facebook-round

img

செய்தியைப் பரப்புங்கள்; பொய் தீயை கொளுத்தாதீர்கள்- க.கனகராஜ்

நேற்றைய தினம் (28 12 2025)நெல்லையில் ஒரு விவாத நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் பேராசிரியர் திரு இராம சீனிவாசன் சிபிஎம் மாநிலச் செயலாளர் தோழர் பி சண்முகம் அவர்கள் திருப்பரங்குன்றம் மலையை 'சிக்கந்தர் மலை' என்று சொன்னதாகவும் அதற்காக அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்றும் அதுவரை தாங்கள் அந்தப் பிரச்சினையை விடப்போவதில்லை என்றும் பேசினார். நான் பத்திரிகைகளை தேட ஆரம்பித்தேன். காணொளிகளையும் தேடி பார்க்க ஆரம்பித்தேன். தினமலர் பத்திரிகையில் சங்பரிவார் ஆட்கள் சிலர் அப்படி ஒரு பொய் தீயை பற்றவைத்து இது நீதிமன்ற அவமதிப்பு; நீதிமன்றமே அதை சிக்கந்தர் மலை என்று சொல்லக்கூடாது என்று சொல்லி இருக்கிறது. எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர போகிறோம் என்று சொன்னதாக செய்தி வெளியிட்டுள்ளது. தோழர் பி சண்முகம் பேசிய பேச்சை முழுமையாக கேட்க வேண்டும் என்று பத்திரிக்கை நண்பர்கள் சிலரோடு தொடர்பு கொண்டு அந்த முழு பேச்சையும் அனுப்பச் சொன்னேன். கடந்த 24 12 2025 அன்று மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் கிராமப்புற ஏழைகள் வயிற்றில் அடிக்கும் முறையிலும் மகாத்மா காந்தியை இருட்டடிப்பு செய்யும் முறையிலும் 100 நாள் வேலை திட்டத்தை சீரழிப்பதை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் பேசுகிறபோது அதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் மலை குறித்த பிரச்சனையையும் பேசியிருக்கிறார். சிக்கந்தர் என்கிற வார்த்தை ஒரே ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அது சிக்கந்தர் தர்கா என்று குறிப்பிடுவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதைத் தவிர வேறு எந்த இடத்திலும் சிக்கந்தர் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. ஒன்றுக்கு மூன்று பேர் பதிவு செய்திருந்த அந்த குரல் பதிவை கேட்டேன்.

அப்பட்டமான பொய்யை ஒருவர் சொல்ல, அதை பல பேர் திரும்பச் சொல்ல, அதை தினமலர் பிரசுரிக்க, அதை அப்படியே பேராசிரியர் இராம சீனிவாசன் பல நூறு பேர் கலந்து கொண்ட ஒரு இடத்தில் சொல்லிவிட்டு போகிறார். சவாலும் விடுகிறார்.

இது இவர்களுடைய வழக்கமான நடைமுறைதான். அதைத்தான் இந்தப் பிரச்சனையிலும் அவர்கள் கையாண்டு இருக்கிறார்கள். பேராசிரியராக இருந்தாலும் சரி முனைவராக இருந்தாலும் சரி முனிவராகவே இருந்தாலும் ஆர்எஸ்எஸ் என்றால் அவர்களுக்கு பொய் கைவந்த கலை.

பொதுவாக ஆர்எஸ்எஸ் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கிறது என்று ஒரு பிரச்சாரத்தை செய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் முதலில் கற்றுக் கொடுப்பது பொய்தான் உச்சபட்ச ஒழுக்கம் என்பதுதான். அந்த பொய்யை தான் இப்போது அவர்கள் உலவ விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் இப்போது அந்த பொய் தீயை கொளுத்திய நபர்களும் அதை பரப்பிக் கொண்டிருக்கிற பேராசிரியர் இராம சீனிவாசனும் அதை அப்படியே பிரசுரித்த தினமலர் பத்திரிகையும் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

தினமலர் பத்திரிகையின் செய்தியாளர் செய்தி சேகரிப்பதற்காக அந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிச்சயம் சென்றிருப்பார். அவருடைய பதிவும் இருந்திருக்கும். நேர்மை இருந்தால் தினமலர் அதை வெளியிட வேண்டும்.

பேராசிரியர் இராம சீனிவாசன் அவர்கள் இப்போதாவது ஒருவேளை தெரியாமல் சொல்லி இருந்தால் நான் தெரியாமல் சொல்லிவிட்டேன் என்று வருத்தம் தெரிவிக்க வேண்டும். தெரிந்தே சொல்லி இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். எவ்வளவு மோசமானவர்களாக தெரிந்தே தினம் தினம் பொய் பரப்பவர்களாக இருக்கிறார்கள்!

இவர்களுக்கு செய்தி தெரியாது; பொய் தீ கொளுத்த மட்டும் தான் தெரியும்

 

க.கனகராஜ்

சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்

முகநூல் பதிவு