games

img

பாதைமாறாத பயணம்... (சிறப்புக் கட்டுரை)

கார் பந்தயம் என்றால் எல்லோருக்கும் தெரிந்திருந்த ஒரே பெயர் மைக்கேல் ஹூமேக்கர்தான். ஃபார்முலா 1 கார் ரேஸ் நாயகனான இவர் எத்தனையோ கார் பந்தயங்களை சந்தித்திருக்கிறார். ஆனால் அங்கெல்லாம் வாழ்வை முடக்கி போடும் விபத்துக்களோ, உடல் உபாதைகளோ இல்லாமல் வலம் வந்த சாதனை நாயகனை வெறும் ஆல்ப் மலைப்பகுதி பனிச்சறுக்கல் முடக்கி போட்டதுதான் வேதனையிலும் வேதனை!

தந்தை மைக்கேல் ஹூமேக்கரின் வழியில் கார் பந்தைய களத்தில் பயணிக்கும் 22 வயதாகும் மிக் ஹூமேக்கர், பக்ரைன் கிராண்ட் பிக்ஸ் தொடரில் அறிமுகமாகி குடும்பத்தின் கனவை நினைவாக்க வருகிறார்.ஏழு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று உலக சாதனை படைத்த மைக்கேல் ஹூமேக்கரின் மகன் மிக், தனது முதல் ரேஸின்போது கார் கட்டுப்பாட்டை இழந்தால் எதிர்ப்பார்த்தை நிறைவேற்ற முடியவில்லை. ஆனாலும் அந்த பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் காட்டினார்.
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த மிக்,“நான் 90 விழுக்காடு மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிறிய தவறு 10 விழுக்காடுதான். ஆனாலும், அது கவலை அளித்தது. இந்தத் தடுமாற்றம் ஏன் நடந்தது எனப் புரிந்துகொண்டேன். வரும் நாட்களில் தவறை சரிசெய்துவிடுவேன்” என்று கூறினார்.30 ஆண்டுகளுக்கு முன் தனது முதல் பயணத்தில் மைக்கேல் ஷூமேக்கரும் இதுபோன்ற தவறுகளைச் செய்தார். பின்னர் அவர் உலக சாம்பியன் மட்டுமல்ல உலகின் முதல் நிலை வீரராகவும் கொடிகட்டி பறந்தார் என்பது குறிப்பிட தக்கது.

நூலைப் போல சேலை....
தந்தையை போன்றே கார் பந்தையத்தில் கலக்கி வரும் மிக் ஹூமேக்கர் விளையாட்டு ‘கலாச்சார வேர்கள்’ கொண்ட தம்பதிக ளுக்கு 1999 அன்று சுவிட்சர்லாந்தில் பிறந்தாலும் வசிப்பது ஜெர்மனி. கல்வியிலும் கெட்டிக்காரரான அவர் ஒன்பது வயதில் கார் டிரைவரானார். பதினோராவது வயதில் ‘கார் டிரைவ்’ செய்யவும் தொடங்கினார்.பாரம்பரிய விளையாட்டு குடும்பத்தில் பிறந்ததால் குழந்தைப் பருவத்தில் விளையாட்டு கார்களுடன் பொழுதை கழித்த மிக், படிப்படியாக கார் ரேஸிங் செய்ய துவங்கினார். அவரது ஆசைக்கும் கார் பந்தய ஆர்வத்திற்கும் தடைபோடாமல் பயிற்சி கொடுத்தார் தந்தை மைக்கல் ஹூமேக்கர்.

இயற்கையாகவே கார் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர் என்பதால் அதிவேகமாக கார் ஓட்டுவதில் வல்லவராகவும் மாற்றியது. பார்முலா-1 பந்தயத்தில் விளையாட வேண்டுமென்ற உந்து சக்தியையும் கொடுத்தது. பின்னர் கார் ரேஸே தொழில் முறை விளையாட்டாகமாறியது.தந்தை மைக்கேல் ஹூமேக்கர் ஃபார்முலா-1 பந்தய வீரர். தாய் கொரின்னாவோ குதிரை சவாரி ஐரோப்பிய சாம்பியன். உறவினர்களும் கார் பந்தய வீரர்கள். பணக்கார விளையாட்டு வீரர்கள் குடும்பத்தில் பிறந்ததால் பயிற்சி மேற்கொள்ள பஞ்சமில்லை. 13 வயதிலேயே தந்தையின் பாதையில் பயணித்து முதல் ரேஸில் பத்து இடங்களுக்குள் வந்து அசத்தினார்.

பேர் சொல்லும் பிள்ளை
ஜெர்மனி ஜூனியர் சாம்பியன்ஷிப்பிலும், சிஐகே எப்ஐஏ சூப்பர் கோப்பை ஜூனியர் போட்டிகளிலும் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அப்போது வயது 14. தொடர் வெற்றிகளால் மிக இளம் வயதில் சர்வதேச, ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பங்கேற்று தனது திறமையை நிரூபித்துக் காட்டினார். தொடர்ந்து, ஐரோப்பிய மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் கலந்து கொண்டு இரண்டாவது இடத்திற்கு வந்தார் மிக் சூ மேக்கர்.இதயத்தில் ஒரு பெரிய கனவுடன் பயணத்தை துவக்கிய மிக் ஷூமேக்கர், 2015 ஆம் ஆண்டில், தனது முதல் வெற்றியை பதிவு செய்து தந்தைக்கு சமர்ப்பித்தாhர். அடுத்த ஆண்டே இத்தாலிய தொடரில் ஐந்து வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தனது இருபதாவது வயதில் எஃப்.டி.ஏ உடன் கையெழுத்திடப்பட்டார். பிறகு, ஃபார்முலா - 2 பந்தயத்தில் களம் இறங்கி ஐரோப்பிய எஃப்ஐஏ சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினார்.

ஐரோப்பிய ஃபார்முலா-3 வகை பந்தயங்களில் மூன்று முறை சாம்பியன் பட்டங்களை வென்ற மிக், தற்போது உலகின் நம்பர்-1 கார் பந்தயமாக கருதப்படும் ஃபார்முலா-1 கார் பந்தயத்திலும் கால் பதித்துள்ளார். 20 வயதாகும் மிக், 2019ஆம் ஆண்டு துவக்கத்தில் ஃபார்முலா-1 வீரராக ஃபெராரி அணி ஒப்பந்தம் செய்தது. எஃப்-1 அரங்கில் மிக் எவ்வளவு வேகமாக கற்றுக்கொண்டு திறமையை நிரூபிப்பார் என ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். ஃபார்முலா-1 கார் பந்தய உலகில் நுழைந்துள்ள மிக் , புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல், தந்தை வழியில் பல வெற்றிகளை குவிப்பார் என்று மோட்டார் பந்தய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதே நேரம் தொடர்ச்சியாகச் சாதித்துக்காட்ட வேண்டிய கட்டாயத்திலும் மிக் ஹூமேக்கர் உள்ளார்.

சி.ஸ்ரீராமுலு

;