இரவு 12 மணி கைப்பேசியில் அழைப்பு மணி ஒலிக்க கையில் போனை எடுத்தவுடன் தோழர் பஸ் ஏறிட்டிங்களா? என தோழர் வெங்கடேசன் கேட்க,ஏறிட்டேன் தோழர் காலையில் வந்துருவேன் என்றதும் சரிங்க தோழர் என அழைப்பை துண்டித்தார்.காலை 9 மணி திமிரி பஸ்நிலையம் வந்து போனடித்தவுடன் உடனே வந்து அழைத்துச் சென்றவர் ஒரு உணவகத்தில் நிறுத்தி தோழர் டிபன் சாப்பிடலாம் என்றார் சரி சாப்பிடலாம் என அமர்ந்தோம்.
தோழர் நான் வீட்டில் சாப்பிட்டேன் நீங்க சாப்பிடுங்க என்றார் சரி என்று இரண்டு பூரிய சாப்பிட்டு விட்டு பயணத்தை தொடர்ந்தோம். 3 கிலோமீட்டர் தூரத்தில் ஆனைமல்லூர் எனும் கிராமத்தில் ஒரு வாழை தோப்பு பக்கத்தில் ஒரு குடிசைவீட்டின் முன்பாக வண்டியை நிறுத்தினார். வீட்டின் முகப்பில் CPI(M) கட்சிக்கொடி, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க கொடி, மலைவாழ்மக்கள் சங்க கொடி மூன்றும் வருக,வருக என அழைப்பது போல் ஓலையில் ஒட்டி வைக்கப்பட்டிருந்தது.
இது தான் நம்ம வீடு வசதி குறைவாத்தான் இருக்கும் என்றார் நம்மைப் போன்றோர் தான் நாட்டில் அதிகம் பாத்துக்கலாம் என்றேன். உள்ளே போனவர் தோழர் வந்திருக்காங்க என்றதும் அவரது இணையர் கையில் செம்பில் தண்ணீரோடு வெளியே வந்தார் வாங்க தோழர் மினரல் வாட்டர் இல்ல பைப் தண்ணி தான் என்றார் கொடுங்க தோழர் என வாங்கி குடித்து விட்டு.வீட்டிற்குள் சென்றேன் தோழர் கரண்ட் இல்ல இன்னைக்கு சடோன் என்றார் சரிங்க தோழர் என சொல்லி விட்டு பேக்கை கழட்டி வைத்து விட்டு வெளியே வந்தால் கட்டிலைப் போட்டு தயாராக வைத்திருந்தார் தோழர் வெங்கடேசன்.
தோழர் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க நான் இதோ வந்து விடுகிறேன் என சொல்லிவிட்டு . அவரது இணையரிடம் மதிய சாப்பாட்டுக்கு ரெடி பன்னு எனசொல்லிட்டு வண்டிய கிளப்பிட்டார். தோழர் ஏதாவது வேணுமுனா சொல்லுங்க வாங்கிட்டு வாரேன் என்றார் அவரது இணையர். எதுவும் வேண்டாம் தோழர் என சொல்லிவிட்டு கட்டிலில் அமர்ந்தேன் . சிறிது நேரத்தில் சூர்யா ,சூர்யா என அழைத்தார் இரண்டு நாய்களோடு ஒரு இளைஞர் வந்தார். என் பையன் தோழர் என அறிமுகம் செய்துவிட்டு வீட்டிற்குள் போய்விட்டார்.
வெளியே வந்த சூர்யா, தோழர் இவன் பெயர் பைரவா,அவன் பெயர் சிச்சூ இவன் எலும்பு நல்லா சாப்பிடுவான் அவன் கொலம்பு சோறு நல்லா சாப்பிடுவான் என்றான். ஓ அப்படியா என்றேன் ஆமானு சொல்லிட்டு கிளம்பிட்டான். தோழர் வெளியே வந்தாங்க உங்க பெயர் என்ன தோழர் என்றேன் என் பெயர் புஸ்பம் என்றார்,குடும்பம் குறித்து விசாரித்தேன்,இரண்டு பிள்ளைங்க மூத்தவன் பெயர் சூர்யா, இளையவன் பெயர் கார்த்திக்.மூத்தவன் 9 வது வரைக்கும் படிச்சான். மாற்றுதிரனாளி எழுத தெரியாது அதனால 10 வது.பள்ளிக்கூடம் வரவேனானு வாத்தியார் சொல்லிட்டாரு,இளையவன் எட்டாவது படிக்கிறான் பள்ளிக்கூடம் போயிருக்கான் தோழர் என்றார். எப்படி குடும்பத்த சமாளிக்கிறிங்க என்றேன் கஷ்டம் தான் ஏரி வேலைக்கு போவேன் இப்ப அந்த வேலையும் இல்ல தோழர் என சொல்லிக்கொண்டே அடுப்பில் நெருப்பை பற்ற வைத்தார்.
வெளியே போன வெங்கடேசன் தோழர் வந்துசேர்ந்தார். மாற்றுத்திறனாளி ஒருத்தர் தாசில்தார் ஆபீஸ்ல மனுக்கொடுக்க வரச்சொல்லியிருந்தேன் அதான் அந்த வேலைய முடிச்சிட்டு வந்தேன் தோழர் என்றார். சரி எப்ப மெம்பர்சிப் போடுறது என்றேன் இதோ சாப்பிட்டு வந்திடுறேன் என்றார். நீங்க சாப்பிடலையா என்றேன் ஆமாம் தோழர் நான் சாப்பிட்டேனு சொன்னாதான் நீங்க ஓட்டல்ல சப்பிடுவீங்கனு நான் அப்படி சொல்லிட்டேன் தோழர் என்றார். ஏன் தோழர் இப்படி சரி சாப்பிடுங்க என சொல்லிவிட்டு அவர் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு காட்டுப்பகுதியில் 100 நாள் வேலை செய்பவர்களிடம் அழைத்துச்சென்றார். அவர்கள் அனைவரையும் ஓரிடத்தில் கூட்டி சங்கம் குறித்து பேசி உறுப்பினர் பதிவை முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம். உணவு தயாராக இருந்தது
கோழிக்குழம்பு, சாம்பார் சாப்பிட்டு விட்டு பேச்சை தொடர்ந்தோம்.
