facebook-round

img

உன்னோடு நான் இருக்கிறேன் என்ற ஊக்கத்தைக் காட்டிலும் நம்பிக்கை பூக்க வேறென்ன வேண்டும்?

சிங்கூர், நந்திகிராமால் தான் தோல்வி என்றவுடன் தோழர் புத்ததேவ் மேல் இங்கிருக்கும் எனக்கே வெறுப்பு. தோல்வி மேல் தோல்வி என்றவுடன் தங்கம் செய்யாததை வங்கம் செய்யும் என்ற சொலவடையே மறந்து போனது. நான் யோசித்துப் பார்க்கிறேன், எனது பால்ய வயதில் கட்சி என்னை வங்கத்தைக் காட்டித் தானே வசீகரித்தது. பலருக்கும் இதே அனுபவம் தான். ஆனால் 34 ஆண்டுகள் கடந்த பின்னே ஒரு தோல்வி என்றதும் ஏறத்தாழ வங்கத்து கட்சியை கைகழுவி விட்டது போல பிராந்து. கண்ணீரும் கம்பலையுமாய் நமது தோழர்கள் அங்கே நாடோடிகளான போது உதவிக்கரம் நீட்டினோமா; எனக்கு நினைவில்லை. சீரழிந்து செங்கச் சுமக்க வேண்டியது அவர்கள் தான் நான் மறுக்கவில்லை. ஆனால்; லட்சக்கணக்கில் அகதியாகி நூற்றுக் கணக்கில் பலிகாகி பரிதவித்து நின்றபோது, இத்தனையாண்டு ஆட்சியிலிருந்து என்ன செய்தார்கள் என்ற ஏகடியப் பார்வை தான் பலரிடமும்; தோழா நாங்கள் இருக்கிறோம், என்ற ஆறுதல் நம்பிக்கையை ஊட்டும் ஓர் முன்னெடுப்பு இருந்திருக்க வேண்டும். இப்போது நான் யாரை குற்றம்சாட்டுகிறேன்... என்னைத்தான். கட்சி ஆவணங்களில் வங்கத்தை புனரமைக்க ஏராளமான ஆலோசனைகளைப் பார்த்தேன். அலையும் காற்றில் துழாவும் கைகளுக்கு இதுதானா நம் ஆறுதல்; மார்பறுத்து எரிந்த பின்னும் கட்சியை கைவிடமாட்டேன் என்று துடித்த அந்தப் பாமரப்பெண் புரூலியா மங்கை சந்தனா மோண்டல் நமது நெஞ்சை அறுத்துப் போகவில்லையோ என்றெல்லாம் நெடுநாள் யோசித்திருக்கிறேன். குறிப்பாக சந்தனா மோண்டலைச் சொல்லி வங்கத்தை கூராய்வு செய்த அந்த இடது திருப்பம் எளிதல்ல புத்தக வரிகள் சில நினைவிருக்கின்றன. இளைஞர்களை யுவதிகளை முன்னுக்கு அழைப்பதும், கட்சிக்கு ஓர் ஜீவனுள்ள கனவுகள் பூக்கும் கற்பனாவாதமும் தேவை என்றார் ஆய்வாளர் விஜய் பிரசாத். அநேகமாக வங்கத்தின் கட்சி அப்படியோர் கட்சிதமான லயத்திற்கு வந்திருப்பதாகவே இப்போது நினைக்கிறேன்.

ஆம்... இது வெறும் தேர்தல் உத்தி தான். என்றாலும் அதில் ஓர் துல்லியம் இருக்கிறது. 136 இடங்களில் 70% இந்தமுறை இளைஞர்களை நிறுத்தியிருக்கிறது கட்சி. நந்திகிராமில் 90 % பெண்களை வாக்குச்சாவடி முகவர்களாக்கி வெற்றிகரமாக மம்தாவை எதிர்கொள்கிறார் மீனாட்சி. நான் துவக்க வரிகளில் சொன்னது போன்ற தவறுக்கு இடம் கொடாமல் புத்ததேவை கொண்டாடுகிறார்கள் வங்கத்து சிபிஎம் இளைஞர்கள். ஈகோவை அறுத்தெறிந்து முகமது சலீம் போன்ற தலைவர்கள் மீனாட்சியை, தீப்சிதாவை, ஸ்ரீஜனை, சத்ரூப் கோஷை, பிரதிக்கூர் ரஹ்மானை இன்னும் இன்னும் ஏராளமானோரை முன்னே நடக்கவிட்டு அழகு பார்க்கிறார்கள். இதைத் தவிர இன்னும் ஏராளமான இயக்கத்து இளைஞர்களின் உரைகளைக் கேட்டால் அழகும் லயமும் எழுச்சியும் அலையடிக்கிறது. அப்படியா... நாமென்ன செய்வது என்கிறீரா... அவர்களது முகநூல்களில் போய் தமிழில் லால்சலாம் போட்டாலே அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். உன்னோடு நான் இருக்கிறேன் என்னும் ஊக்கத்தைக் காட்டிலும் நம்பிக்கை பூக்க வேறென்ன வேண்டும். விட்டதைப் பிடிப்பது; ஆழிந்துபோன இடத்தில் பூப்பது எளிதல்ல தான். ஆனாலும் இயலாதது அல்ல. மேற்கு வங்கத்து கட்சியின் நகர்வும் அந்த இளைஞர்களின் அசைவும் அவர்கள் வெகுசீக்கிரம் துள்ளி எழுவார்கள் என்பதையே துலக்கமாய் காட்டுகிறது. நாமும் பிரதேச வாதம் தவிர்த்து ஏரியா வாதத்தை வெறுத்து அவதானித்தால் நமக்கும் ஓர் பேரனுபவமும் பிறக்கும்; உத்வேகம் பூக்கும். கடினமான மொழியைப் பொறுத்தருள்வீர். வணக்கம்....

- சூர்யா, சென்னை. 

;