election2021

img

வட்டக்கிணறு... வத்தாத கிணறு... காணாம போச்சுய்யா, காணாம போச்சு.... எடப்பாடி பழனிசாமி என்ற விவசாயியின் நிலங்கள் காணாமல் போன கதை.....

தன்னை ஒரு ‘விவசாயி’என்று கூறிக் கொள்ளும் முதல்வர் பழனிசாமிக்கு சொந்தமாக விவசாய நிலமோ, வீட்டுமனையோ, வியாபார கட்டிடங்களோ எதுவும் இல்லை என்று கூறியிருப்பதோடு, பூர்வீக நிலம் ஏதுமில்லை என்றும் வேட்புமனுத் தாக்கலின் போது சமர்ப்பிக்கப்படும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு 15.65 ஏக்கர் பூர்வீக விவசாய நிலம் தனது பெயரில் இருப்பதாக தெரிவித்திருந்த எடப்பாடியார், தற்போது இந்த பூர்வீக சொத்து, குடும்ப சொத்தாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.தன் மனைவி பெயரில் சுமார் 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர், விவசாய நிலங்கள் மூலம் 2018 – 19ஆம் ஆண்டு மொத்தம் சுமார் 14.7 லட்சம் ரூபாய் விவசாய வருமானம் வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் முதல்வர் பழனிசாமி ரூ.15 லட்சம் கடனாளியாக இருப்பதாகவும் தேர்தல் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.அதுமட்டுமல்ல, தனது பெயரில் அசையும் சொத்து ரூ.47,64,542 , மனைவி ராதா பெயரில் 1,04,11,631,கூட்டு குடும்பத்தின் பெயரில் ரூ.50,21,096 என ஒட்டுமொத்தமாக அசையும் சொத்தின் மதிப்பு 3 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கிறதாம்.

மனைவியின் பெயரில் ரூ.1 கோடியே 78 லட்சம்,கூட்டுக் குடும்பத்தின் பெயரில் ரூ.2 கோடியே  90லட்சத்து 40 ஆயிரம் என  அசையா சொத்தின் ஒட்டுமொத்தமதிப்பு ரூ.4 கோடியே 68 லட்சத்து  40ஆயிரமாம். சொத்துக்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.6 கோடியே 70 லட்சத்து 37 ஆயிரம். இதில் அவரது மகன்,மருமகள் திவ்யா ஆகியோரது பெயரில் 2016 ஆம் ஆண்டு காட்டப்பட்ட கணக்கு இந்த முறை இடம் பெறவில்லை என்பது தனிக்கதை!

அதாவது முதலமைச்சராக இருந்த கடந்த 4ஆண்டு காலத்தில் பழனிச்சாமியின் சொத்து மதிப்பு ரூ.2 கோடி குறைந்துள்ளதாம். பாவம் பழனிச்சாமி!

கடந்த தேர்தலின்போது...
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி, தனது பிரமாண பத்திரத்தில் 2015-16 ஆம் ஆண்டிற்கான வருமானம் ரூ.3 லட்சத்து 17 ஆயிரத்து 900 எனவும் கூட்டுக்குடும்பத்தின் வணிக ரீதியிலான வருமானம் ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 399 என்றும்தெரிவித்திருக்கிறார்.

இதே காலத்தில், விவசாயம் மூலம் ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் வருமானம் கிடைத்தது என்றும்,  பாலாஜி மெட்டல்ஸ்’ பார்ட்னர்ஷிப் நிறுவனம் மூலம் வருமானம் கிடைத்துள்ளதாகவும் (எவ்வளவு? அவருக்கே தெரியாது) கூறியிருக்கிறார்.அதேபோல் மனைவிக்கு வணிக வருமானம் ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 736 என்றும் விவசாயம் மூலம் ரூ. 1 லட்சத்து 90 ஆயிரம் வருமானம் வந்துள்ளது எனவும் தெரிவித்திருக்கிறார்.மகனின் வணிக வருமானம் ரூ.6 லட்சத்து 70 ஆயிரத்து 156 எனவும் விவசாயம் மூலம் கிடைத்த வருமானம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தனது மருமகளுக்கு ரூ.46 லட்சத்து 25 ஆயிரத்து 993 வருமானம் கிடைத்துள்ளது என்றும் அன்றைக்கு உயிருடன் இருந்த தாயாருக்கு வருமானம் ஏதும் இல்லை அவர் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யவில்லை என்றும்அவர் வருமான வரி செலுத்துபவர் அல்ல என்றும் அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார்.

