facebook-round

img

அட்வைஸ் செய்ய அருகதை வேண்டாமா? - துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு ஒரு கடிதம் !

அன்புள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு வணக்கம் !

துக்ளக் இதழின் 52-வது ஆண்டுவிழாவில் நீங்கள் பேசிய முழு உரையைக்கேட்டேன்.

மேடைக்கு எதிரில் முன்வரிசையில் அமர்ந்திருந்த பல முக்கிய மனிதர்களோடு எனக்கு நேரடி அறிமுகம் இருக்கிறது.

அதனால் கடுமையான கோபம் இருந்தாலும்,மிகுந்த கவனத்தோடு இதை குறிப்பிடுகிறேன்.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் மத்திய அரசு சிப் வைத்திருக்கிறது என்ற ஒரு அபத்தமான தகவலை பரப்பிய ஒரு மனிதனின் பேச்சை கேட்க ஏதோ கடவுளின் முன்பு பயபக்தியுடன் உட்கார்ந்திருப்பது போல அவர்கள் மெய்மறந்து அமர்ந்திருந்தது ஆச்சரியமளிக்கிறது.

வாய்க்கு வந்ததை எல்லாம் போகும் போக்கில் பேசிவிட்டு போகும் உங்களை..

எப்படி..இந்த சமூகம் இவ்வளவு உயர்வான இடத்தில வைத்துள்ளது என்பது உண்மையிலேயே புரியாத புதிர் தான்.

இதை நான் சொல்வது ஏதோ உள்நோக்கத்திலோ அல்லது வெறுப்பு,காழ்புணர்ச்சியாலோ நிச்சயம் கிடையாது.

2018-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி நடந்த துக்ளக் விழாவில் நீங்கள் பேசிய ஒரு விஷயத்தை கேட்டு எனக்கு மயக்கமே வந்து விட்டது.

அதற்கு பின் துக்ளக் படிப்பதையும் நிறுத்திவிட்டேன்.உங்களது உரையை கேட்பதையும் தவிர்த்தே வந்தேன்.

பின்பு,எதற்காக இந்த கடிதம் என்றுகூட உங்களுக்கு தோணலாம்.

என்ன சார் செய்வது,இந்த பாழாப்போன சமூக வலைதளத்தில் நீங்கள் பேசிய பேச்சை நண்பர்கள் பலர் பதிவு செய்தது.

கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கிறது.

எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வது.அதனால் தான் இந்த கடிதம் கண்றாவி எல்லாம்..

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் பேசிய பேச்சை கேட்டுவிட்டு

எனக்கு தெரிந்த சில பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம்

நீங்கள் தெரிவித்த விஷயம் குறித்து விசாரித்துக்கொண்டு இருந்தேன்.

ஒரே வரியில் அவர் புரூடா விட்டிருக்கிறார்-அதை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிட்டு நேர்லயே வந்துட்டீங்களேன்னு விழுந்து விழுந்து சிரித்தனர்.

அப்படி… நீங்கள் விட்ட டுபாக்கூர் என்னவென்று தெரியுமா ?

கடந்த 2017 ம் ஆண்டு ஜூன் மாதம் டோக்லாம் பகுதியில், சீன அரசாங்கம் சாலை விரிவாக்கம் செய்த விவகாரம் விஸ்ரூபம் எடுத்தது.

அதைப்பற்றி நீங்கள் அந்த 48-ம் ஆண்டு விழாவில் பேசினீர்கள்.

அப்போது..

டோக்லாம் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் என்ன நடந்ததென எனக்கு தெரியும்.ஆனால் அதை இங்கு சொல்லமுடியாததென தெரிவித்தீர்களே நினைவிருக்கிறதா ?

140 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் 8 கோடி மக்கள் தமிழகத்தில் வாழ்கின்றனர்.

தமிழ் மொழியில் வெளியாகும் துக்ளக் இதழ் அதிகபட்சம் 25 ஆயிரம் விற்பனையானால் ஆச்சர்யம்.

ஆனால்,நீங்கள் மேடையில் பேசுகிறீர்கள் இந்தியாவின் வெளியுறவு விவகாரம் குறித்து இரண்டு நாட்டின் அதி உயர் பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயம் குறித்து எனக்கு தெரியும்,ஆனால் அதை சொல்லமுடியாது என்கிறீர்கள்.

அதையும் கேட்டு ஒரு கூட்டம் கைதட்டுகிறது.

