election2021

img

இதுதான் எங்கள் கட்சி... (கேரளா சட்டமன்ற தேர்தல் - சிறப்பு தொகுப்பு)

அனுபவம், இளமை, எளிமை, நேர்மை

கேரள  சட்டசபை  தேர்தலுக்கு  இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சி  83 வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. இதில் ஏற்கனவே  சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள 33 பேர்  மீண்டும்  போட்டியிடவில்லை. இது வாய்ப்பு  மறுக்கப்பட்ட கதையல்ல. மார்க்சிஸ்ட் கட்சியில் இருக்கும்  நடைமுறை. தொடர்ந்து இருமுறை சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு பதிலாக வேறொருவரை களமிறக்குவது. அரசியல் சூழல், பிரத்யேக தேவை அடிப்படையில் வெகு சிலருக்கு விதி விலக்கு உண்டு. 

அப்படி மீண்டும் போட்டியிடாதவர்களில் டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக், பி.ஜெயராஜன்,  சி.ஆர்.ரவீந்திரநாத், சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் போன்ற கட்சியின் முன்னணி  தலைவர்கள் உண்டு. அவர்களுக்கு  இது எல்லாம்  பெரிய விஷயம்  இல்லை. எப்போதும்  போல்  கட்சியின்  பணிகளில்  ஈடுபடுவார்கள். இப்போது  அறிவிக்கப்பட்ட  வேட்பாளர்களில் தோழர்கள்  பினராயி விஜயன்,  கே.கே.சைலஜா டீச்சர், எம்.எம்.மணி, மெர்சி குட்டியம்மா போன்ற அனுபவமானவர்களும், 28 வயதே ஆன இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் சச்சின் உள்ளிட்ட மாணவர், வாலிபர் சங்க நிர்வாகிகள்  என பெரும்  இளமைப் பட்டாளமும் உண்டு. 

கட்டிட வேலை செய்த எம்.எஸ்.அருண்  குமாரும் உண்டு; கட்டிட வடிவமைப்பை  செய்யும்  பொறியாளரும் உண்டு. வக்கீல்கள், டாக்டர்கள், முதுநிலைப் பட்டதாரிகள், பேராசிரியர்களும் பட்டியலில்  உள்ளனர். 12 பெண்கள்  உட்பட.
கட்சியின்  வேட்பாளர்களாக இவர்களைத்  தேர்ந்தெடுக்க எந்த  விருப்ப  மனுவும் இல்லை. கோடிக்கணக்கான சொத்துக்களும்தேவை இல்லை. ஒரே தகுதி, அவர்கள் தன் நலம் கருதாத  மக்கள் ஊழியர்கள். அது ஒன்றுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கான அடிப்படைத் தகுதி.

                                            *************

நீதிமன்றத்தில் தான் தெரிந்துகொண்டார்கள்

கேரள இடதுஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியலை புதனன்று வெளியிட்ட போது...அதில் நான்கு வேட்பாளர்கள், தாங்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியை நீதிமன்றத்தில் வைத்துத் தான் அறிந்தார்கள்.... அந்நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது...

கடந்த ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றதற்காக அன்றைய மாணவர் சங்க நிர்வாகிகளான ஜெய்க்.சி.தாமஸ், விஜின்  மற்றும் எம்.எஸ்.அருண் குமார் ஆகியோர் உள்ளிட்ட ஏராளமானோர் மீது அன்றைய உம்மன்சாண்டி தலைமையிலான அரசு வழக்கு தொடுத்திருந்தது.அந்த வழக்கு காயங்குளம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை புதன்கிழமை நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த போது தான், இடது ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அதில் தாங்கள், அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களாக மாநிலத் தலைமையால் அறிவிக்கப்பட்ட செய்தியை அறிந்தார்கள்.  
அதில் ஒருவர், தற்போதைய காயங்குளம் சிபிஎம்  சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான யு.பிரதீபா. மற்றவர்கள் ஜெய்க் .சி.தாமஸ், விஜின்  மற்றும் எம்.எஸ்.அருண் குமார் ஆகியோர்.

பிரதீபா இரண்டாவது முறையாக காயங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். ஜெய்க்.சி.தாமஸ் புதுப்பள்ளி தொகுதியில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியை எதிர்த்து இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். கடந்த 2016 இல் நடந்த தேர்தலில் உம்மன்சாண்டிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். விஜின் கல்லியாசேரி தொகுதியில் முதல் முறையாகவும், அருண் குமார் மாவேலிக்கரை தொகுதியில் முதல் முறையாகவும் போட்டியிடுகிறார்கள்.  வேட்பாளர்களாக அறிவிக்கப்படும் நேரத்திலும்... மாணவர்களின் உரிமைக்கான போராட்டத்தைத் தலைமை தாங்கியதற்காக அதிகார வர்க்கத்தால் தொடுக்கப்பட்ட வழக்கை எதிர்கொள்ள நீதிமன்றத்தில் சட்டப்போரட்டம் நடத்தும் பணியில்  நான்கு வேட்பாளர்களை ஒருங்கே பார்க்க முடிந்ததை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

                                            *************

அன்று கட்டுமானத் தொழிலாளி... இன்று சட்டமன்றம் நோக்கி...