இவை அனைத்தும் அவர் அன்றைக்கு தெரிவித்த கணக்குகள். ஆனால் அதன்பிறகு அவரதுகுடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் வகைதொகையின்றி வாங்கிக் குவித்ததை படித்தால் மயக்கமே ஏற்படும்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பினாமிகளான பி.சுப்பிரமணியன்,   வெற்றிவேல் ஈஸ்வரமூர்த்தி, என்.ஆர். சூரியகாந்த் ஆகியோர் பெயரில் பினாமி பரிவர்த்தனை மூலம் விற்பனை பத்திரம் செய்த சொத்துக்களின் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய். இவை எந்த கணக்கிலும் வரவில்லை. 
முதலில், பி.சுப்பிரமணியம், வெற்றிவேல், ஈஸ்வரமூர்த்தி, சூரியகாந்த் ஆகியோர் யாரென்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தி பி.சுப்பிர மணியம். வெற்றிவேல் ஈஸ்வரமூர்த்தி எடப்பாடி பழனிசாமியின் சொந்த சகோதரி மகன். எடப்பாடியின் மகன் மிதுனின் சகலை என்.ஆர்.சூரியகாந்த். அதுமட்டுமல்ல இவர்கள் இருவரும்  “எஸ்பிஏசி ஸ்டார்ச் ப்ராடக்ட் இந்தியா லிமிடெட்” என்கிற நிறுவனத்தின் இயக்குநர்கள். இதற்கு முன்பு இவர்களுக்கு பெரிய அளவுக்கு சொத்து எதுவும் கிடையாது. எந்த வருமானமும் இல்லை என்பது நிதர்சனம். 

$ கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி தனது சம்பந்தி சுப்பிரமணியம் மூலம் 16 லட்சத்து 90 ரூபாய்க்கு பினாமி பெயரில் ஒரு சொத்து வாங்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை பத்திரம் பதிவு எண்: 3378. இதன் சந்தை மதிப்பு. ரூ. 13 லட்சத்து 77 ஆயிரம் ஆகும்.

$ 2015ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6ஆம்  தேதி ரூ.13 லட்சத்து 76 ஆயிரத்துக்கு வாங்கிய சொத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய் ஆகும். இதன் விற்பனை பத்திர பதிவு எண் 6378.

 மேற்கண்ட தேதியிலேயே விற்பனை பத்திரப் பதிவு எண் 6379 -ன்படி 36 லட்ச ரூபாய்க்கு சொத்து வாங்கப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு 30 கோடி ஆகும்.

$ அதனைத் தொடர்ந்து 2016 செப்டம்பர் 28 அன்று ரூபாய் 8.55 லட்சத்திற்கான சொத்தும் வாங்கியுள்ளனர். இதன் சந்தை மதிப்பு ரூ.7 கோடி. பத்திரப் பதிவு எண்: 9653. இதே தேதியில் 36 லட்சம் ரூபாய்க்கு மற்றொரு சொத்தும் வாங்கப்பட்டிருக்கிறது. அதன் பத்திரப் பதிவு எண் 9654.இதன் சந்தை மதிப்பு ரூ.30கோடி. அனைத்தும்  சுப்பிர மணியம் பெயரில் பினாமியாக வாங்கப்பட்டதாகும்.

சகோதரி மகன் மூலம்

$ 2018 ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி “எஸ்பிஏசி ஸ்டார்ச் ப்ராடக்ட் இந்தியா லிமிடெட்” நிறுவனத்தின் செயலாக்க அதிகாரியாக இருக்கும் வெற்றிவேல் ஈஸ்வரமூர்த்தி பெயரில் ரூபாய் 1 லட்சத்து32 ஆயிரத்துக்கு சொத்து  வாங்கப்பட்டிருக்கிறது. பத்திர பதிவு எண்: 2631. இதன் சந்தை மதிப்பு (ரூ.20 கோடியாகும்).

 மேற்கண்ட தேதியிலேயே விற்பனைப் பத்திரம் எண்: 2632-ல் வெற்றிவேல்  ஈஸ்வரமூர்த்தி பெயரில் 20 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய்க்கு சொத்து வாங்கப்பட்டிருக்கிறது. இதன் சந்தை மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும்.

$ 5.9.2018 தேதியில் 12 லட்சத்து 43 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாங்கிய சொத்தின் பத்திரப்பதிவு எண்: 2433. சந்தை மதிப்பு ரூ.40 கோடி.

$  70 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்க்கு மேற்கண்ட தேதியிலேயே ஒரு சொத்து வாங்கப்பட்டிருக்கிறது அதன்விற்பனைப் பத்திரம் எண்: 2432. சந்தை மதிப்பு ரூ.4 கோடி.

14.9.2018 என்று வாங்கிய சொத்தின் சொத்தின் மதிப்பு ரூ.2 லட்சத்து 56 ஆயிரம் பத்திரப்பதிவு எண்கள்: 2571. சந்தை மதிப்பு ரூ.10 லட்சம்.

