ஜம்மு காஷ்மீர் மற்றும் லதாக் என காஷ்மீர் இப்போது இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளுமே இன்று மத்திய அரசின் அதிகாரத்திற்குள் (Union Territories) கொண்டு செல்லப்பட்டு விட்டது. காஷ்மீரை இவ்வாறு இரண்டாக மட்டுமல்ல ஜம்மு /காஷ்மீர் பள்ளத்தாக்கு / லதாக் என மூன்றாகப் பிரிப்பதே ஆர்.எஸ்.எஸ் – ஜனசங் அமைப்புகளின் நோக்கங்களாக இருந்து வந்தன. இதை அவர்கள் வெளிப்படையாகவே கோரி வந்தனர்.
ஆர்.எஸ்.எஸ் பின்னணியுடன் செயல்பட்ட பால்ராஜ் மதோக்கின் “பிரஜா பரிஷத்” அமைப்பு இந்தக் கருத்தை முன்வைத்தது. இயக்கம் நடத்தியது. இந்திய ஆட்சி அதிகாரம் வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்திய அரசுக்கு மாறியபோது அந்த ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சிக்குள்தான் இன்றைய பா.ஜ.கவும் அன்று இருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. (i)வல்லபாய் படேல், சியாமா பிரசாத் முகர்ஜி, குல்சாரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி எனப் பலரும் நேரடியாக இந்து மகாசபையில் இல்லாவிட்டாலும் கூட இந்துத்துவக் கருத்து உடையவர்களாகவே இருந்தனர் என்பதையும், (ii)பொதுவாகக் காங்கிரசே அப்போது பெரிதும் உயர்சாதி ஆதிக்கத்தின் கீழ் வலதுசாரிப் பண்புடன்தான் விளங்கியது என்பதையும், (iii)காந்தியும் நேருவும் உண்மையில் வெள்ளைக்காரர்களுக்கு எதிராக மட்டுமின்றி இவர்களையும் எதிர்த்துத்தான் அரசியல் செய்ய நேர்ந்தது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
காந்தி கொலைக்குப் பின்தான் இந்துமகாசபை, ஆர்.எஸ்.எஸ் முதலான அமைப்புகளில் உள்ளோர் காங்கிரசுக்குள் இருக்க இயலாது எனும் முடிவெடுக்கப்பட்டபோது காங்கிரசிலிருந்து பிரிந்தவர்கள்தான் இன்றைய பா.ஜ.கவின் முன்னோடியான பாரதீய ஜனசங் கட்சி உருவெடுத்தது.
காஷ்மீர் குறித்த என் நூலில் நான் நேரு இந்தியாவுடனான இணைப்பின்போது காஷ்மீருக்கு அளித்த வாக்குறுதியை எவ்வாறெல்லாம் மீறினார் என்பதை விரிவாகச் சொல்லியுள்ளேன். ஒப்பந்தப்படி 370வது பிரிவின் கீழான உரிமைகளை நீர்க்கச் செய்ததிலும், கருத்துக் கணிப்பு நடத்தாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்து ஷேக் அப்துல்லாவைச் சிறையிட்டதிலும் நேருவின் செயல்பாட்டை யாருமே நியாயப்படுத்திவிட இயலாது என்பதில் ஐயமில்லை.
ஆனால் அதே நேரத்தில் நேருவின் அணுகல்முறை நூறுசதம் ஆர்.எஸ்.எஸ், ஜனசங் அணுகல் முறையிலிருந்து மாறுபட்டு இருந்தது. எக்காரணம் கொண்டும் அவர் ஜம்மு காஷ்மீரை மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்பதை ஏற்கவில்லை. இன்று மோடியும் அமித்ஷாவும் வெறிகொண்டு பள்ளத்தாக்கு முஸ்லிம் மக்களை கொடுஞ்சிறைக்குள் முடக்கி அவர்களை வழிக்குக் கொண்டுவர வேண்டும் என முயல்கிறார்களே, அப்படியும் அவர் நினைக்கவில்லை.
காஷ்மீர் பிரச்சினையை மிக விரிவாகத் தொடர்ந்து பல பத்தாண்டுகளாக ஆய்வு செய்து அம் மக்களின் நியாயங்களை மகா துணிச்சலுடன் பேசிவரும் அறிஞர் ஏ.ஜி.நூரானி இதை விரிவான ஆதாரங்களுடன் தொடர்ந்து கூறி வந்துள்ளார். இப்போது Frontline இதழில் எழுதியுள்ள கட்டுரையிலும் அதை விரிவாகச் சொல்லுகிறார். அதை இங்கு, இன்று அவர் சொல்வதென்பது நேருவைக் காப்பாற்றும் நோக்கில் அல்ல. மாறாக இன்று மோடி- அமித்ஷா ஆட்சி காஷ்மீரில் மேற்கொண்டுவரும் வரலாறு காணாத ஒடுக்குமுறை எவ்வகையிலும் அவர்கள் நினைக்கும் நோக்கத்தை நிறைவேற்ற உதவாது என்பதைச் சுட்டிக் காட்டத்தான்.
சற்று விரிவாகப் பார்க்கலாம்.
(தொடரும்)