‘‘சாம்பியன்கள் பிறக்கவில்லை; உருவாக்கப்படு கிறார்கள்’’ என்பதை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நமது விளையாட்டு வீரர்கள் நிரூபித்து காட்டிவிட்டனர்.நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்கின் பாரம்பரியம் கிரேக்கத்தில் நடைபெற்ற பண்டைய ஒலிம்பிக்கில் இருந்து வந்தது. கடந்த 124 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில், கொரோனா தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒவ்வொரு வீரர்களும் தாய் நாட்டின் பெருமையை உலக அளவில் பறைசாற்ற ஒன்று திரண்டனர். உலகமே இவர்களின் வெற்றியை உற்றுநோக்கி கரவொலி எழுப்பியது. திறமையின் அடிப்படையில் பதக்கங்களை வென்ற வீரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் போற்றி வரவேற்கப்பட்டனர்.
அதே, டோக்கியோ நகரில் ஓசையின்றியும் ஆடம்பரம், ஆர்ப்பரிப்பு இல்லாமலும் மாற்றுத்திறன் படைத்த வீரர்களின் ‘‘பாரா’’ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி முடிவடைந்தது.
வழக்கம்போல் சீன வீரர்கள் பதக்க வேட்டை நடத்தினர். 96 தங்கங்களுடன் இரட்டை சதம் அடித்து 206 பதக்கங்களை குவித்து முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டனர். துப்பாக்கிச் சுடுதல், தடகளம், பேட்மிண்டன், பளு தூக்குதல், படகு ஓட்டம், மல்யுத்தம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் 54 வீரர்கள் இந்தியா சார்பில் கலந்துகொண்டனர்.பாராலிம்பிக் வரலாற்றில் 1988, 92, 96, 2000, 2008 ஆகிய ஆண்டுகளில் ஒரு பதக்கம் கூட வெல்லாமல் நாடு திரும்பிய இந்திய வீரர்கள், இம்முறை 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று புதிய உச்சத்தை தொட்டனர்.
தங்கத்தின் தலைமகன்...
பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்று கொடுத்து சரித்திரத்தில் இடம் பிடித்தவர் முரளி காந்த் பெட்கர். 1965 ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரில் பாய்ந்த குண்டுகளால் ஒரு கையை இழந்தவர். அதுவரைக்கும் சிறந்த குத்துச்சண்டை வீரராக வலம் வந்த இவர், நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவில்லை. நீச்சலில் நீந்தினார். 1972 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று பதக்கப் பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்த அவருக்கு மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருது 2018ல் வழங்கப்பட்டது.
ஜோகிந்தேர் சிங் பேடி: ஒரு தொடரில் குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் ஆகிய மூன்று போட்டிகளில் இரண்டு வெண்கலம், ஒரு வெள்ளி என்று மூன்று பதக்கங்களை வென்ற பாராலிம்பியன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
பீம்ராவ் கேசர்கர்: ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நூலிழையில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டாலும் முதலாவது வெள்ளிப்பதக்கம் வென்ற தடகள வீரர்.
வறுமையிலும்... சாதனை!
ராஜேந்தர் சிங் ரஹேலு: பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். உடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரர்கள். தந்தை பேண்ட் வாசிப்பவர். தாய் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண். எட்டு வயதில் போலியா தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர். கூடவே முடக்கு வாதமும் வறுமையும் சேர்ந்துகொண்டது. இவர் எந்த நிலையிலும் மனம் தளராமல், உடற்பயிற்சி விளையாட்டில் ஈடுபட்டார். அவரது மன வலிமை வலுதூக்கும் போட்டியில் பங்கேற்க செய்தது. அவரது சாதனைகளுக்கு துரோணாச்சாரியார் விருதும் வழங்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு முதன்முதலாக பங்கேற்ற பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார்.
தேவேந்திர ஜஜாரியா: 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனிநபராக தங்கம் வென்று கொடுத்து இந்தியாவின் பெருமையை நிலை நாட்டினார். அதுவும் உலக சாதனையுடன் முதல் இடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதனைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவதாக வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்தார்.ராஜஸ்தானை சேர்ந்த இவர், எட்டு வயதில் மரமொன்றில் ஏறும் பொழுது மின்சாரம் தாக்கியதில் இடது கையை இழந்தவர். இவரது மனைவி பிரபல கபடி வீராங்கனை மஞ்சு.
தென்னிந்தியர்...