கட்டுமானப் பணியில் சிற்றாளாக வேலை செய்து சிறுவயதையும் மாணவப் பருவத்தையும் கடந்த ஒரு இளைஞனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவில் உள்ள, மாவேலிக்கரை சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள....கட்டுமானப் பணிகளில் சித்தாள் வேலை செய்து தனது குடும்பத்தையும் படிப்பையும் கவனித்து வந்த... அந்த நம்பிக்கை ஒளிரும் சாம்பல் நிறக் கண்கள் கொண்ட இளைஞனை ஒட்டுமொத்த கேரளமுமே ஆச்சரியத்துடன் உற்று நோக்குகிறது.

எட்டாவது வகுப்பில் படிக்கும்போது குடும்பத்தின் முதுகெலும்பாக விளங்கிய தந்தையின் மரணத்திற்குப் பின் அவரது குடும்பம்  துன்பக் கடலில் மூழ்கிய போது... தனது இரு குழந்தைகளையும் கரை சேர்ப்பதற்காக அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து அவரது தாயார் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வாழ்க்கையுடன் கடும் போராட்டத்தில் இறங்குகிறார்.படிக்கும் போதே அந்த சிறுவன் விடுமுறை நாட்களிலும், அதோடு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சித்தாள் வேலை, வயல்களுக்கு சாணி உரம் சுமத்தல், மயானங்களில் உடல்களை அடக்கம் செய்வதற்கான குழி வெட்டுதல், மீன் பிடித்தல், கட்டிட வார்க்கை, மரம் வெட்டுதல், பிளம்பிங், வீடுகளுக்கு செய்தித்தாள் போடுதல் போன்ற பல்வேறு பணிகளுக்குச் சென்று வாழ்க்கையின் துன்பங்களுக்கும் வறுமைக்கும் எதிரான வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தில் தன்னால் செய்ய முடிகின்ற எல்லா வேலைகளையும் செய்ய  முயன்று தனது இளமைக் காலத்தை வறுமைக்கு எதிராக போராட்டக் களத்தில் செலவழித்த ஒரு போராளி...

எம்.எஸ். அருண் குமார் என்ற இளம் தோழர் தான் அந்த இளைஞர்....வாழ்க்கைப் பிரச்சனைகள் இவ்வளவு வாட்டி எடுத்த வேளையிலும் தனது படிப்பில், அந்த இளைஞன் எந்தவிதமான குறையும் வைக்கவில்லை...

மாவேலிக்கரை பிஷப் மூர் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் படிக்கும் போது இந்திய மாணவர் சங்கத்தின் கிளை நிர்வாகி...

அதே கல்லூரியில் மாணவர் பேரவையின் தலைவர்...இந்திய மாணவர் சங்கத்தின் பகுதி நிர்வாகி... பின்னர் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்...

வாலிபர் சங்க மாவேலிக்கரை வட்டாரச் செயலாளர், மாவட்டப் பொருளாளர்... சிபிஎம் தழக்கரை பிரதேசச் செயலாளர்... மாவேலிக்கரை பகுதிக் குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளில் இந்த இளம் வயதிலேயே திறமையுடன் செயல்பட்டு இயக்கத்தை வலுவாகக் கட்டுவதில் வெற்றி கண்டார்.

தற்போது வாலிபர் சங்க கேரள மாநிலக் குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட  இளைஞர் நல வாரிய ஒருங்கிணைப்பாளர்  போன்ற பொறுப்புகளில் செயல்பட்டு வருகிறார்.

ஏராளமான போராட்டங்களில் பங்கேற்று காவல்துறையின் கொடூரத் தாக்குதலுக்கு  உள்ளானவர்.இளம் வயதிலேயே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்தையும்  பசியாலும் வறுமையாலும் கடந்து வந்த இத்தகைய போராளிகளே கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் சொத்து.

வறுமை, துன்பம், பட்டினி போன்ற இன்னல்களிலும் போராட்டம் என்னும் உலைக்களத்தில் புடம் போட்டு உறுதியாக தன்னைக் கட்டமைத்து ஒரு தலைவராக பரிணமித்து நிற்கும் இளம் போராளியான தோழர். அருண் குமார் போன்றவர்களால் கம்யூனிஸ்ட் கட்சி போர்க்குணத்துடன் மேலும் மேலும் முன்னேறும்.