facebook-round

img

பாஜக ஒழித்துக் கட்டப்படும் உயர்கல்வி (i) - அமார்க்ஸ்

இந்துத்துவவாதிகளுக்கு கல்வி, குறிப்பாக மக்கள் உயர் கல்வி பெறுவது பிடிக்காது. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாஜ்பாயி ஆட்சியில் புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் ஆக நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் ideologue கே.ஆர்.மல்கானி, "இந்தியர்களுக்குக் கல்வி தேவை இல்லை" எனச் சொல்லி சர்ச்சையானது நினைவிருக்கலாம்.

கல்வி என்பது 'வேதம் வழங்கப்பட்ட' (People of the Book) மதத்தினருக்குத்தான் முக்கியம். அதனால்தான் இங்கு கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கல்வியைப் பரப்பினார்கள். அவர்களுக்குத் தான் எல்லோரும் வேதம் படிக்க வேண்டும். நமக்கு அப்படி இல்லை. உயர்சாதியினர் மட்டும் படிக்கத் தெரிந்தால் போதும். ஏனெனில் அவர்கள்தான் இங்கு வேதம் ஓத வேண்டும். நமக்குக் கல்வி நிறுவனங்கள் "திறன் பயிற்சி" அளிக்கும் நிறுவனங்களாக இருந்தால் போதும் - என்பது இவர்களின் 'லாஜிக்'.

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையைப் பார்த்தீர்களானால் அதில் "திறன் பயிற்சி" க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கலாம். பத்தாம் வகுப்பில் மாணவர்களை இரண்டு stream களாகப் பிரித்து ஒருசாரர் மேற்படிப்பிற்குச் செல்லக் கூடியவர்களாகவும், இன்னொரு சாரர் மேலே திறன் சார்ந்த கல்வியை மட்டுமே பயிலக்கூடியவர்களாக ஆக்குவதையும் அவர்கள் ஒரு கொள்கையாகவே அறிவித்துள்ளதை நான் விரிவாக புதிய கல்விக் கொள்கை குறித்த என் நூலில் எழுதியுள்ளேன்.

மோடி அரசு குழந்தைகள் வேலைக்குப் போகும் வயது எல்லையைக் குறைத்துள்ளதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

மோடி அரசின் Make in India கொள்கையும் இந்தப் பின்னணியில் உருவாவதே. உயராய்வுகள் முதலியன எல்லாம் வெளிநாடுகளில். இங்கே எந்திரங்களைப் பொருத்தும் மெக்கானிக்குகள் போதுமானவர்கள். இங்குள்ள உயர்சாதியினர் வெளிநாடுகளில் போய் படித்துக் கொள்ளலாம்.

உயர்கல்வியில் குறிப்பாக மொழியியல், வரலாறு, சமூகவியல் முதலான கலைப்படங்கள் (Humanities) மற்றும் Basic Sciences கூட இவர்களுக்குப் பிடிக்காது. Applied Sciences, Technology Oriented Courses போதும்; எக்காரணம் கொண்டும் Inter Disciplinary Courses கூடவே கூடாது என்பது இவர்களின் கொள்கை.

அடுத்த கல்வி ஆண்டு முதல் JNU வில் Technical Courses கொண்டுவரப் போவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். (இப்போது கொண்டு வந்தாச்சு).

சென்னை IIT யில் அம்பேத்கர் - பெரியார் மாணவர் அமைப்பின் மீது தாக்குதல் நடந்தபோது Inter Disciplinary Courses, Humanities முதலியன அங்கு பாடங்களாக ஆக்கப் பட்டதுதான் இப்படியான இயக்கங்கள் உருவாவதற்குக் காரணம் என ஆர்.எஸ்.எஸ் அறிவுத் தொட்டியில் ஒருவரான ராதாராஜன் எழுதியிருந்த கட்டுரையை நான் விரிவாக ஆய்வு செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

மொழியியல் முதலான பாடங்களின் ஊடாக திராவிட மொழிகள் என்பன சமஸ்கிருதம் முதலான ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டது என கால்டுவெல் முதலானோர் நிறுவியதும், சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் பிறந்தது எனச் சொல்வதெல்லாம் Nonsense என நிறுவியதும் அவர்களுக்கு அத்தனை எரிச்சல்.

இதன் விளைவுதான் இன்று இவர்களின் உயர்கல்வி மற்றும் Humanities, Inter Disciplinary subjects மீதான வன்மங்கள், வெறித் தாக்குதல்கள்... எல்லாம்.

இவர்கள் ஏதோ முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்ல என்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் நமது அடித்தட்டுப் பிள்ளைகள் மேலே படிப்பதற்கே எதிரானவர்கள்.

(தொடரும்)


Marx Anthonisamy

;