election2021

img

377 ரூபாய்க்கு வருமான வரி சோதனை... சி.மகேந்திரன் சிறப்பு நேர்காணல்...

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்து பிரச்சாரமும் ஓய்ந்து விட்டது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி முகத்தில் உலா வந்துகொண்டிருக்க, ஆளும் கட்சியும் அதன்கூட்டணி கட்சியான பாஜகவும் வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை அதிகாரிகளின் துணைகொண்டு கன கச்சிதமாக விநியோகம் செய்த வருகின்றன. இதுகுறித்து எதிர்க் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் பறந்தும் கண்டும் காணாமல் இருக்கிறது ஆணையம்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்  டி.ராமச்சந்திரனுக்கு தொகுதிபொறுப்பாளராக அக்கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலாளர் மூத்த தோழர் சி.மகேந்திரன் செயல்பட்டு வருகிறார். அவர் தங்கியிருந்த அறையை துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரோடு வந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.இதுகுறித்து தீக்கதிர் சார்பில் சி.மகேந்திரனை தொடர்பு கொண்டோம். அப்போது அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டது வருமாறு:

அன்றைக்கு (ஏப்.3) நள்ளிரவு சரியாக 1 மணி. தேர்தல் பணிக்காக தேன்கனிக்கோட்டை ‘சிட்டி’ வாடகை விடுதியில், ஒரு நபர் தங்கிக் கொள்ளும் அறையில் இருந்தேன். கதவு தட்டப்பட்டது.  திறந்து பார்த்தேன். வாசலில் நவீன துப்பாக்கி ஏந்திய மூன்று ராணுவ வீரர்கள். ஐந்து பேர் கொண்ட வருமான வரி அதிரடி குழு.“என்ன வேண்டும்‘ என்று கேட்டேன். “சோதனை” என்றார்கள். “செய்து கொள்ளுங்கள்” என்றேன். அறையில் சோதனை செய்து கொண்டே இருந்தார்கள். எனக்கு சிரிப்பு வந்து விட்டது. வருமான வரித்துறை அதிகாரி பீகாரைச் சேர்ந்தவர். அவரும் அவரது குழுவினரும் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். என்னிடம் இருந்த பணத்தை அப்படியே அவர்களிடம் கொடுத்தேன் வாங்கவில்லை.

அவர்கள் சென்ற உடன் என்னிடமிருந்த பணத்தை எண்ணிக் கணக்குப் பார்த்தேன். மொத்தம் 377 ரூபாய் இருந்தது. பாஜக-வால் இந்த தொகுதியில் வெற்றி பெற முடியாது என்பதால் கலவரங்களை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் திமுக கூட்டணியை திசை திருப்ப ரெய்டுகளும் நடத்துகிறார்கள்” என்றார்.

உங்கள் அறையில் இந்த சோதனை எதற்கு?
ஏப்ரல் 3 ஆம் தேதி மாலை தான், கர்நாடக மாநிலத்தின் பாரதிய ஜனதா அமைச்சர்கள் மூலம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முயற்சிகள் தளி தொகுதியில் நடைபெறுகிறது என்று பத்திரிகை யாளர் சந்திப்பில் சொன்னேன். அன்று இரவே என் அறையில் சோதனை நடக்கிறது என்றால் இதைப் பார்த்து, எனக்குள் சிரித்துக் கொள்வதைத்தவிர நான் வேறு என்ன முடியும்? 