எங்கே போய் முட்டிக்கொள்வது…

அப்போது நீங்கள் வெளிப்படுத்திய உடல்மொழியும்-பேச்சின் பாவனையும் இருக்கிறதே.

பிரமாதம்..

ஒருவேளை நீங்கள் ஆடிட்டர் ஆகாமல், நடிகராகி இருந்தால்...

மிகசிறந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகியிருப்பீர்கள்...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சீனாவின் அதிபர் முன்பு 45 டிகிரி வளைந்து நின்று நாட்டிற்கே இழிவை ஏற்படுத்தினார்.

ஆனால்..

அந்த நிலை இப்போது மாறி ,அமெரிக்க அரசாங்கமே

நீங்கள் சீனாவை எப்படி டீல் செய்தீர்கள் என்ற ரகசியத்தை கூறுங்கள் என நம் அரசாங்கத்திடம் கெஞ்சிக்கொண்டிருப்பதாக கூறினீர்கள்.

ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா திரு.குருமூர்த்தி அவர்களே...

2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி மக்களவையில்

அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு தொகுதியின் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் Tapir Gao என்ன பேசினார் என்று தெரியுமா ?

சுருக்கமாக சொல்கிறேன்.. கேளுங்கள்..

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே..

இந்த பிரச்னையை நான் இப்போது பேசவில்லை என்றால்,,

இந்த நாடும் அடுத்துவரக்கூடிய தலைமுறையும் என்னை ஒருபோதும் மன்னிக்காது..

14 நவம்பர் 2019 பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அருணாச்சல பிரதேசம் சென்றார்.

சீனா அதிகாரப்பூர்வமாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தது.

இந்தியா அமைதியாக இருந்தது.

குடியரசு தலைவர்,பிரதமர்,உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் அருணாச்சலப்பிரதேசம் சென்றார்கள்.

அப்போதும்.. ஒவ்வொரு முறையும் சீனா கடுமையாக எதிர்த்தது.

ஆனால் நம்முடைய தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை.

நான் இந்தியாவில் இருக்கும் அனைத்து ஊடகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

தயவு செய்து அருணாச்சலப்பிரதேசத்தில் நடக்கும் சீன ஆக்ரமிப்பு குறித்து பேசுங்கள்.எழுதுங்கள்..

ஏன் ஊடகங்கள் எங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறது ..

60 கிலோ மீட்டர் பரப்பளவில் சீனா அருணாச்சல பிரதேச பகுதிகளை ஆக்ரமித்துவிட்டது.

நான் நாடாளுமன்ற அவையின் சபாநாயகராகிய உங்கள் மூலமாக இந்தியாவில் இருக்கும் ஊடகங்களை நோக்கி கேள்வி எழுப்புகிறேன் பாகிஸ்தான் குறித்த பிரச்சனை என்றால் கொடுக்கும் முக்கியத்துவத்தில்,,ஏன் சிறிய அளவு முக்கியத்துவம் கூட அருணாச்சல பிரதேசத்திற்கு கொடுக்க மறுக்கிறீர்கள்.

பத்திரிகை-தொலைக்காட்சிகள்-எதிர்க்கட்சிகள்,

இந்த அவையில் கூட ஏன் யாருமே பேச தயங்குகிறீர்கள்..

தயவு செய்து பேசுங்கள்.. என்று கதறினார்..

பத்திரிகை மற்றும் தொலைகாட்சி ஊடகங்களே தயவு செய்து பேசுங்கள்..எழுதுங்கள்..

இல்லையென்றால் அருணாச்சல பிரதேசம் மற்றொரு டோக்லாமாக மாறிவிடுமென கூறி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார்..

ஆனால் இந்தியாவில் இருக்கும் எந்த ஊடகமும் பத்திரிகையும் அவர் குறிப்பிட்ட அருணாச்சல பிரதேச பிரச்னை குறித்து பேசவில்லை.

அவ்வளவு ஏன்...

அப்பழுக்கற்ற தேசியவாதியான நீங்களாவது துக்ளக்கில் எழுதியிருக்கலாம்.ஆனால் நீங்களும் எழுதவில்லை.

பத்திரிகை துறையின் சாபக்கேடு பாருங்கள்..

நீங்கள் எல்லாம் பத்திரிகைகளுக்கு உபதேசம் செய்கிறீர்கள்..

காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கப்பட்டதை மிகவும் பெருமையாக பேசியிருக்கிறீர்கள்.

தவறில்லை.உண்மையிலேயே அது சாதனை தான்.

கிட்டத்தட்ட ஒரு கோடியே 36 லட்சம் மக்கள் வாழும் மாநிலமான ஜம்மு காஷ்மீர்

2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

ஆனால் அங்கு எவ்வளவு நாட்களாக குடியரசு தலைவர் ஆட்சி நடக்கிறதென தெரியுமா உங்களுக்கு ?

மிகப்பெரும் மேதாவியான உங்களுக்கு தெரிந்திருக்கலாம்..

ஆனாலும் நினைவூட்டுவதற்காக சொல்கிறேன்..

ஜம்மு காஷ்மீரில் 2018-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி குடியரசு தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.

ஆனால் அதற்கு முன்பாக 6 மாத காலம் ஆளுநர் ஆட்சி நடந்தது.

கிட்டத்தட்ட 1435 நாட்களாக,அதாவது 4 ஆண்டுகளாக மத்திய அரசின் நேரடி பார்வையில் அங்கு ஆட்சி நடந்து வருகிறது.

இது ஜனநாயகத்திற்கும்-மக்களாட்சி தத்துவத்திற்கும் நல்லதென்று நீங்கள் நினைக்கிறீர்களா குருமூர்த்தி ?

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அங்கு,,

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடந்த புல்வாமா தாக்குதல் நினைவிருக்கிறதா உங்களுக்கு ?

உங்களோடு மேடையில் அமர்ந்திருந்த மரியாதைக்குரிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்,புல்வாமா தாக்குதல் நடந்தபோது ராணுவ அமைச்சர் பதவியில் இருந்தார்.

மேடைக்கு மேடை நாட்டில் வெடிகுண்டு சம்பவங்களே நடக்கவில்லை என அவர் பிரச்சார மேடைகளில் பேசிக்கொண்டிருந்த நேரமது.

அப்போது தான் புல்வாமா தாக்குதல் நடந்தது.

நான் சொல்ல வரும் விஷயம் தாக்குதல் பற்றியல்ல..

புல்வாமா தாக்குதல் நடந்த அடுத்த 15 தினங்களில் உலகில் எந்த நாட்டிலும் நிகழாத ஒரு அநியாயம் நம்நாட்டில் நடந்தது.அறிவீர்களா ?

ஞானக்கடலான நீங்கள் அதைப்பற்றி ஏதாவது எழுதியோ பேசியோ இருக்கிறீர்களா என்பதை யோசித்துப்பாருங்கள்

2019-பிப்ரவரி 26 ம் தேதி இந்தியாவின் வான் எல்லைக்குள் பறந்து கொண்டிருந்த விமானப்படையின் ஹெலிகாப்ட்டர்,ஏவுகணை மூலமாக சுட்டு வீழ்த்தப்பட்டது.

அதில் இரண்டு விமானிகள் உட்பட 6 விமானப்படையினர் உயிரிழந்தனர்.

சொந்த நாட்டு எல்லைக்குள் பறந்துகொண்டிருக்கும் ஹெலிகாப்டரை அந்த நாட்டு விமானப்படையே ஏவுகணை மூலமாக தாக்குதல் நடத்திய வரலாறு எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா குருமூர்த்தி ?

ஆனால் இந்தியாவில் நடந்தது.

கிட்டத்தட்ட 8 மாத காலம் அந்த அநியாயத்தை மறைத்து வைத்திருந்தது இந்திய அரசாங்கம்.

அப்பழுக்கற்ற தேசியவாதியான நீங்கள் இதைப்பற்றி எப்போதாவது பேசி இருக்கிறீர்களா ? இல்லை இந்த விஷயம் குறித்து தான் ஏதாவது தெரியுமா ?

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்து விட்டதென மேடையில் கூசாமல் பொய் பேசுகிறீர்கள்..

எப்படி உங்களால் முடிகிறது ?

உங்களுடைய வாழ்க்கையில் என்றைக்காவது உள்துறை அமைச்சகத்தின் ஆண்டறிக்கையை படித்திருக்கிறீர்களா குருமூர்த்தி அவர்களே ?

2014-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை 222...

அதற்கு பிறகு தீவிரவாத தாக்குதல் எப்படி அதிகரித்துள்ளதென தெரியுமா ?

