சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஸ்டான்லி மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரசேகர் அங்கு பயிலும்முதுநிலை மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளார். இதுகுறித்து புகார் அளித்த பிறகும் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது எந்தநடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிகள் போராட்டம் நடத்த முனைந்த பின்னரே, விசாரணைக்குழு அமைக்கப்பட்டு பாலியல் புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வளவுக்கும் பிறகும், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதற்கு மாறாக, பணியிட மாறுதல் மட்டும் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் இத்தகைய அணுகுமுறை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தொடர்ந்து உயர் அதிகாரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவர்கள் மீது உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு மாறாக, சம்பிரதாயப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதின் மூலம் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பாதுகாக்கும்அணுகுமுறையினையே தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஒருவர் மீது பாலியல் புகார் வந்த பிறகு, குறிப்பாக விசாரணைக்கமிட்டியில் புகார் நிரூபணமான பிறகும் பணியிட மாற்றம் செய்வது மட்டும் என்பது கண்டனத்திற்குரிய நடவடிக்கையாகும். எனவே, பாலியல் குற்றம்சாட்டப்பட்ட உதவி பேராசிரியர் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டுமெனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.மேலும், கல்வி நிலையங்கள் உள்ளிட்டு பெண்கள் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட, பாலியல் புகார் கமிட்டிகள் செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.