சவளக்காரன் வயல்களிலிருந்து தாய்லாந்து வரை
“இந்திய அணிக்கு நான் எப்போதா வது தேர்வு செய்யப்படுவேனா என்று நீண்ட நாட்களாக கனவு கண்டு கொண்டிருந்தேன். நான் தேர்வு செய்யப் பட்டு ஒரு கோல் அடித்ததற்கு பிறகு நான் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை” என்று சவளக்காரன் (மன்னார்குடி - திருவாரூர்) ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவி பிரியதர்ஷினி கூறினார். ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) நடத்தும் மகளிருக்கான ஆசியக் கோப்பை தொடரில் அடுத்தாண்டு (2026) ஆஸ்தி ரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த தொட ருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிக்கு இந்திய அணி தாய்லாந்து செல்ல உள்ளது. 24 பேர் கொண்ட இந்திய அணி ஜூன் 16 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் தான் கால்பந்து விளையாட்டில் அடிப்படை திறனை கொண்டிருக்கும் சவளக்காரன் பிரியதர்ஷினி தேர்வு செய்யப்பட்டார். ப்ளூ டைகர்ஸ் இந்தியாவின் “ப்ளூ டைகர்ஸ்” என்ற ழைக்கப்படும் அணியில் நடுக்கள வீரராக (Midfielder) பிரியதர்ஷினி இணைக்கப்பட்ட தற்கு பிறகு தாய்லாந்து சியாங் மாய் மைதானத்தின் ஜூன் 23 அன்று மங்கோ லியாவிற்கு எதிரான போட்டியில் அறிமுக வீராங்கனையான பிரியதர்ஷினி தனது முதல் கோலை அடித்தார்.தொடர்ந்து ஜூன் 29 அன்று நடைபெற்ற கிழக்கு திமோருக்கு எதிரான போட்டியில் 4-0 வித்தியாசத்தில் இந்திய மகளிரணி வென்றது. ஜூலை 2 அன்று ஈராக்கிற்கு எதிரான மற்றுமொரு ஆட்டத்தில் இந்திய மகளிரணி 5-0 என்ற வித்தியாசத்தில் வென்று மற்றொரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜூலை 5 அன்று தாய்லாந்திற்கு எதிரான கடும் இறுதி போட்டியில் 2-1 வித்தி யாசத்தில் இந்திய மகளிரணி வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஆசியக் கோப்பைக்கு தகுதி பெற்றது. இந்த நான்கு போட்டிகளில் அறிமுக வீராங்கனையான பிரியதர்ஷினி இரண்டு கோல்கள் அடித்தார். பிரியதர்ஷினி கால்பந்து கூட்டமைப்பின் (AIFC) பத்திரிக்கையாளர் அகில் ராவத்தி டம் கூறும்போது,”நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது கால்பந்து விளையாட ஆரம்பித்தேன். என் சீனியர் மாணவர்கள் பள்ளியில் விளையாடுவதைப் பார்த்தேன். அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். எங்களுக்கு சரியான கால்பந்து மைதானம் இல்லை. அதனால் நாங்கள் நெல் வயல் களில் விளையாடினோம். எங்கள் பயிற்சி யாளர் வி.முத்துக்குமார் எங்களுக்கு நிறைய உதவினார். எனக்கு முதன்முதலாக முதல் ஜோடி கால்பந்து பூட்ஸையும் (கால்பந்து காலணி) கொடுத்தார். இன்றும் கூட, நான் ஊருக்குத் திரும்பிச் செல்லும்போது, அதே நெல் வயலில் பயிற்சி செய்கிறேன். இந்தியா வுக்காக விளையாடும் முதல் இந்திய அணி வீரராக மாறியுள்ளேன் என்பது எனது ஊரில் உள்ளவர்களுக்கு பெருமைக்குரிய விஷய மாக கருதுகிறேன்” என பிரியதர்ஷினி கூறினார். பத்திரிக்கையாளர் அகில் ராவத் கூட்டமைப்பின் இணைய இதழில் மேலும் இவ்வாறு எழுதினார். அதில், சவளக்காரன் என்ற சிறிய கிராமத்தின் நெல் வயல்களில் விளையாடுவதிலிருந்து, தாய்லாந்து சியாங்மாயில் இந்தியாவுக்காக கோல் அடிக்கும் வரை அவரது பயணம் எளிதாக இருந்திருக்கவில்லை. பிரியதர்ஷினிக்கு அவளுடைய பள்ளியின் உடற்கல்வி ஆசிரி யர் வி.முத்துக்குமார் வீடு வீடாகச் சென்று கிரா மத்தின் பெற்றோரை தங்கள் பெண்கள் கால்பந்து விளையாட அனுமதிக்கும்படி பேசி அவர்களை சமாதானப்படுத்தினார்” என்று அகில் ராவத் எழுதினார். சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் மற்றும் மாநிலங்களுக்கிடை யிலான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே தேசிய அணியில் பிரிய தர்ஷினிக்கு இடத்தைப் பெற்றுத் தந்தது. கிளப் மட்டத்தில், 2023-24இல் கோகுலம் கேரளா கால்பந்து கிளப் அணியில் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உயர்மட்ட கால்பந்து அமைப்பான இந்திய மகளிர் லீக்கின் (IWL) ஐந்து போட்டிகளில் 24 கோல் களுடன் லீக்கின் அதிக கோல் அடித்த வீராங்க னையாகவும் ப்ரியதர்ஷினி பாராட்டப்பட் டார். இவைகள் அவரது ஒட்டுமொத்த வெற்றி யின் ஒரு குறிப்பிடத்தகுந்த பகுதியாகும். ஹாட்ரிக் வெற்றிக் கோல் பெங்களூருவில் பிரியதர்ஷினியின் மற்றுமொரு சாதனையை குறிப்பிட வேண்டும். 2024 ஆகஸ்ட் 3 அன்று நடை பெற்ற கர்நாடக மகளிர் லீக் கால்பந்து போட்டிகளில் கெம்ப் எப்சி அணி 5-0 என்ற கோல் கணக்கில் மாத்ருபிரதிஷ்டானா எப்சி யை வென்றது. இந்த அணியில் விளை யாடிய சவளக்காரன் பிரியதர்ஷினி ஹாட்ரிக் வெற்றிக் கோல்களை (தொடர்ச்சியாக மூன்று கோல்கள்) அடித்தார். பிரியதர்ஷி னியின் சவளக்காரன் கிராமத்திற்கு ஒரு பெருமை உண்டு. கிராமத்தில் ஒவ்வொரு பள்ளி குழந்தைக்கும் கால்பந்தில் சாதனை புரிய வேண்டும் என்ற கனவு உள்ளது. ஆனால் சாதனைகள் படைத்து வரும் இக்கிராமத்தின் பள்ளிக்கூடத்திற்கு விளை யாட்டு மைதானம் தான் இல்லை. தமிழக அரசும் மாவட்ட நிர்வாகம் இக்கோரிக்கை யை அலட்சியப்படுத்துவதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலை மாறுமா? மேலும் பிரியதர்ஷினிக்கள் உருவாக முடியுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். - நீடாமங்கலம் சுப்பையா
ஓலைக் குடிசையில் வாழ்க்கை
கடின உழைப்பால் பிரியதர்ஷினி சர்வதேச அரங்கிற்கு சென்றுவிட்டார். பிரியதர்ஷினியின் பெற்றோர்கள் விவசாய கூலித் தொழிலாளர்கள் என்ற நிலையில், இன்றளவும் கூட பிரியதர்ஷினியின் குடும்பம் ஓலைக் குடிசையில் தான் வசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.