கிரிஷ் நாகரா கவுடா: மிகச்சிறந்த வீரரான இவர் பெங்களூரில் உள்ள உடல் ஊனமுற்றோர் விளையாட்டு சங்கத்தால் வளர்க்கப்பட்டவர். மௌனம் ஒரு தடையே இல்லை என்பதை தொடர்ந்து நிரூபித்துக் காட்டியவர். மாநில அளவில் பதக்கங்களை குவித்தவர். மைசூர் பல்கலைக் கழகத்திற்காக விளையாடி ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார். தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே வெள்ளிப் பதக்கம் வென்றது மட்டுமல்லாமல், தென்னிந்தியாவில் பதக்கம் வென்ற முதல் வீரரும் இவரே. விளையாட்டுத் துறையில் சாதித்து வரும் இவருக்கு அர்ஜூனா, பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது ஒன்றிய அரசு.
வடக்கம்பட்டி எக்ஸ்பிரஸ்..
மாரியப்பன்: சேலம் மாவட்டம் பெரிய வடக்கம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இவருடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி. குடும்பத்தை தந்தை கை விட்ட நிலையிலும் கூலி வேலை செய்து பிள்ளைகளை வளர்த்தவர் தாய் சரோஜா. செங்கல் தூக்கும் தொழிலாளியாகவும் மரக்கறி விற்பனை செய்யும் வருமானத்தில் கொண்டும் வளர்ந்தவர் மாரியப்பன். பள்ளிக்குச் செல்லும் பொழுது ஏற்பட்ட விபத்து ஒன்றில் வலதுகால் முறிந்தது. அவரது பள்ளி ஆசிரியர்கள், பயிற்சியாளர் சத்தியநாராயணா ஆகியோரின் ஆதரவால் தடகளத்தில் தடம் பதித்தார்.
2016 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ்நாட்டையும் இந்தியாவையும் தலைநிமிர செய்தார். கடந்த முறை ஏமாற்றம் அளித்தாலும் இந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்று நாடு திரும்பினார்.
தீபிகா மாலிக்: இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த வீராங்கனை. குண்டு எறிதலில் உலகின் ‘நம்பர் 1’ வீராங்கனையாக வலம்வந்த இவர், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதால் பத்மஸ்ரீ, அர்ஜூனா, மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன. பாராலிம்பிக் குழு தலைவரும் இவரே.
தங்கமான தங்கங்கள்...
அவனி லெகாரா: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் 19 வயது இளம் வீராங்கனை அவனி லெகாரா. 2012 ஆம் ஆண்டு நிகழ்ந்த கார் விபத்தில் முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, சக்கர நாற்காலியின் உதவியுடனும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடனும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்க பயிற்சிக்கு தயாரானார். தனது பயிற்சியாளரிடம் துப்பாக்கியை கடன் வாங்கி போட்டியில் பங்கேற்றவர். உலகச் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்றார். உலகச் சாம்பியன், பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகளிலும் அசத்தலாக பதக்கம் வென்றார். அதிக எதிர்பார்ப்புகளுடன் டோக்கியோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர். அந்த நம்பிக்கையை நிரூபித்து தனது இலட்சியத்தையும் நிறைவேற்றி தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்தார்.
பிரவீனா படேல்
வீராங்கனையான பிரவீனா படேல் டேபிள் டென்னிஸில் முதல் முறையாக இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்தார்.
சுமித் அன்டில்: இளங்கலை பட்டதாரியான இவர் தனது 17 ஆவது வயதில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி இடது கால் முழங்காலை இழந்தவர். அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் பிறந்தவர். தந்தை 7 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார்.
தாயின் வருமானத்தைக் கொண்டு குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். விபத்தில் சிக்கியதால் விளையாட்டு அறக்கட்டளை ஒன்றின் மூலம் தனது பயணத்தை துவக்கியவர். தனது நண்பர் ராஜ்குமார் என்பவர் மூலம் விளையாட்டில் அறிமுகமானார். 23 வயதாகும் இவருக்கு இந்த ஒலிம்பிக் தான் முதல் சர்வதேச போட்டி. உலகின் முன்னணி வீரர்களை தனது ஈட்டி மூலம் வீதி தங்கப் பதக்கம் வென்றார்.
