இரண்டு நாட்களாக பிரதமர் மோடியும் அவரது ஊது குழல்களும் சங்பரிவார் அமைப்புகளும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அதாவது வரிகள் குறைக்கப்பட்டிருப்பது ஏழைகள் கையில் பெரும் சேமிப்பைச் சேர்க்கும் சந்தோஷ மூட்டை என்று பினாத்திக்கொண்டிருக்கிறார்கள். சரி ஏழைகள் அப்படி என்னதான் சேமித்து விடுவார்கள் என்பது குறித்து ஒரு சிறிய கணக்கு போடலாம்.
கடந்த ஆண்டு அதாவது 2024 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.21.36 லட்சம் கோடிகள்.
இப்போது குறைத்து இருப்பதாக சொல்வது ஆண்டுக்கு ரூ.48,000 கோடிகள்.
இந்த ரூ.48,000 கோடிகள் என்பது ஒரு ஆண்டுக்கான வரி இழப்பு.
இதை அப்படியே ஏற்றுக்கொண்டு இந்தியாவில் இருக்கும் 147 கோடியே 43 லட்சத்து 95 ஆயிரத்து 140 பேரும் அல்லது இவர்கள் இருக்கிற சுமார் 30 கோடி குடும்பங்களுக்கு சராசரியாக என்ன சேமிப்பு கிடைத்துவிடும் என்று கணக்கிடுவோம்.
அதாவது ஒரு ஆண்டுக்கு ரூ.48,000 கோடி வரி குறைக்கப்படுகிறது என்றால் ஒரு மாதத்திற்கு சராசரியாக ரூ.4000 கோடிகள். இந்த ரூ.4000 கோடியை இந்தியாவில் உள்ள சுமார் 30 கோடி குடும்பங்களுக்கு பங்கிட்டால் ஒரு மாதத்திற்கு 133 ரூபாய் 30 பைசா சேமிக்க முடியும். அதாவது வருடத்திற்கு 1600 ரூபாய் ஒரு குடும்பம் சேமிக்க முடியும் .
இந்த சேமிப்பு ஏழைகள் வாழ்வில் ஏதோ தாறுமாறான மகிழ்ச்சியையும் சேமிப்பையும் கொண்டு வந்து சேர்த்துவிடும் என்று சொல்வது நரேந்திர மோடி பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று சொல்வதற்கு நிகராகும்.
இப்படி சொல்கிறவர்கள் திட்டமிட்டு மக்களை ஏமாற்றுவதற்காக சொல்ல வேண்டும்; அல்லது எந்த விவரமும் புரியாத மனிதர்களாக இருக்க வேண்டும்.
– க.கனகராஜ், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்