையில், ஊக்க மருந்து தடுப்பு முகமையில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதனால் அவர் டென்னிஸ் களம் திரும்ப போகிறார் என்று தகவல் பரவி வருகிறது.