வெள்ளி, பிப்ரவரி 26, 2021

facebook-round

img

இதை ஜனநாயக நாடென்று கொண்டாட என்ன இருக்கிறது?

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி வரை இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,03,73 606. இறந்தவர்களின் எண்ணிக்கை 1,53, 847 .இந்த நோய் தொற்றால் 12.2 கோடிக்கும் அதிகமானவர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். இவர்களில் முறைசாரா தொழிலாளர்கள்தான் 75% (9.2 கோடிப்பேர்). பல லட்சக்கணக்கான சிறு குறு தொழில்கள் மூடப்பட்டிருக்கின்றன. பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்திருக்கின்றன. பெரும்பாலான நிறுவனங்களில் சம்பளத்தைக் குறைத்திருக்கிறார்கள். மக்கள் தங்களது நுகர்வை பெருமளவு குறைத்திருக்கிறார்கள். இப்படி ஏராளமான பாதிப்புகள்.

இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 23.9 சதவீதம் குறைந்திருக்கிறது .அதாவது கடந்த ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் 100 கோடி ரூபாய் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் இந்த ஆண்டு அது 76.1 கோடி ரூபாயாக குறைந்து விட்டது என்று பொருள்.

இப்படி இந்தியர்களில் பெரும்பாலானவர் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரோடு வாழ்வதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில்தான் ஒரு சிறு பகுதி மிகப்பெரும் சொத்துக்களை இந்த கொரோனா காலத்தில் அள்ளிக் குவித்திருக்கிறது.இந்திய பெருமுதலாளிகளின் சொத்துக்கள் இந்த காலத்தில் அதாவது நோய் பேரிடர் காலத்தில் 35%அதிகரித்திருக்கிறது.அதாவது அவர்களின் சொத்து கொரோனாவிற்கு முன்பு இருந்ததைவிட மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக கொழுத்திருக்கிறது.

ஆக்ஸ்ஃபாம் என்கிற லாபநோக்கற்ற அரசு சாரா அமைப்பு ஒன்று ஆண்டுதோறும் உலகம் முழுவதும் வருவாய் இடைவெளி பற்றிய விபரங்களை சேகரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவின் ஆகப் பெரும் பணக்காரர்களில் 100 பேரின் சொத்து மதிப்பு கொரோனாகாலத்தில் மட்டும் 13 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்திருக்கிறது .அதாவது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் பாதிஅளவு மதிப்பிற்கு இந்த நூறு பேர் மட்டும் பேரிடர் காலத்தில் தங்கள் சொத்துக்களை அதிகரித்து இருக்கிறார்கள் .இந்தப் பணத்தை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிரித்துக் கொடுத்தால் 27 கோடி வீடுகளுக்கும் 48, 148 ரூபாய் கொடுக்க முடியும். இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 13.8 கோடி ஏழைகளுக்கு பிரித்துக் கொடுத்தால் ஆளுக்கு 94,045 ரூபாய் கொடுத்துவிட முடியும். இந்திய அரசாங்கம் கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு இந்தப் பணத்தை செலவழிக்க முயற்சித்தால் 10 ஆண்டுகளுக்கு செலவழிக்க முடியும் . இந்தப் பணத்தில் பத்தில் ஒரு பகுதியைத்தான் இந்திய அரசு ஆண்டுதோறும் கல்விக்காக மொத்தமாக செலவிடுகிறது. அதாவது இந்த முதலாளிகள் இந்த காலத்தில் சேர்த்த இந்த சொத்தின் அளவு 10 ஆண்டுகளுக்கு இந்திய பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் செலவின் அளவாகும் .

அதேசமயம் இந்த காலத்தில் இந்தியாவில் மாதம்தோறும் 3000 ரூபாய்க்கு குறைவாக சம்பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒட்டுமொத்த தொழிலாளர்களில் 24 சதம் பேர்.இந்த அறிக்கையின்படி வருவாய் இடைவெளி காலனி ஆட்சிக்கால அளவிற்கு அதிகரித்திருக்கிறது.