மணிஷ் நிர்வல்: பிறந்தது வளர்ந்தது அனைத்தும் ஹரியானா மாநிலம். தனது 17 வயதில் துப்பாக்கி சுடும் பயிற்சியை துவக்கினார். மன உறுதியுடன் விளையாட்டுக் களத்தில் துப்பாக்கியை குறி பார்த்துச் சுட்டார். முதன் முதலாக கலந்துகொண்ட ஒலிம்பிக் விளையாட்டில் குழு போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்தார். இவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
பிரமோத் பகத்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பிறந்தவர். இடது காலில் ஏற்பட்ட குறைபாடால் ஐந்து வயதில் மாற்றுத்திறனாளியாக மாறியவர். உடற்பயிற்சி மற்றும் கால்பந்தில் ஆர்வம் கொண்டதால் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. தனது 13 ஆவது வயதில் பேட்மிண்டன் பயிற்சியை துவக்கினார். விளையாட்டுக் களத்தில் வீரர்களை மட்டுமல்ல பார்வையாளர்களையும் கவர்ந்தவர். உலகச் சாம்பியன் போட்டியில் 4 தங்கங்களையும் ஆசிய விளையாட்டில் ஒரு தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். உலகச் சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் ஐந்து வெண்கலங்களும், 2 வெள்ளியையும் வென்று முதலிடத்தில் உள்ளார்.
சிறுவயது முதல் இரவு பகலாக கடுமையாக உழைத்தவர் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. நாட்டின் பெயரையும் பெருமையையும் ஒளிரச் செய்ய வேண்டும் என்று நினைத்ததால், பாராலிம்பிக் குழுவின் நம்பிக்கை நட்சத்திரமாக டோக்கியோ சென்று தங்கம் வென்று அசத்தி விட்டார்.
கிருஷ்ணா நாகர்: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பாரா பேட்மிண்டன் உலகின் இரண்டாம் நிலை வீரர் ஆவார். நம்பிக்கையுடன் டோக்கியோ புறப்பட்டுச் சென்றார். துவக்கம் முதல் அசத்தலாக விளையாடி இறுதியில் நாட்டுக்கு தங்க பதக்கமும் வென்று சாதித்து விட்டார்.
பதக்கம் வென்ற ஐஏஎஸ்!
சுகாஸ் யாதிராஜ் : பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் ஐஏஎஸ் அதிகாரி இவர், தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம புத்தா நகர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய வருகிறார். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிறந்தாலும் தந்தை அரசு ஊழியர் என்பதால் அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும் பள்ளிப்படிப்பில் கெட்டிக்காரர். ஆரம்பக் கல்வியை ஹாசன் மாவட்டத்தில் முடித்தாலும் கல்லூரிப் படிப்பை சிவமோகா கல்லூரியில் பயின்றார். அதனைத் தொடர்ந்து பெங்களூருவின் தேசிய அறிவியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையிலும் சேர்ந்து படித்தார்.
அரசு பணியில் சேர்ந்தாலும் விளையாட்டுத் துறையில் ஆர்வம் இருந்தது. மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றாலும் விளையாட்டை ஒருபோதும் கைவிடவில்லை. ஆசிய சாம்பியன், உலக பாரா என்று பல்வேறு தொடர்களிலும் பங்கேற்று தங்கப்பதக்கங்களை குவித்தார். பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இவரின் நீண்ட நாள் கனவு 2021 ஆம் ஆண்டு டோக்கியோவில் நிறைவேறிவிட்டது.
யோகேஷ் கதுனியா: வட்டு எறிதலில் பதக்கங்களை குவித்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக கொடிகட்டி பறக்கிறார். இவரது தந்தை இராணுவத்தில் பணியாற்றியதால் தில்லி ராணுவ பொதுப் பள்ளியில் இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பை முடித்தார். மாணவர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
மூன்று வயதில் நரம்பியல் கோளாறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டதால் சக்கர நாற்காலி உதவியுடன் வலம் வந்தார். தாய், தந்தையரின் முயற்சியால் தொடர்ந்து கொடுத்த பிசியோதெரபி மற்றும் உடற்பயிற்சியால் 12 வயதில் நடக்க துவங்கினார். அதன்பிறகு விளையாட்டிலும் பயிற்சியை மேற்கொண்டு வட்டு எறிதலில் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கமும் வென்று கொடுத்திருக்கிறார்.
துப்பாக்கி சுடுதலில் சிங்கராஜ் அதானா இரண்டு பதக்கங்களும், உயரம் தாண்டுதலில் சரத்குமாரும், பேட்மிண்டனில் மனோஜ் சர்க்காரும் இந்தியாவுக்காக பதக்கம் வென்று கொடுத்தனர்.ஊனம் என்பது உடலில் அல்ல என்பதை திரும்பத் திரும்ப நிரூபித்து பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த, 100 கோடி மக்களின் உள்ளங்களையும் ஒட்டுமொத்தமாக கொள்ளை கொண்ட நமது முத்தான இந்த முத்துக்களை நாமும் வாழ்த்துவோம்.
தொகுப்பு : சி. ஸ்ரீராமுலு