2015-208

2016-322

2017-342

2018-614

2019-594

2020-244

இப்படி உயர்ந்திருக்கிறது..இது ஏதோ நான் சொல்லும் புள்ளி விபரங்கள் அல்ல.

இவையெல்லாம் உள்துறை அமைச்சகத்தின் 2020 ஆண்டு அறிக்கையில் கூறியிருப்பது.

அத்துமீறி நடக்கும் ஊடுருவல் கூட காங்கிரஸ் ஆட்சிக்காலத்தை விட அதிகமாவே நடந்திருக்கிறது என்பதை உள்துறை அமைச்சக அறிக்கை தெளிவு படுத்துகிறது.

சந்தேகம் இருந்தால் 312 பக்க அறிக்கையை படித்து தெரிந்து கொள்ளவும்.

இடது சாரி தீவிரவாதம் 70 சதவிகிதம் இந்தியாவில் குறைந்து விட்டது என்றும் கூறியிருக்கிறீர்கள்.

2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி மீனாக்ஷி லேகி கேட்ட கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி கொடுத்த பதிலை உதாரணமாக வைத்து தான் அதை தெரிவித்திருக்கிறீர்கள்.

ஆனால் அது பழைய தகவல்.

ஆகச்சிறந்த அறிவாளியான நீங்கள் அப்டேட் ஆகாமல் பேசியது வருத்தமளிக்கிறது.

கேள்வி எண்-1073

உறுப்பினர் ஜெகதாம்பிகா பாலின் கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்தராய்,2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி கொடுத்துள்ள பதிலில் 77% இடதுசாரி தீவிரவாதம் இந்தியாவில் குறைந்துள்ளது குருமூர்த்தி அவர்களே..

இடதுசாரி தீவிரவாதம் அதிகம் இருப்பதாக மத்திய அரசு கூறும் மாநிலங்கள் 11,அதில் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்கள்

பீகார்,சட்டீஸ்கர்,ஜார்கண்ட்,ஒடிசா ,மஹாராஷ்டிரா,ஆந்திரா,தெலுங்கானா ஆகிய 7 மாநிலங்கள் மட்டுமே..

இந்த 7 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 30 மாவட்டங்கள் தான்

பாதிப்பை சந்தித்து வருகிறது..

சரி...

நீங்கள் சொல்வது போல...இடதுசாரி தீவிரவாதம் குறைந்ததற்கு மத்திய அரசு தான் காரணமென்றால்..

ஜம்முகாஷ்மீரில் அத்துமீறலும்,தாக்குதல்களும் அதிகரித்ததற்கு யார் காரணம் சார் ?

நீங்கள் தான் பெரிய மேதாவி ஆச்சே...

மாதாமாதம் உள்துறை அமைச்சகம் வெளியிட்டு வந்த இடதுசாரி தீவிரவாத தாக்குதல் குறித்த அறிக்கைகளை இப்போது ஏன் வெளியிடுவதில்லை,என்று கொஞ்சம் கேட்டு சொல்கிறீர்களா?

அப்படியே..

குண்டு வெடிப்புக்கள் குறித்த தகவல்களை சேகரித்து ஆண்டறிக்கை வெளியிட்டு வந்த NSG-ன் National Bomb Data Centre ஏன் இப்போது தகவல்களை மறைத்து வருகிறது என்றும் கேட்டு சொல்லுங்கள்...

ஊரில் இருக்கும் யாருக்கும் எந்த விஷயமும் தெரியாது இஷ்டத்துக்கு அடித்துவிட்டு போகலாம் என்று நினைத்தீர்களா என்ன ?

எல்லாவற்றுக்கும் மேலாக,, அரசாங்கத்தின் முடிவுகளில் நீதிமன்றம் அதிகம் தலையிடக்கூடாதென்று நீதித்துறைக்கு வேறு உபதேசம் செய்கிறீர்கள்.

அதற்கு, அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப்-ஐ வேறு உதாரணமாக கூறுகிறீர்கள்..

அமெரிக்காவில் சிறைவாசிகளை விடுதலை செய்ய டொனால்ட் டிரம்ப் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. அதை அந்நாட்டு நீதிமன்றங்கள் பொருட்படுத்தவில்லை என்று கூறுகிறீர்கள்.

நீங்கள் பத்திரிகை ஆசிரியரா இல்லை பட்டிமன்ற பேச்சாளரா சார் ?