இது ஒருபுறமிருக்க இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரும் உலகத்தின் நான்காவது பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானியின் சொத்து இந்தக்காலத்தில் ஒரு மணிக்கு 90 கோடி ரூபாய் என்ற விகிதத்தில் உயர்ந்திருக்கிறது. அதாவது அவரது சொத்து ஒரு நிமிடத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் என்ற அளவிலும் ஒரு நொடிக்கு இரண்டரை லட்சம் ரூபாய் என்ற அளவிலும் உயர்ந்திருக்கிறது. ஒரு நொடிக்கு இரண்டரை லட்சம் ரூபாய் என்பது எத்தனை பெரிய தொகை.

இந்தத் தொகையை ஒரு நாளைக்கு கணக்கிட்டால் 2,160 கோடி ரூபாய் அதாவது தமிழ்நாடு அரசாங்கம் ஒரு ஆண்டிற்கு மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துக்காக செலவழிக்கும் 1,385 கோடி ரூபாயை போல ஒன்னே முக்கால் மடங்கு. முகேஷ் அம்பானி ஒருமாத காலத்தில் உயர்த்திக்கொண்ட சொத்தின் மதிப்பு 64, 700 கோடி .அதாவது தமிழ்நாடு அரசாங்கம் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மூலதன செலவுகளுக்காக ஒதுக்கிய 59,397 கோடியை விடவும் 5000 கோடி அதிகம். ஊராட்சிகளுக்கு தமிழக அரசு ஒரு ஆண்டுக்கு ஒதுக்கிய 19,567 கோடியை போல மூன்று மடங்குக்கும் அதிகம். கல்விக்கு ஒதுக்கியுள்ள 41,626 கோடியை போல ஒன்றரை மடங்கு. ஆரம்பக் கல்விக்கு ஒதுக்கியுள்ள 10,111 கோடியை போல ஆறு மடங்கு. இடைநிலை கல்விக்கு ஒதுக்கியுள்ள தொகையைப் போல ஆறு மடங்கு.

இந்திய அரசாங்கம் பெரு நிறுவனங்களில் வரி மூலம் ஒரு ஆண்டிற்கு வசூலிக்கும் தொகையில் பத்தில் ஒரு பகுதியை இந்த நோய் பேரிடர் காலத்தில் முகேஷ் அம்பானி ஒருமாத காலத்தில்சேர்த்திருக்கிறார் .வருமான வரி மத்திய அரசுக்கு ஒரு ஆண்டிற்கு 6,38,000 கோடி .அதிலும் பத்தில் ஒரு மடங்கிற்கு அதிகமாக முகேஷ் அம்பானி இந்த ஒரு மாத காலத்தில் சொத்து சேர்த்திருக்கிறார் .ஜிஎஸ்டி வரி மத்திய அரசின் பங்காக ஆண்டுக்கு 6,90,500 கோடி வருகிறது. ஏறத்தாழ அதே அளவிற்கு இந்த நோய் பேரிடர் காலத்தில் ஆண்டு முழுவதும் சேர்த்தால் அதைவிட கூடுதலாக அல்லது 10 மாத அளவிலேயே இந்த தொகை அம்பானிக்கு வந்திருக்கிறது. இந்தியா இறக்குமதி வரியாக பெறும் தொகை அம்பானி இரண்டு மாத காலத்தில் சேர்த்துக்கொண்ட தொகைதான் .ஒரு ஆண்டு முழுவதும் இந்திய அரசாங்கம் கலால் வரியில் பெறும் தொகையில் நான்கில் ஒரு பங்கை ஒரே ஒரு மாதத்தில் அம்பானி அதுவும் நோய் பேரிடர் காலத்தில் பெற்றிருக்கிறார். இந்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்று 2,10,000 கோடி திரட்டப் போவதாக அறிவிப்பு செய்திருக்கிறது .ஆனால் அம்பானியின் மூன்றரை மாத கால வருமானம் தான் இந்த தொகை. இதுவெல்லாம் மத்திய அரசுக்கு வருமானத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து சேர்ப்பு விகிதம் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்தான விபரங்கள் .