எப்படி கட்சிக்கு வந்திங்க என்றேன். தோழர் நாங்க காட்டுநாயக்கன் சமூகத்தை சார்ந்தவங்க ஓரிடத்தில் இருக்க மாட்டோம் ஊரு ஊராய் போய் வளையல், பாசி,தோடு, விப்போம், மரத்தடி,பள்ளிக்கூடம், கோயில்ல தங்கி வாழ்ந்து வந்தோம். நான் சிறுவனா இருக்கும் போது எங்க அம்மா இறந்துட்டாங்க,எனக்கு 14 வயசு இருக்கும் போது வாழப்பந்தல் ஊர்ல தரிபட்டரையில் ஒரு பாய் வீட்ல எங்க அப்பா என்னை வேலைக்கு சேர்த்துவிட்டுட்டு போயிட்டார். எங்க போனாருனு தெரியாம நிறைய வருசம் அங்கே இருந்தேன். அப்பத்தான் நான் சைக்கிளில் போகும் வழியில தோழர் ரகுபதி இன்னும் சில தோழர்கள் நான் தினமும் போகையில வரேல பார்த்திட்டு இருந்து கூப்பிட்டு பேசி டைப்பீல சேத்துவிட்டாங்க, கொஞ்ச நாளில் எங்க சித்தப்பா என்ன தேடிவந்து இங்க கூப்பிட்டு வந்து எனக்கு கல்யாணம் முடிச்சு வச்சாங்க நான் இங்க வந்து முப்பது வருசம் ஆச்சு, கட்சில சேந்தபின்னாடி நிலையா ஒரே இடத்துல இருக்கோம். இந்த பகுதியில குடியிருக்கும் 10 குடும்பங்களுக்கு போராட்டம் நடத்தி பட்டாவாங்கி கொடுத்தேன், எல்லாத்துக்கும் 100நாள் வேலை அட்டை வாங்கி கொடுத்தேன், 17 பேர கட்சியில சேர்த்து கட்சி கிளை இருக்கு. நிறைய ஆர்ப்பாட்டம் பண்னியிருக்கோம். ஒரு முறை முதலியார் தெருவில் விதொச பதிவு போட போகும் போது நீ எல்லாம் எங்க தெருவுக்குள் வரலாமானு ஒருத்தர் என் சட்டைய பிடிச்சு அடிக்க வந்திட்டாரு. கட்சியில சொன்னே உடனே போலீஸ்ல ரிப்போட் பன்னி அவங்கள கூப்பிட்டு விசாரிச்சாங்க என்கூட இரண்டு தோழர்கள் மட்டுமே இருந்தாங்க அவங்ககூட ஒரு ஊரே திரண்டு வந்தாங்க , போலீஸ்டேசன்ல அந்த இன்ஸ்பெக்டர் விசாரிச்சிட்டு.தெருவுக்குள்ள வரக்கூடாதுனு சொல்ல யாருக்கும் உரிமை இல்ல. வெங்கடேசன் எப்பநாலும் வருவான்,போவான் ஏதாவது சொன்னீங்க தொலைச்சிருவேன் சொல்லி மிரட்டி எழுதிவாங்கி விட்டுட்டார். அப்புறம் கம்ளைன் பன்னிட்டு எப்படி இந்த ஊர்ல இருகிறேன்னு பாக்குறேன்னு மிரட்டுனாங்க, டிராக்டர் வச்சு மேல ஏத்துறதுமாறி வருவாங்க எதுவானாலும் கட்சி பாத்துக்கிறும்ன்னு நான் என்வேலைய செஞ்சிட்டு இருக்கேன் தோழர் என்றார். எவ்வளவு அர்த்தப்பூர்வமான பணியை செய்து முடித்திருக்கிறார் என அவர் மேல் இன்னும் மரியாதை கூடியது .
கல்வி இல்லை, பணம் இல்ல, அதிகாரம் இல்ல, கட்சி உறுப்பினர் மட்டுமே விளம்பரத்திற்கு பட்டா கொடுத்து விட்டு இடத்தை கண்ணில் காட்டாத அமைச்சர்கள், ஆட்சியாளர்கள் மத்தியில் 10 குடும்பத்திற்கு இடமும்,பட்டாவும், 100நாள் வேலைக்கான அட்டையும்,மின்சாரமும் போராடி பெற்றுக்கொடித்திருக்கிறார். தற்போது கலைஞர் கனவு இல்லத்தையும் போராடி பெற்றுக்கொடித்திருக்கிறார், வீடு கட்டும் பணியும்.தற்போது நடந்து வருகிறது என்றால் உண்மையில் அது செங்கொடியேந்தும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களால் மட்டுமே முடியும்.
எங்கே கம்யூனிஸ்ட் என்போருக்கு இதோ இங்கே இருக்கிறோம்!!
ரத்தமும்,சதையுமாய், நாடி, நரம்பில் மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் மன உறுதியோடு.
ரெட் சல்யூட் தோழர் வெங்கடேசன்.
-வீ.மாரியப்பன்
மாநில செயலாளர்,
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்