டொனால்ட் டிரம்ப் லஞ்சம் வாங்கவில்லை.

அமெரிக்காவில் உள்ள தனியார் சிறைச்சாலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தும் சட்டத்திருத்தை கொண்டுவந்தார்.

அதுவே சர்ச்சையாக மாறியது.

மேடைக்கு கீழே அமர்ந்திருக்கும் எல்லோரும் லூசுன்னு நினைத்து தானே கண்ணாபின்னான்னு அடித்துவிடுகிறீர்கள் ?

இந்தியாவின் நீதித்துறையும்,,நீதிமன்றங்களும் எப்படி நடக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள் மிஸ்டர் ?

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில்,, உச்சநீதிமன்றம் நம்பிக்கையின் அடிப்படையில் ராமர்கோவில் கட்ட தீர்ப்பே வழங்கிவிட்டதே..இதைவிட இன்னும் எப்படி அரசுக்கு ஏற்றவாறு நீதித்துறை செயல்பட முடியும் குருமூர்த்தி ?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை கருப்புதினமாக கருதி அட்டைப்படத்தை கருப்பாக வெளியிட்ட துக்ளக் இதழின் தற்போதைய ஆசிரியர் நீங்கள்...

காலம் தான் எவ்வளவு மோசமானது பாருங்கள்...

52-வது துக்ளக் விழாவில், நீங்கள் ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் பேசியிருக்கிறீர்கள்.

உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் எழுதி,உங்களுடைய பொய்யை அம்பலப்படுத்த முடியும்.

ஆனால்,நீங்கள் திமுக குறித்தும்,மாநில அரசு பற்றியும் பேசிய விஷயங்களுக்கு பதிலடி தரவேண்டியது என்னுடைய வேலை அல்ல.

அதனால், சில அம்சங்கள் பற்றி மற்றும் விளக்கம் கொடுத்து இந்த கடிதத்தை முடித்துவிட நினைக்கிறேன்.

வங்கிகள் இணைப்பு குறித்த வாசகரின் கேள்விக்கு நீங்கள் கொடுத்த விளக்கம் இருக்கிறதே...

ஆஹா...பிரமாதம்.

என்னாவொரு அற்புதமான பதில்..

கல்வெட்டுக்களில் பொறிக்கவேண்டும்.

எதிர்கால தலைமுறைக்கு உதவும்..

போதாதற்கு அரசு வங்கி ஊழியர்களை கழிசடைகள் என்று வேறு திட்டுகிறீர்கள்..

தயவு செய்து..

நீங்கள் அந்த விளக்கம் கொடுத்து பேசிய போது..

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முகம் போன போக்கை பார்க்க வேண்டும்..

.

எனக்கு தெரியும் அதை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள்.

உங்கள் ஈகோ அனுமதித்திருக்காது..

ஆனால் அதை அவசியம் திரும்பத்திரும்ப

நீங்கள்..பார்க்கவேண்டும் குருமூர்த்தி அவர்களே..

காரணம் என்ன தெரியுமா ?

பொருளாதாரப்புலி என்று உங்களைப்பலர் நினைக்கிறார்கள் அல்லவா!

உங்களுக்கும் கூட,,உங்களை குறித்த சுயமதிப்பீடு உயர்வாக இருக்கலாம்.

மரியாதைக்குரிய நிதியமைச்சர் முகம் போன போக்கை பாருங்கள்.

உங்களின் அகம்பாவமும் ஆணவமும் கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்கிறது.

ஹிந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர்

முன்னாள் உள்துறை அமைச்சர் P.சிதம்பரம் என்றீர்கள்..

அதில் என்ன தவறு ஐயா ?

மனசாட்சியைத் தொட்டுச்சொல்லுங்கள்.

இந்தியாவில் ஹிந்து தீவிரவாதம் இல்லையா ?

இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கு நாட்டில் அதிகரிக்கவில்லையா ?

கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து 2020 வரையிலான காலக்கட்டத்தில்,அதாவது 5 ஆண்டுகளில் 2 லட்சத்து 80 ஆயிரம் கலவரங்கள் இந்தியாவில் நடந்துள்ளது.

அதில் 3400 மதக்கலவரங்கள்.

சுதந்திரத்திற்கு பின் இவ்வளவு அதிகமான கலவரங்கள் இந்தியாவில் நடந்ததே கிடையாது என்பதை அறிவீர்களா ?