ஆனால் செலவுகளில் பார்த்தோமானால் இந்தியா முழுவதும் கிராமப்புற ஊராட்சிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கும் தொகை தான் முகேஷ் அம்பானி இந்த நோய் பேரிடர் காலத்தில் ஒரு மாதத்தில் சம்பாதித்த தொகை. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு செலவழிக்கும் தொகை அம்பானியின் ஒருமாத வரவில் பாதி மட்டுமே. இந்தியாவில் உள்ள 120 கோடி பேருக்கு பொது வினியோக முறைக்காக மத்திய அரசாங்கம் மானியமாக 1,15,570 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது . இது அம்பானியின் நோய் பேரிடர் கால சொத்து தீர்ப்பில் இரண்டு மாத கால சொத்து மட்டுமே .இந்தியா முழுவதற்கும் விவசாயிகள் பயன்படுத்தும் உரமானியத்திற்கு மத்திய அரசாங்கம் 76,309 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது .இது அம்பானியின் ஒன்றரை மாத சொத்து சேர்ப்பை விட குறைவு. அம்பானி இந்த நோய் பேரிடர் காலத்தில் சம்பாதித்த சொத்தில் எட்டு மாதம் சம்பாதித்ததை விட குறைவாகத்தான் இந்தியாவின் ராணுவ பட்ஜெட் ஆன 4,76,378 கோடி இருக்கிறது.

இப்படி எந்த வகையில் பார்த்தாலும் ஒரு அரசாங்கத்தை விட மிக அதிகமாக ஆதிக்கம் செலுத்துகின்ற, சொத்து சம்பாதிக்கிற இந்த நிகழ்வு தற்செயலானதல்ல. இந்தப் பேரிடர் காலத்தில் மட்டும் நடந்தது அல்ல.

இதே ஆக்ஸ்பாம் அறிக்கை 2014ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள பெரு முதலாளிகளே மேலே இருக்கும் 10% (13 கோடி)பேரின் சொத்து கீழ்மட்டத்தில் உள்ள70%(91கோடி) பேரின் சொத்துக்கு சமம் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் இது 2019 ஆம் ஆண்டு இறுதியில் மேலே உள்ள ஒரு சதவீதம் பேரின் சொத்து கீழ்மட்டத்தில் உள்ள 70 சதவீதம் பேரின் சொத்தை போல நான்கு மடங்கிற்கும் அதிகம் என்று மதிப்பிட்டு இருக்கிறது. அதாவது மேலே உள்ளவர்களின் சொத்து 40 மடங்கு அதிகரித்திருக்க வேண்டும் ;அல்லது கீழே உள்ளவர்களின் சொத்து 40 மடங்கு குறைந்திருக்க வேண்டும்; அல்லது பத்து முப்பது என்றோ 20-20 என்றோ இந்த வகையில் மாறி இருக்க வேண்டும்.

பிரச்சனை என்னவென்றால் 2019 இறுதியில் இந்தியாவில் மேலே உள்ள ஒரு கோடியே 30 லட்சம் பேரின் சொத்து கீழே உள்ள 91கோடி பேரின் சொத்தைப் போல நான்கு மடங்குக்கும் அதிகம் .இந்த காலம் தான் பொருளாதாரம் வளர்ச்சியடையாத காலம். கிராமப்புற மக்களின் சேமிப்பு குறைந்த காலம் மக்களின் வாங்கும் சக்தி குறைந்த காலம். பல்வேறு தொழில்களும் நெருக்கடிகளை சந்தித்த காலம். ஆனால் பொருளாதார வளர்ச்சி குறைந்து இருக்கும் போதும் இந்திய பெருமுதலாளிகளின் சொத்து மட்டும் இப்படி தாறுமாறாக எப்படி உயர்கிறது ?

உதாரணத்திற்கு கடந்த நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்த ஒரு அறிவிப்பை பார்க்கலாம். கடந்த ஆண்டு வரை ஒரு நிறுவனம் தனது லாபத்தில் பங்குதாரர்களுக்கு வருவாய் பங்கீடு அதாவது டிவிடன்ட் கொடுக்கிறது என்றால் அந்தத் தொகையில் 15 சதவீதத்தை வரியாக சம்பந்தப்பட்ட நிறுவனம் தான் செலுத்திக் கொண்டிருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் இருந்து யார் டிவிடெண்ட் பெறுகிறார்களோ அவர்கள்தான் வரி செலுத்த வேண்டும். அதாவது இதுவரை அம்பானி கட்டிக்கொண்டிருந்த வரியை 5000 ரூபாய் 10,000 ரூபாய் கொடுத்து அம்பானி நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கக்கூடிய நடுத்தர உயர் நடுத்தர பிரிவினர் செலுத்த வேண்டும். மத்திய அரசுக்கு வருவாயில் குறைவு ஏற்படாது .ஆனால் அம்பானியின் கஜானாவிற்கு 15% கூடுதல் சொத்து போய் சேரும். சாதாரண பங்குதாரர்கள் அவர்கள் பையிலிருந்து 15 சதவீதத்தை அரசுக்கு செலுத்த வேண்டும். இது தனிப்பட்ட ஒரு நடவடிக்கை அல்ல இதுபோன்று கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி விதித்து மேல்மட்டத்தில் உள்ளவர்களின் வரியை குறைக்கும் செயலை இந்த அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

