காதலும் அரசியலும்
ஒரு ராணுவ வீரனின்
வாழ்க்கையினூடாக
அழகானதொரு காதலையும்
முழுமையற்ற அரசியலையும்
கலந்து தந்திருக்கிறார்
ராஜ்குமார் பெரியசாமி..
அன்பும் காதலும்
முதிர்ச்சியான உறவுகளுமாக
உணர்வுகளை கிளர்த்தும்
துவக்க காட்சிகளில் தேறும்
இயக்குநர் பிறகு ஏனோ
கதை சொல்லலை விடவும்
காட்சிகளை மட்டுமே நம்பி
நிற்பதால் இறுதி காட்சிகளில்
தேங்கி நின்று விடுகிறார்..
காட்சியமைப்பை போலவே
அழுத்தமான கதையும் முக்கியம்..
அன்பை வெளிப்படுத்தி
காதலில் வென்ற அமரன்
அரசியல் போதாமையால்
வெற்றிக்கோட்டை தவறவிடுகிறான்..
ராணுவ வீரர்களின் தியாகம்,
அவரது குடும்பம் ஏற்கும்
வலியும் இழப்புகளும்,
எல்லைப்பகுதி பிரச்னைகள்
அமைதியை தேடும் மக்கள்
ஆகிய அம்சங்களை கொண்ட
முக்கியமான இப்படைப்பும்,
வழமையான பாணியில்
'தட்டையான 'அரசியல் பேசி
பிரச்னையின் பரிமாணத்தை
பேசாமல் கடந்து செல்வதாலோ
அல்லது பேச மறுப்பதாலோ
ஏமாற்றமே மிஞ்சுகிறது..
ராஷ்ட்ரிய ரைஃப்பிள்ஸ் (RR)
படைப்பிரிவின் சாகசங்களை
பிரமிப்பூட்டும் காட்சிப்படுத்தி
இருந்தாலும் கூட,
AFSPA எனும் சிறப்பு ஆயுத
சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டதே
RR படை என்பதும், எல்லைப்புற
மாநிலங்களில் AFSPA படைகள்
செய்த மனித உரிமை மீறல்களும்
மணிப்பூரில் 500 வாரங்களாக
உண்ணாவிரதம் இருந்த
ஐரோம் சர்மிளாவின் முகமும்
மனதில் நிழலாடுவதால் சாகச
காட்சியோடு ஒன்றமுடியவில்லை..
ஒவ்வொரு படை பிரிவிற்கும் ஒரு
பிரத்யேக முழக்கம் இருக்கிறது
எனும் உண்மையோ, தர்க்கமோ
இருந்தாலும் கூட அவ்வப்போது
சத்தமாக எழும் 'ஜெய்பஜ்ரங் பலி'
முழக்கம் சமகால அரசியல்
சூழலையும், தேசபக்திக்கும்
தீவிர தேசியவாதத்திற்குமான
இடைவெளியையும் உணர்த்துகிறது.
'தீவிரவாதி' என ஒருவரை
முத்திரை குத்துவதற்கும்
'போராளி' என அழைப்பதற்கும்
பின்னால் ஒரு நுண்ணரசியல்
இருக்கிறது. வன்முறைக்காக
மட்டுமல்ல, பல நேரங்களில்
தற்காப்புக்காகவும் கூட
துப்பாக்கியேந்த வேண்டிய
சூழலையும் கூட அத்தகைய
அரசியலே உருவாக்குகிறது
என்பதை பேச மறுப்பதும்
கூட ஒருவகையில் ஆபத்தானது..
ஆயுதமின்றி இருக்கும்
ஒருவனை கைது செய்ய
வாய்ப்பிருந்தும், சுட்டுக்
கொல்லும் நாயகன் தனது
முகத்தை காட்டி ' பார் இதுதான்
இந்திய ராணுவத்தின் முகம்'
என பேசும் காட்சியில் எழும்
பலத்த கைதட்டலுக்காகவே
அந்த காட்சியை இயக்குநர்
வைத்திருக்கலாம்.., ஆனால்
அந்த முகத்தோடு வேறொரு
முகத்தையும் கூட எல்லையில்
வாழும் உள்நாட்டு மக்கள்
பல நேரங்களில் கண்டும்
உணர்ந்துமிருக்கிறார்கள்..
திடீர் தீடீரென வெடிக்கும்
துப்பாக்கிகள், சத்தம் மற்றும்
ரத்தம் தெறிக்கும் காட்சிகளை
கொண்டே, எல்லைப்புற
அரசியலையும் ராணுவ
சாகசங்களையும் பேசிவிட
முடியாது. அப்பகுதி மக்களின்
உணர்வையும் உரையாடலையும்
இணைத்து பேசும் போதுதான்
அது அர்த்தம் பொதிந்த மக்கள்
படைப்பாகும். இல்லையெனில்
அதுவொரு கேளிக்கை சினிமாவே..
உண்மைக்கதையை கையாண்ட
இயக்குநர் உண்மைக்கு சற்று
நெருக்கமாகவும் நின்று
பேசியிருக்க வேண்டும்.
கதையின் பிராதன களமான
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை
ரத்து செய்தால் அனைத்தும்
சரியாகும் எனும் வஞ்சகத்தோடு
உரிமையை பறித்தவர்களை
அம்மாநில மக்கள் முற்றாக
நிராகரித்திருக்கிற நிகழ்கால
நிதர்சனமும் அதன் பின்னணியும்
கவனத்தில் கொள்ள வேண்டாமா..
பச்சை நிறம் பயங்கரவாதம்
சிவப்பெனில் தீவிரவாதம்
எனும் படிமம் உருவாக்கப்படும்
வலதுசாரி அரசியல் புறச்சூழலில்,
அந்த கருத்துக்கு வலுசேர்க்கும்
வகையில் அடுத்தடுத்த
படைப்புகள் வெளியாகும்
நேரத்தில் தனித்து தெரிய
வேண்டிய அமரன் கூட்டத்தில்
கலந்து காணாமல் போகிறான்..
விமர்சனங்கள் இன்றி
கொண்டாடப்படும் எதுவும்
ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல..
- ஆர்.பத்ரி, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்