games

img

உலக தடகள சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா!  

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.  

18ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் யூஜின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது. இன்று நடைபெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டியில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய நீரஜ் சோப்ரா, தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். இதன் மூலம், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

தகுதிச்சுற்றில் அதிக தூரம் ஈட்டியை எறிந்தவர்களில் நீரஜ் சோப்ரா 2 ஆம் இடம் பிடித்தார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் 89.91 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்தார். தகுதிச்சுற்றில் 80.42 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்த மற்றொரு இந்தியரான ரோஹித் யாதவும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.  

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர், அன்னு ராணி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்று வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ராவும் ரோஹித் யாதவும் பங்கேற்கிறார்கள்.