உதாரணமாக பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த இந்த காலத்தில்தான் பெருநிறுவன வரிகள் அதாவது கார்ப்பரேட் டாக்ஸ் 5% குறைக்கப்பட்டது. சொத்து வரி ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஏழை மக்கள் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களுக்கான வரிகள் தாறுமாறாக உயர்த்தப்பட்டதை நாமறிவோம். உதாரணத்திற்கு பெட்ரோல் டீசல் விலைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி மத்திய அரசின் கலால் வரி தான்.

கம்யூனிஸ்டுகள் இந்த அரசு பெரு முதலாளிகளுக்கான அரசு அந்நிய மூலதனத்திற்கு ஆதரவான அரசு என்று சொல்கிறபோது பலரும் அதை ஏற்க தயங்குகிறார்கள். இதை பொதுவான அரசாக அனைவருக்குமான அரசாக கருதுகிறார்கள். ஆனால் இந்த காலத்தில் நடந்த இந்த சொத்துக் குவிப்பு ஒன்றை நோக்கினாலே இந்த அரசு யாருக்கான அரசு என்பது புரிபடும்.

ஏழைகளிடம் ஒட்டச் சுரண்டி அம்பானி களுக்கும் அதானிகளுக்கும் ஒட்டுமொத்தமாய் கொண்டு சேர்க்கிற ஏற்பாட்டை நீதிமன்றங்கள் நிர்வாக அமைப்புகள் காவல்துறை தொழிலாளர் துறை என்ற அரசின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் பயன்படுத்தி செய்கிற வேலையைத்தான் இந்த அரசுகள் செய்துகொண்டிருக்கின்றன. சில நாடுகள் சூப்பர் ரிச் என்று சொல்லக்கூடிய மிகப் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே கூடுதல் வரி விதிப்பது என்கிற நடைமுறையை கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக அர்ஜென்டினா சமீபத்தில் கோடீஸ்வர வரி என்று ஒரு வரியை உச்சத்தில் இருக்கிற பணக்காரர்கள் 12,000 பேருக்கு மட்டுமே விதித்திருக்கிறது.இங்கிலாந்து கூட covid-19 காலத்தில் தான் செலவழித்த தொகையை கஜானாவுக்கு கொண்டுவருவதற்காக உச்சத்தில் இருக்கிற பணக்காரர்களிடம் ஒரு சதவீதம் கூடுதல் வரி விதிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறது.

சின்னஞ்சிறு நாடான பொலிவியா அனைவருக்குமான வரிகளையெல்லாம் ரத்து செய்துவிட்டு 1500 க்கும் குறைவான பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே வரி வசூலிப்பது என்று முடிவு எடுத்திருக்கிறது. இந்தியா ஏன் இப்படி ஒரு நிலைபாட்டை எடுக்கக்கூடாது ?

இதுதான் அடிப்படையான கேள்வி இதைத்தான் கம்யூனிஸ்டுகள் தொடர்ச்சியாக எழுப்பி வருகிறார்கள். ஒரு அம்பானி கடந்த ஆண்டில் ஒரு நொடி நேரத்தில் சம்பாதிக்கிற தொகையை பெறுவதற்கு இந்தியாவில் உள்ள முறைசாரா தொழிலாளி மூன்று ஆண்டுகள் உழைக்க வேண்டும் என்றால் இதை ஜனநாயக நாடு என்று கொண்டாட என்ன நியாயம் இருக்கிறது?

-Kanagaraj Karuppaiah

;