$ 28.9.2018 தேதியன்று வாங்கப்பட்ட சொத்தின் மதிப்பு 18 லட்சத்து 72 ஆயிரம். ஆனால் இதன் சந்தை மதிப்பு ஒரு கோடியே 20 லட்சம். பத்திர பதிவு எண் : 2708.

1.10.2018 தேதியில் ரூ.50 லட்சத்து 95 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஒரு சொத்து வாங்கி இருக்கிறார்கள். பத்திரப்பதிவு எண்: 2717. இதன் சந்தை மதிப்பு 3 கோடியே 50 லட்சம்.

$ 23.8.2018 ஆம் தேதி ரூ.3 கோடியே 41 லட்சத்திற்கு சொத்து வாங்கி உள்ளனர். இதன் சந்தை மதிப்பு ரூ.20 கோடி ஆகும். விற்பனைப் பத்திர பதிவு எண் 2316.

20.12.2018 விற்பனைப் பத்திரப் பதிவு எண்: 3669-ன் படி 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு சொத்துவாங்கி இருக்கிறார்கள். இதன் சந்தை மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும்.

விற்பனைப் பத்திரம் எண்: 2572 படி 16.9.2018 தேதியில் 21 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு சொத்து வாங்கப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.2 கோடியே 50 லட்சம்.

$  2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி மூன்றுசொத்துக்கள் வாங்கியுள்ளனர். அதில் ஒன்று, ரூ.7 லட்சத்து 17 ஆயிரம் ஆகும். அதன் சந்தை மதிப்பு 80 லட்சம் ஆகும் விற்பனைப் பத்திரம் எண்:1096.

$  மற்றொரு சொத்தை 7 லட்சத்து 17ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். பத்திரப் பதிவு எண்: 1097. சந்தை மதிப்பு 80 லட்சம் ஆகும்.

$  7 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய சொத்தின்மதிப்பு 80 லட்சம் ஆகும். இதன் விற்பனை பத்திரப் பதிவு எண்:1098. 

மேற்கண்ட சொத்துக்கள் அனைத்தும் இந்நிறு வனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் வெற்றிவேல் ஈஸ்வரமூர்த்தி என்கிற பினாமி பெயரில் எடப்பாடி வாங்கிக் குவித்த சொத்துக்கள் ஆகும். 

எடப்பாடி பழனிச்சாமி தனது பினாமிகள் பெயரில் வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் பெரும்பகுதியை ஆர்.பி.பி கன்ஸ்ட்ரக்க்ஷன் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.பி.செல்வசுந்தரம் விற்பனை செய்திருக்கிறார். இவரும் எடப்பாடியின் பினாமிகளில் ஒருவர். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் காண்ட்ராக்ட் எடுத்துள்ள முக்கிய காண்ட்ராக்டர்களில் ஒருவரும்கூட.

விவசாய நிலங்களைவாங்கிக் குவித்தால்...

இந்த பினாமிகள் விவசாய நிலங்களை குறிவைத்து விலைக்கு வாங்கி சந்தை மதிப்பைவிட குறைவான மதிப்பிற்கு பத்திரப் பதிவு செய்துள்ளார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமலேயே இந்த விவசாய நிலங்கள் வணிகரீதியான பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இன்றி இவர்களின் நிறுவனங்களில் இருந்து வெளியாகும் கழிவு நீர் கிராமங்களுக்குள் விடப்படுகின்றன. இது தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளுக்கு முரணானதும் மீறலுமாகும்.வட்டக்கிணறு... வத்தாத கிணறு...

இத்தகைய மொத்த சொத்துக்களும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமானது என்று தமிழக ஆளுநரிடம் புகார் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சொன்னபடி, “இந்த சொத்துக் குவிப்பு அனைத்தும்கடலில் மூழ்கியுள்ள பனிப்பாறையின் நுனி மட்டுமே”.விரிவாக விசாரணை செய்தால் மட்டுமே நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோதும், முதலமைச்சராக இருந்தபோதும் வாங்கி குவித்துள்ள சொத்துக்களின் முழுவிபரம் தெரியவரும்.கடந்த 2011-16 ஆம் ஆண்டுகளில் இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சொத்து மதிப்பு 116 விழுக்காடு உயர்ந்திருக்கிறது என்றுஜனநாயக சீரமைப்பு சங்கம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இது தெள்ளத் தெளிவாக படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் பெயரில் ஒரு சென்ட் நிலம் கூட இல்லை என்று கூட அவரால் கணக்கு காட்ட முடிந்திருக்கிறது. திரைப்படத்தில் வரும் வடிவேலுவின் ‘‘அய்யா எங்கிணத்த காணோம்’’ என்ற கதைதான் இது.

கட்டுரையாளர் :  சி. ஸ்ரீராமுலு