இவ்வளவு கலவரங்கள் யாருக்கு எதிராக நடத்தப்பட்டது?

பாதிக்கப்பட்டது யார் சார் ?

நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்ட இந்த தகவல் குறித்து எல்லாம் எப்போதாவது துக்ளக்கில் எழுதி இருக்கிறீர்களா ?

ஆனால் வாய்கிழிய உபதேசம் மட்டும் செய்கிறீர்கள்..

பத்திரிகை-ஊடகங்களிடம் மோடி துவேஷம் இருப்பதாக கூறுகிறீர்களே !

உண்மையிலேயே கண்கள் என்ற ஒரு அவயம் உங்களுக்கு இருக்கிறதா-இல்லையா ?

மொத்த இந்தியாவில் இருக்கும் ஊடகங்களும் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவது உங்களுக்கு தெரியவில்லையா குருமூர்த்தி ?

கொரோனா முதல் அலையின் போது,தப்லீக் ஜமாஅத் அமைப்பினரே பரவலுக்கு காரணமென வெறுப்பு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டதை மறந்துவிட்டீர்களா என்ன ?

உச்சநீதிமன்றத்தில்,,தொலைக்காட்சிகளில் முன்னெடுக்கப்பட்ட வெறுப்புபிரச்சாரம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் என்ன கூறப்பட்டதென தெரியுமா ?

கொரோனா பரவலுக்கு காரணம் குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே காரணம் என்பது போன்ற எந்த நிகழ்ச்சியையும் தொலைக்காட்சிகள் நடத்தவில்லை/ பேசவில்லை என்று கூறியிருந்தனர்.

உண்மையா அது ? யோசித்துப்பாருங்கள் !

நாட்டில் ஹிந்தித்திணிப்பு என்ற ஒன்றே நடக்கவில்லை என்று கூறினீர்கள்.

அதென்ன சார்..

ஹிந்தித்திணிப்பை எதிர்ப்போம் என்று தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கூறியது எனக்கு பிடிக்கவில்லை.

பிஜேபி அந்த தவறை செய்யக்கூடாது.ஹிந்தி படிக்கவேண்டும் என்று கூறக்கூடிய ஒரே கட்சியாக பிஜேபி இருக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறீர்கள்.

எனக்கு திரு.அண்ணாமலையின் கருத்துக்கள்,நிலைப்பாடு மீது எக்கச்சக்கமான முரண்பாடுகள் இருக்கிறது.

ஆனாலும்,, மே -8-ம் தேதி நீங்கள் பிறப்பித்த உத்தரவை குப்பையில் தூக்கி வீசி, ஹிந்தியை திணித்தால் தமிழக பாஜக எதிர்க்கும் என்று மே-10 ம் தேதி திரும்பவும் கூறினார் திரு.அண்ணாமலை.

அவர் அப்படி சொல்லியதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

உன் உபதேசத்தை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே என்று அர்த்தம்.

வருடத்திற்கு ஒரு நாள் நீங்கள் மேடையில் பேசும் பேச்சால் தமிழகத்தில் பெரிய அரசியல் தாக்கம் ஏற்படுகிறதென யாரோ சிலர் உங்கள் ஆழ்மனதை நம்ப வைத்திருக்கிறார்கள்.

அதனால் தான் நீங்கள் இப்படி உளறிக்கொட்டி வருகிறீர்கள்..

நீங்கள் நம்புவதை போலவே,,சில மடையர்களும் கூட அதை நம்பலாம்.

ஆனால்..

எல்லோரும் எப்படி நம்புவார்கள் குருமூர்த்தி சார் ?

பத்திரிகை துறையும் -நீதித்துறையும் மறுசிந்தனை செய்ய வேண்டும் என்ற மலைப் பிரசங்கத்தை இனி தயவு செய்து மேற்கொள்ளாதீர்கள்..

ஏனென்றால்…

மத்திய அரசுக்கு ஜால்ரா அடிப்பது -திமுகவை எதிர்ப்பது என்ற இரண்டு காரியங்களைத் தவிர வேறு எதையும் எழுத தைரியமில்லாத துக்ளக் இதழின் ஆசிரியரான உங்களுக்கு,

உபதேசம் செய்வதற்கு உண்டான

எந்த அருகதையும் இல்லை-தகுதியும் இல்லை….

புரிந்துகொள்ளுங்கள்..

B.R.அரவிந்தாக்ஷன்

ஊடகவியலாளர்

;