தருமபுரி, ஏப்.20- தரும்புரி மக்களவைத் தொகுதியில் 10 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்றுகோரி தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் சு.மலர்விழியிடம் திமுக வேட்பாளர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் கோரிக்கை மனு அளித்தார்.பின்னர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி பேரவைத் தொகுதியைச் சேர்ந்த நத்தமேடு கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடி எண்: 192, 193, 194 மற்றும் 195, கேத்திரெட்டிப்பட்டி வாக்குச் சாவடி எண்: 186, 187, ஜாலியூர் வாக்குச் சாவடி எண்: 196,197 மற்றும் அய்யம்பட்டி வாக்குச் சாவடி எண்: 181, 182 ஆகிய 10 வாக்குச் சாவடிகளை குறிப்பிட்ட கட்சியினர் கைப்பற்றி, பிற சமுதாயத்தினருக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்காமல் அவர்களே வாக்களித்துள்ளனர். இந்த வாக்குச் சாவடிகளில் கடந்த காலங்களிலும் இதுபோல நடந்துள்ளது.இதுகுறித்து முன்கூட்டியே மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம். முன்னெச்சரிக்கையாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், இதுபோல நிகழ்ந்திருக்காது.எனவே, ஜனநாயகத்தில் அனைத்து சமுதாயத்தினரும் வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்டி, அந்த வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும். இது தொடர்பாக திமுக தலைமை வழிகாட்டுதல் பேரில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.