எதற்காக இந்த சோதனை நாடகம்?
பாஜகவை பொறுத்தமட்டில் தமிழகத்தில் ஒருபோதும் வெற்றிபெறவே முடியாது. அதற்கு காரணம் பல இருந்தாலும் ‘நோட்டா’வை விட மிக குறைந்த அளவுதான் வாக்கு வாங்கியிருக்கிறது அந்த கட்சி. இதுமட்டுமல்ல, பாஜகவின் கலாச்சாரம் அந்நிய மயமானது. அது தமிழ்நாட்டிற்கு எந்த வகையிலும் உதவாத அரசியல், தமிழர்களின் பண்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது. ஆனால்,இதையெல்லாம் அதிரடியாக மாற்றி அந்நியகலாச்சாரத்தை தமிழக மக்கள் மீது திணிக்கமுயற்சிப்பதாகும். இதற்கெல்லாம் இடைக்கால மாக கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்புதான் ஜெயலலிதாவின் மரணம். அதிமுகவை இரண்டாகஉடைத்து பல குழுக்களாக பிரித்து விளையாடினர். இந்த அரசியலை வைத்து தமிழ்நாட்டில் வளர்ந்துவிடலாம் என்பதுதான் பாஜகவின் திட்டம். அதற்குஒரு வாய்ப்பாகதான் இந்த சட்டமன்றத் தேர்தலை ஒரு களமாக பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த காலங்களில் நோட்டாவுக்கும் மிக குறைவான வாக்குகளை பெற்ற பாஜக அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் அதன் அணுகுமுறை வித்தியாசமாகத் தெரிகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், காரைக்குடியில் எச்.ராஜா போட்டியிடுகிறார் என்றால் அங்கு ஒரு அணுகுமுறை. குமரியில் இன்னொரு விதமான அணுகுமுறை. அண்ணாமலை போன்ற ஐபிஎஸ் பிரபலங்கள் என்றால் மற்றொரு வித்தியாசமான அணுகுமுறையை கையாளுகிறார்கள். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எடுத்திருக்கும் அணுகுமுறை என்பது முற்றிலும் வேறுவித மாகவே இருக்கிறது. இது என்ன என்று கேட்டால்,ஓசூர், வேப்பனஹள்ளி, தளி இவை மூன்று தொகுதிகளும் மாநில எல்லையில் கர்நாடகாவை ஒட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் பெரும்பான்மை என்று சொல்லும் தமிழ் மொழி பேசும் மக்கள் எல்லாம் இந்த மூன்று தொகுதிகளிலும் சிறுபான்மை. கன்னட மொழி, உருது, தெலுங்கு மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.இந்த மூன்று தொகுதிகளையும் ஒரு சூழ்ச்சியால் கைப்பற்றுவதற்கு பாஜக முயற்சி செய்து வருகிறது. இதற்கான முழு பொறுப்பும் கர்நாடகமாநில எடியூரப்பா தலைமையிலான பாஜகஅரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தை சார்ந்த ஆர்எஸ்எஸ், பாஜகவின் சங்கிகள் கூட்டத்தை களத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.பாஜக போட்டியிடும் தளி தொகுதியில் கடந்த மாதம் 31 ஆம் தேதி மிகப் பெரிய அளவில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டம்அந்த தொகுதியின் மையப் பகுதியான கெலமங்கலத்தில் நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவழைக்கப்பட்டார். பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறி வைத்திருக்கும் மூன்று தொகுதிகளுக்கும் கர்நாடக மாநிலஅமைச்சர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ள னர். மாநில எல்லையில் இருந்துகொண்டு பணத்தை வாரி இறைத்து வருகிறார்கள். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி முறையிட்டோம். பிறகு, பாஜக அமைச்சர்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் எப்படி கொடுக்கப்படுகிறது என்பதையும் இதில் யார் யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு புகார் கொடுத்தும். கடைசியாக செய்தியாளர்களை சந்தித்தும் விரிவாக எடுத்துரைத்தோம்” என்றார்.

புகார் கொடுத்தவர் மீதே வருமான வரி சோதனை என்ற பெயரில் துன்புறுத்தும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.தன்னாட்சியாக செயல்பட்டு வந்த நீதி, நிர்வாகம், அமலாக்கம், வருமான வரி, தேர்தல்ஆணையம் என்று அனைத்துத் துறைகளையும் தங்களது கைப் பாவைகளாக பாஜக மாற்றியிருப்பது ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் அதிகாரம் படைத்தவர்களான மக்களின் தீர்ப்பு ஏப்ரல் 6 ஆம் தேதி!

சி.ஸ்ரீராமுலு